காந்தி கண்ணாடி – ‘பெர்பெக்ட்’டான திரையனுபவம் கிடைக்கிறதா?

விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் போன்றவர்கள் பெரியளவில் புகழைப் பெற்றவர்கள்.

அதேநேரத்தில் மாகாபா ஆனந்த் உள்ளிட்ட சில சின்னத்திரை பிரபலங்கள் சிலர் சினிமாவுக்கு வந்த வேகத்தில் திரும்பிச் சென்றிருக்கின்றனர். இன்னும் சிலர் தங்களுக்கான இடத்தைப் பெறும் முயற்சியை விடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

இவ்விரண்டில் எந்த வரிசையில் இவர் இடம்பெறுவார் என்கிற கேள்வியை எழுப்பியது ‘கலக்கப் போவது யாரு’ பாலாவின் நாயக அவதாரம். ஏற்கனவே சில படங்களில் நகைச்சுவை நடிகனாகத் தலைகாட்டியவர் இப்படத்தில் பிரதான வேடம் ஏற்றிருக்கிறார்.

‘ரணம் – அறம் தவறேல்’ பட இயக்குனர் ஷெரிஃப் இதனை இயக்கியிருக்கிறார். விவேக் – மெர்வின் இதற்கு இசையமைத்துள்ளனர்.

‘காந்தி கண்ணாடி’ தரும் திரையனுபவம் எத்தகையதாக உள்ளது?

’கா.க.’ கதை!

பணம் மட்டுமே பிரதானம் என்று நினைக்கிற ஒரு இளைஞருக்கும், ‘அது ஒரு பொருட்டே இல்லை’ என்று வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு முன்னாள் ஜமீன் வாரிசுக்கும் இடையே ஒரு உணர்வுப்பூர்வமான உறவு எப்போது, எப்படி முகிழ்த்தது என்று சொல்கிறது ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம்.

இந்தக் கதையில் ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் நடத்துகிற கதிர் எனும் பாத்திரத்தில் கேபிஒய் பாலாவும் அவரது காதலி கீதாவாக நமீதா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர்.

கோவை வட்டாரத்தில் உள்ள ஒரு ஜமீன் குடும்பத்தின் வாரிசாக, காந்தி எனும் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் பாலாஜி சக்திவேல். அவரது காதலியாக, மனைவியாக, கண்ணம்மா எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அர்ச்சனா.

பணம் இல்லாவிட்டாலும், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தங்கள் காதலைக் கொண்டாடுகிற ஒரு இணை காந்தி – கண்ணம்மா. அதேநேரத்தில், தனது காதலி கீதாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை உணர முடிந்தும், பணம் சம்பாதிக்கிற வேட்கையில் வேறு திசை நோக்கிச் செல்லும் குணாதிசயத்தோடு இருக்கிறார் கதிர்.

இந்த முரணே, ஒருகட்டத்தில் முதுமைத் தம்பதிகள் உணர்த்தும் படிப்பினையை இளைய தலைமுறை கற்றுக்கொள்ளும் என்ற எண்ணத்தை நமக்குள் உருவாக்கிவிடுகிறது. அதற்கேற்ப, திரையில் காட்சிகள் விரிகின்றன.

மேற்சொன்னதை மனதில் வரித்துக்கொண்டு ‘காந்தி கண்ணாடி’ பார்க்க அமர்ந்தாலே போதும்; ‘இந்த படத்தைப் பார்க்கவா, வேண்டாமா’ என்கிற கேள்விக்கான பதிலைச் சில நிமிடங்களில் ஒருவரால் பெற்றுவிட முடியும்.

’உணர்வுமயமான’ பின்பாதி!

நாயகனாகத் திரையில் ‘கட்டுமஸ்தாக’த் தெரிகிறார் பாலா. அதற்கான மெனக்கெடல் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறது. அதேநேரத்தில், பணம் மீதான வேட்கையில் திரிகிற குணாதிசயம் அவரது உடல்மொழியில், பாவனைகளில் தென்படாதது ஒரு குறையே. ஒருவேளை உடலின் இறுக்கம் முகத்தையும் தொற்றிவிட்டதுதான் காரணம் என்றால், அதனை அவர் உடனடியாகச் சரி செய்தாக வேண்டும்.

‘குலுகுலு’, ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ் உள்ளிட்ட சில படைப்புகள் வழியே அறிமுகமானவர் நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி. இந்த படத்திலும் அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகிற வகையில் சில காட்சிகள் இருக்கின்றன.

பாலாஜி சக்திவேல், அர்ச்சனா இருவருமே இப்படத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றனர். திரைக்கதையின் தொடக்கத்தில் செயற்கையாகத் தெரியும் அவர்களது இருப்பு மெல்ல நம் மனதைத் தொடுவதும், பிறகு பிசைவதாக அமைந்திருப்பதும் இப்படத்தின் சிறப்பு.

இருவருக்குமான காதலையும் அன்பையும் டிபன் பாக்ஸ் சாப்பாடு, திருஷ்டி சுற்றுவதற்கான உப்பு மிளகாய் வழியே சொல்லியிருப்பது அழகு. பல முறை அவற்றைத் திரையில் காண்கிறபோதும் வசனங்களில் உணர்த்துகிறபோதும் நமக்கு சலிப்பு வரவில்லை.

போலவே, இளம் வயதில் கண்ணம்மா கேட்டதை அறுபதாம் கல்யாணத்தின்போதாவது நிறைவேற்றிவிட வேண்டுமென்று துடிக்கிற காந்தியின் ஏக்கங்களும் அதனைச் செயல்படுத்துவதற்காக அவர் மேற்கொள்கிற முயற்சிகளும் பின்பாதியில் நம்மை நெகிழ வைக்கின்றன. அது உணர்வுமயமாக இருப்பதுடன் திரையோடு நம்மைப் பிணைத்துவிடுகிறது.

அது மட்டுமே ‘காந்தி கண்ணாடி’யின் பலமாக உள்ளது.

மனோஜ் பிரபு, ஆராத்யா இருவரும் சிறு வயது ‘பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா’ ஆகத் திரையில் வந்து போயிருக்கின்றனர். உருவ ஒற்றுமை இல்லாவிட்டாலும், அவர்களது இருப்பும் நம்மைக் கவரும் விதத்தில் உள்ளது.

இது போக ஜீவா சுப்பிரமணியன், மதன், அமுதவாணன், நிகிலா சங்கர் எனப் பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜாவின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் யதார்த்தம் மிளிர மெனக்கெட்டிருக்கிறது. கூடவே, ஒரு வண்ணமயமான காட்சியாக்கம் இடம்பெற வேண்டுமென்றும் பாடுபட்டிருப்பது தெரிகிறது.

காட்சிகள் நிகழ்கிற களங்கள் நம்பகத்தன்மையுடன் இருக்குமாறு கவனம் செலுத்தியிருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் மணிமொழியான் ராமதுரை.

படத்தொகுப்பாளர் சிவா நந்தீஸ்வரன் முதல் பாதியில் காட்சிகளை ‘கட் அண்ட் ரைட்’ ஆக தொகுத்திருக்கிறார்; பின்பாதியில் பாத்திரங்களின் உணர்வெழுச்சிக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். அதுவே கதையின் அழுத்தத்தை நமக்குள் கடத்துகிறது.

விவேக் – மெர்வின் இசையில் ‘திமிருக்காரி’ பாடல் இப்படத்தின் முகமாக விளங்குகிறது. ’புல்லட் வண்டி’, ‘இந்தி நஹி மாலும்’ மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் குரலில் ஒலிக்கிற சோகப் பாடல் ஆகியனவும் எளிதாக நம்மை வசீகரிக்கின்றன.

பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் தாங்கிப் பிடிக்கிற வகையில் உள்ளது.

‘காந்தி கண்ணாடி’ படம் ஓரளவுக்கு ‘மீடியம் பட்ஜெட்’டில் தயாராகியிருக்கிறது. இதில் இடம்பெற்ற நடிப்புக் கலைஞர்களும் முன்னணி வரிசையில் இருப்பவர்கள் இல்லை. ஆனால், கிடைத்தவற்றைக் கொண்டு தான் நினைத்த கதைக்குச் சரியான உருவம் தர முனைந்திருக்கிறார் இயக்குனர் ஷெரீஃப். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

‘காந்தி கண்ணாடி’ தரும் திரையனுபவம் ‘பெர்பெக்ட்’டாக இருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்றே சொல்ல முடியும். அதேநேரத்தில், ‘ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கிறதா என்றால், ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். மேற்சொன்னதே, இந்த படத்தைப் பார்க்கவா, வேண்டாமா என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை நோக்கி நகரத் துணை நிற்கும்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment