இந்த வாழ்க்கை ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

நடிகர் காளி வெங்கட்

சினிமாவில் ஹீரோ, ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் என்றாலும் குணசித்திர நடிகர்களின் பங்கு தவிர்க்க முடியாதது.

பல கதைகளில் தூணாக இருப்பது அவர்கள்தான். கதாபாத்திரங்களாகவே வாழ வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது.

தமிழில் கவனிக்கப்படும் குணசித்திர நடிகர்களில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் காளி வெங்கட். காமெடியனாக அறிமுகமாகி, குணசித்திர நடிகராக உயர்ந்திருக்கும் காளி வெங்கட், இன்னும் மண்மணம் மாறாத தெற்கத்தி மனிதர்!

அவருடைய நேர்காணலில் இருந்து ஒரு பகுதி…

“சினிமாவுல இப்படியாகணும் அப்படியாகணும்னு எந்த லட்சியமும் எனக்கு இருந்ததில்லை. நடிக்கணுங்கற ஒரே ஆசை மட்டும் இருந்துச்சு.

நான் முதல் முதலா நடிச்ச படம் ‘தசையினை தீச்சுடினும்’. அந்தப் படம் வெளிவரலைன்னாலும் அதன் இயக்குநர் விஜய பிரபாகரன் தான் என்னை நடிகனாக மாற்றினார். இன்னைக்கு நான் இப்படி இருக்கேன்னா, அதுக்கு அவர்தான்காரணம்.

என்னை முழுமையா அடையாளம் காட்டின படம் ‘முண்டாசுப் பட்டி’ அதுதான் சினிமாவுல எனக்கும் கதவை திறந்துவிட்டது.

பிறகு ‘இறுதிச்சுற்று’. இந்தப் படம் இப்படியும் இவரால நடிக்க முடியும்ங்கறதை வெளிக்காட்டுச்சு. 

வெங்கடேசன் எப்படி காளி வெங்கட் ஆனார்?

‘தசையினைத் தீச்சுடினும்’ படத்துல என் கேரக்டர் பெயர் ‘காளி’. சமூக வலைதளங்கள்ல ஐடி கிரியேட் பண்ணும்போது வெங்கட்-ங்கற பெயர் நிறைய இருந்தது.

பிறகு என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். வெங்கட் கூட காளியை சேர்த்து ஐடி கிரியேட் பண்ணினேன். படங்கள்லயும் காளி வெங்கட்டுன்னே போட ஆரம்பிச்சாங்க. திட்டமிட்டு எதுவும் பண்ணலை. அதுவாகவே அமைஞ்சது.

கதையின் நாயகனா நடிச்சதை  அடுத்த கட்டம்னு சொல்லலாமா?

இல்ல. எதையும் அடுத்தக் கட்டமாகவோ, இதுல இருந்து அதுக்கு தாண்டிப் போகணும்னோ, நினைச்சது இல்லை. அப்படி எந்த வரையறையும் வச்சுக்கிறது இல்லை. கதையின் நாயகனா நடிக்க கதைகள் வரும்போது, அது சரியா வருமான்னு யோசிச்சுதான் பண்றேன்.

வர்ற எல்லாத்தையும் ஏத்துக்கறதும் இல்லை. சில நேரம், அப்ப இருக்கிற ‘இஎம்ஐ’ அழுத்தத்தை பொறுத்தும் இந்த முடிவு மாறும். அதனால சின்ன கேரக்டர், பெரிய கேரக்டர், கதையின் நாயகன் அப்படிங்கற எந்த அளவுகோலும் வச்சுக்கிறதில்லை.

உங்க வாழ்க்கையை, இப்ப திரும்பிப் பார்த்தா எப்படி இருக்கு?

ரொம்ப சர்ப்பிரைசா இருக்கு. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சா, வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்? அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாத இந்த வாழ்க்கையில இப்ப நான் இருக்கிற இடமே எனக்கு பெருசுதான். இப்ப கிடைச்சிருக்கிற இந்த சினிமா வாழ்வே, என் லட்சியத்தை மீறுனதுதான்.

முதல்லயே சொன்ன மாதிரி, பெரிய திட்டம் போட்டுலாம் நான் சினிமாவுக்கு வரலை. முயற்சி பண்ணினேன். நாலஞ்சு படம் பளிச்சுனு தெரியற மாதிரி நடிச்சா கூட போதும்னு நினைச்சுதான் வந்தேன்.

வாழ்க்கையை அதன் போக்குல அனுபவிச்சுட்டு இருக்கேன். நான் ஆசைப்பட்ட இந்தப் பயணம் சுகமாகவே இருக்கு.

-செ.ஏக்நாத்ராஜ்.

நன்றி: இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment