செல்ல அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ படம், வெளியான 15 நாள்களில் 55 கோடியைத் தாண்டி வசூலித்தது.
‘50 கோடி வசூலைத் தாண்டிய எனது முதல் படம்’ என்று விஷ்ணு விஷாலே இதைத் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
முதலில் 350 திரையரங்குகளில் வெளியான படம், பின்னர் 700 திரையரங்குகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
படத்தின் அபார வசூல் காரணமாக, நாயகன் விஷ்ணுவிஷாலுக்கு ‘பி.எம்.டபிள்யூ’ காரைப் பரிசளித்தார், படத்தின் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கே.கணேஷ்.
கடந்த 6 வாரங்களில் வெளியான படங்களில் பலவும் வெற்றிப் படங்களாக மாறினாலும் ‘கட்டா குஸ்தி 2’, 50 நாள்களைக் கடந்து பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படக்குழு தற்போது இதனைப் பெரிய விழாவாகக் கொண்டாடியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நடிகரும் இயக்குநரும் நடன இயக்குநருமான பிரபுதேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.