உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் இந்தியன் 2. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக “இந்தியன் 2” டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.
இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சித்தார்த்: ’21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு, என் ஆசான் கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார்.
ஒரு புதுமுகமாக என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை விட, இந்தப் படத்தில் நீங்கள் கொடுத்த பொறுப்பை மிக எளிதாக விட்டு விடமாட்டேன். அதற்கான உழைப்பை தந்துள்ளேன் என நம்புகிறேன்.
கடந்த 20 வருடங்களில் நான் நடித்த பாத்திரங்களில் என்னுடைய பர்சனல் முகம், இந்தப் படத்தில் நிறைய இருக்கிறது. எனக்குமே இது பர்சனல் ஜர்னியாக இருந்தது. அற்புதமான அனுபவம்.
இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்குமோ? அதுதான் இந்தியன் 2. இந்தியன் தாத்தா வறார் கதற விடப் போகிறார்’ என்றார்.
இயக்குநர் ஷங்கர்:
இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அனைவரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்தியா முழுக்க இருக்கும் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவர்களை இந்தப்படம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என நான் நம்புகிறேன்.
இந்தப் படம் மிகச் சிறப்பாக வர மிக முக்கியக் காரணம் கமல் சார் தான். பார்ட் 1 இல் கூட நாங்கள் அவருக்கு 40 நாள் தான் மேக்கப் போட்டு தான், ஷூட் செய்தோம்.
ஆனால் இந்தப் படத்தில் 70 நாட்கள் அவர் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு வந்து, மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு ரெடியாக வேண்டும். சாப்பிட முடியாது தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். மிகக் கஷ்டப்பட்டு, மிக அர்ப்பணிப்போடு இருப்பார்.
அவர் உழைப்பைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருக்கும். ஷூட்டிங் முடிந்தாலும் அவர்தான் கடைசியாகப் போவார். அந்த மேக்கப் கலைப்பதற்கு 1 மணி நேரமாகும். முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது ஒரு சிலிர்ப்பு வந்தது, இப்போது இந்தப் படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது.
அவரை செட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாக தான் வாழ்ந்திருக்கிறார்.
இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம்.
ஒரு சீன் 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கிக் கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டு நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாது. ஆனால் கமல் சார் அதைச் செய்துள்ளார். இன்னும் பல காட்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம்.
நடிகர் கமல்ஹாசன்: உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கு நன்றி.
முக்கியமாக இந்தியன் – 2 எடுப்பதற்குக் கருவைத் தந்துகொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி.
ஏனெனில் கரப்சன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது. இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக் இப்படி…
நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது.
ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முரண் கருத்து எப்போதும் மேடையில் இருக்க வேண்டும். ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன்-2 மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம்” என்றார்.