‘பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ், பான் இந்தியா நட்சத்திரமாக மாறினார். ‘பாகுபலி’ படத்திற்கு பின்னர் அவர் நடித்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புரூஷ் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படமான ‘கல்கி 2898 ஏ.டி’ திரையரங்குகளில் கடந்த வியாழக்கிழமை வெளியானது.
பிரபாசுடன் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து ஒரு புதுக்கதையை, நாக் அஸ்வின் ஹாலிவுட் ஸ்டைலில் சொல்லி இருந்தார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் 600 கோடி ரூபாய் செலவில் உருவானது. தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘கல்கி’ திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததால், இந்தப்படம், உலகம் முழுவதும் முதல் நாளில் 169 கோடி ரூபாய் வசூலித்தது. இந்தியாவில் மட்டும் வசூல் 95 கோடி ரூபாய்.
ஆனால் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை வசூல் கணிசமாக குறைந்து விட்டது. 2 ஆம் நாளில் ‘கல்கி’ திரைப்படம், இந்தியாவில் 52 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.
தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ‘கல்கி’ முதல் நாளில் 65 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் நாளில் 25 கோடி மட்டும் வசூலித்துள்ளது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கமல் விளக்கம்
இதனிடையே, ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் பார்த்து ரசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்கி படத்தின் முதல் பாகத்தில் நான் சில நிமிடங்கள் தான் வருகிறேன் – எனக்கு 2-ம் பாகத்தில் தான் வேலை. கிட்டத்தட்ட ரசிகர்கள் பார்ப்பது போலவே தான் நானும் இந்தப் படத்தை வியந்து பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.