தமிழகத்தில் முன்பெல்லாம் சினிமா விழாக்களுக்கு அரசாங்கம் தாராளமாக அனுமதி வழங்கியது.
பண்டிகைக் காலங்களில் வெளியாகும் பெரிய நடிகர்களின் சினிமாக்கள் அதிகாலை 2 மணிக்கே சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட வரலாறும் தமிழ்நாட்டில் உண்டு.
அண்மையில் சினிமா தொடர்பான 3 நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட குளறுபடிகள், அதனால் உண்டான இழப்புகளால், சினிமா விழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த பொங்கல் தினத்தன்று விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.
பல ஊர்களில் ஒரே தியேட்டரில் இரு படங்களும் திரையிடப்பட்டன.
சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிறப்புக் காட்சியின்போது இரு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன.
தன்னை அஜித்தின் முரட்டு பக்தனாக காட்டிக்கொள்ள முயன்று, லாரியை மறித்து அதன் ‘டாப்’பில் ஏறி ஆட்டம் போட்ட வாலிபர், லாரி சக்கரத்தில் அடிபட்டு செத்தே போனார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அதன் ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடி, அந்த நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தை போர்க்களம் ஆக்கியது.
பெண்கள், பாலியல் சீண்டல்களுக்கு ஆளானார்கள். பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள், அடித்து விரட்டப்பட்டார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினே, நெரிசலில் மாட்டிக்கொள்ள நேர்ந்தது.
மூன்றாவது நிகழ்வு, சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடந்த ‘லியோ’ டிரைலர் வெளியீடு.
உற்சாக மிகுதியில் ரசிகர்கள், தியேட்டரின் நூற்றுக்கணக்கான இருக்கைகளை உடைத்து, நொறுக்கி சுக்கு நூறாக்கி விட்டுக் கலைந்தனர்.
உயிரிழப்பு, பொருள் இழப்பு உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக லியோ படத்தின் அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு அதன் தயாரிப்பாளர்கள், தமிழக அரசிடம் அனுமதி கேட்டனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா – ராகவா லாரன்ஸ் நடித்துள்ள, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் நாளை (நவம்பர் – 10) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் சிறப்புக் காட்சிகளை 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டது.
10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 6 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) திரையிட அரசு அனுமதி அளிக்கிறது.
சிறப்பு காட்சியை நாள்தோறும் காலை 9 மணி அளவில் தொடங்க வேண்டும். இறுதிக் காட்சியை 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட வேண்டும் எனவும் அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கும் இதே நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதது, அவர்களின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
– பாப்பாங்குளம் பாரதி.