திணிப்பை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

நடிகை கீர்த்தி சுரேஷ்

சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்தப் படம் வெளியாக இருக்கிறது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘ரகு தாதா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் பிரம்மாண்டாக நடைபெற்றது.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்: நீண்ட நாள்களாக எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் ஆல்பம் ‘ரகு தாத்தா’. அனைவரும் இப்படத்தின் பாடல்களை கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஷான் குறிப்பிட்டது போல் இந்தப் படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஜானரில் இருக்கும்.

இது போன்றதொரு ஆல்பத்தை வழங்கியதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அருகே வா..’ என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட்.

ஒளிப்பதிவாளர் யாமினியுடன் ஏற்கனவே ‘சாணி காயிதம்’ எனும் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அது வேறு ஜானர். இந்தப் படத்தில் வண்ணமயமாக அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார். அவருடைய பணி நேர்த்தியாக இருந்தது.‌ அதிலும் பெண் ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த எம்.எஸ். பாஸ்கர் – படப்பிடிப்பு தளத்தில் என்னை ‘பொம்மை பொம்மை..’ என்று தான் அழைப்பார்.‌ படத்தில் வசனம் பேசும்போது அவருடைய டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும். படத்தில் தாத்தா – பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது.

ரகு தாத்தா – ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் பெண்கள் மீதான திணிப்பைப் பேசுகிறது.‌ எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஆனால் அது பிரச்சாரமாக இருக்காது. இது படத்தைப் பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும்.

பொதுவாகவே திணிப்பைப் பற்றி பேசியிருக்கிறோம். அதில் கதையைத் தொடர்புப் படுத்தும் வகையில் இந்தியை ஒரு உதாரணமாக சொல்லி இருக்கிறோம்.

இந்தப் படம் எந்த ஒரு அரசியலையோ எதிர்மறையான விசயங்களையோ சொல்லவில்லை. இது ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். படத்தைப் பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தருபவர்கள் படத்தைப் பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பலாம்.” என்றார்.

Comments (0)
Add Comment