இப்போது வெளியாகும் படங்களின் நீளம் இரண்டு மணிநேரம் அல்லது இரண்டரை மணிநேரம் என்ற அளவில்தான் இருக்கிறது.
பொதுவாக திரைப்படங்கள் மூன்று மணிநேரம் என்பதை குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும் என்பதே பலரும் சொல்லி வரும் கருத்து.
இதேபோன்ற ஒரு சூழல் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கும் வந்தது.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் படையப்பா. ரஜினிக்கு மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் படையப்பாவுக்கும் ஒரு இடம் உண்டு.
இந்தப் படத்தை எடுத்து முடித்து முதன் முதலில் ரஜினிக்கு போட்டுக் காண்பித்திருக்கிறார் ரவிகுமார். படம் நான்கரை மணிநேரம் ஓடியிருக்கிறது.
படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரஜினி ரவிகுமாருக்கு கைக்கொடுத்திருக்கிறார்.
“படம் பிரமாதமாக வந்திருக்கிறது. எனக்கு திருப்தி” என்று கூறியிருக்கிறார்.
ரவிகுமாருக்கு ஆச்சரியம், படம் நான்கரை மணிநேரம் ஆனதை பற்றி எதுவும் சொல்லவே இல்லை.
பிறகு அவரே அந்தப்பேச்சை எடுத்திருக்கிறார்.
“சார் படம் நான்கரை மணிநேரம் ஓடுகிறது. இதை எப்படி எடிட் செய்தென்றே தெரியவில்லை. ஆனால், இப்படியே ரிலீஸ் செய்யவும் முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.
ரஜினி கூலாக, “பராவாயில்லை ரவி படத்தை அப்படியே ரிலீஸ் செய்யலாம் வேண்டுமானால் இரண்டு இடைவேளை விட்டுவிடலாம்” என்று தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ரவிகுமாருக்கு இது சரியாக படவில்லை. ஆனால் மூன்று மணிநேரமாகதான் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
படத்தில் எந்த காட்சியை வெட்டுவது என்பதில்தான் ரஜினிக்கும் ரவிகுமாருக்கும் குழப்பம். காரணம், காட்சிகள் அந்தளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது. அதுவும் சிவாஜி நடித்த ஒரு காட்சியும், ரஜினியின் சண்டைக்காட்சியையும் வெட்ட மனமே வராமல் தவித்திருக்கிறார். ரஜினிக்கும் அதை வெட்டக்கூடாது என்பதுதான் விருப்பம்.
தீவிர குழப்பத்தில் இருந்த ரஜினி அப்போதைக்கு வீட்டுக்குப் புறப்பட்டு போய்விட்டார். வீட்டுக்குப் போனதும், மீண்டும் ரவிகுமாருக்கு போன் மூலம் அந்தகாட்சிகளைப் பற்றி சிலாகித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது அவருக்கு யோசனை வந்திருக்கிறது. படத்தின் நீளம் தொடர்பான சந்தேகத்தை கமல்ஹாசனிடம் கேட்டுவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
கமலுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லியிருக்கிறார். கமல் “நீங்கள் என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்? என்று கேட்க, ரஜினி இரண்டு இடைவேளை யோசனையை சொல்லியிருக்கிறார்.
உடனே கமல், “அப்படியெல்லாம் செய்யாதீர்கள் ரஜினி படம் வெற்றி பெறாமல் போய் விடும் இந்தக் காட்சிகளையும் மூன்று மணிநேரம் சுருக்கியே ஆகவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
அதோடு மட்டும் நில்லாமல் ஷோலே படம் மூன்றரை மணிநேரத்திற்கும் மேலாக ஓடியது. இந்தியாவின் உள்ள பலமொழிகளில் ரிலீஸ் ஆன அந்தப்படம் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் ஆப்ரேட்டர்களால் இஷ்டம் போல் எடிட் செய்யப்பட்டு ஓட்டப்பட்டது.
அதே போன்ற ஒரு நிலை படையப்பா படத்திற்கும் வந்துவிடக்கூடாது என்று கமல் ரஜினியை எச்சரித்தார்.
கமல் சொன்னதில் இருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ரஜினி, மறுநாள் ரவிகுமாரை சந்தித்து கமல் சொன்ன விஷயத்தை அரை மனதோடு சொல்லியிருக்கிறார்.
“எப்படியாவது மூன்று மணிநேரமாக குறைக்கச்சொல்கிறார் கமல்” என்று சொல்லவும் ரவிகுமார் இதையே எதிர்பார்த்து காத்திருந்ததால் மளமளவென்று வேலையில் இறங்கியிருக்கிறார்.
கமல் சொன்னது போல் மூன்று மணிநேரமாக குறைத்தாகிவிட்டது.
மறுநாள் ரஜினியை வரவழைத்து தான் குறைத்த மூன்று மணிநேர படையப்பாவைக் காட்டியிருக்கிறார். ரஜினிக்கும் அது திருப்தியாகவே இருந்திருக்கிறது.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான்.
– தேனி கண்ணன்
#படையப்பா #ரஜினிகாந்த் #கமல்ஹாசன் #கேஎஸ்ரவிகுமார் #சிவாஜிகணேசன் #தமிழ்சினிமா #சூப்பர்ஸ்டார் #திரைப்படவரலாறு #படத்தொகுப்பு #திரைக்கதை #Padayappa #Rajinikanth #KamalHaasan #KSRavikumar #SivajiGanesan #TamilCinema