வெள்ளிவிழாப் படங்களை மட்டுமே தந்த இயக்குநர்!

இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனுக்கு கோவை சொந்த ஊர். அதனால் என்னவோ சொந்த ஊரை சார்ந்த சத்தியராஜ், கவுண்டமணி, மணிவண்ணன், ரகுவரன், நிழல்கள் ரவி, கோவை சரளா உள்ளிட்ட பலரையும் நடிக்க வைத்தார். மிகப்பெரிய வெற்றி படங்களைத் தந்தவர்.

இவரைப் பற்றி தெரிஞ்சது பல. தெரியாதும் பல இருக்கிறது. அதில் சில.

பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான ‘பயணங்கள் முடிவதில்லை’ 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.

இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன்.

“கதையைச் சுருக்கமாக சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?” என்று இளையராஜா கேட்டார்.

“அரைமணி நேரம் போதும்” என்றார் சுந்தர்ராஜன். கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார்.

கதையைக் கேட்டு முடித்ததும், “இந்தப் படத்திற்கு இசையமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் இளையராஜா.

மறுநாள், இசை அமைக்க 12 மணி நேரத்தில் 30 டியூன்கள் போட்டார், இளையராஜா.

“இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

“நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டியூன்களை நீங்களே தீர்மானியுங்கள்” என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்ததுதான் ‘பயணங்கள் முடிவதில்லை’ படப்பாடல்கள்.

‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்த எண்ணினோம்.

அந்த சமயத்தில், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் வெளிவந்திருந்தது. அதில் மோகனின் தோற்றமும், நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தன. அவரை கதாநாயகனாகப் போட தயாரிப்பாளரும், சுந்தர்ராஜனும் தீர்மானித்தர்கள்.

அவரை அணுகியபோது, “கதையைக் கேட்டபிறகு, என் முடிவை சொல்கிறேன்” என்றார்.

கதையைக் கேட்டதும், “கதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த சமயத்தில், ‘மஞ்சவிரிச்ச பூக்கள்’ என்ற மலையாளப்படம் சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடித்த பூர்ணிமாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள்.

ரூ. 23 லட்சம் செலவில் 4 மாதங்களில் ‘பயணங்கள் முடிவதில்லை’ தயாரானது. 26.02.1982ல் படம் ரிலீஸ் ஆகி எல்லா இடங்களிலும் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.

தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது கிடையாது. கடின உழைப்பு இருந்தால் மட்டுமே மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியும் என்பதற்கு தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய கலைஞர்கள் மிகப்பெரிய உதாரணமாகும்.

அப்படி தமிழ் சினிமாவின் அதிக அளவிலான வெள்ளி விழாப் படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவர்தான் ஆர்.சுந்தர்ராஜன்.

இப்போது இருக்கக்கூடிய நடிகர்களும் திறமைகளோடு இருக்கின்றனர். ஆனால், தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து 60, 70, 80-களில் அனைவரும் அனைத்து விதமான கலவைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இயக்குநராக மட்டுமல்லாமல் சுந்தர்ராஜன் எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், சிறந்த நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே என பல்வேறு விதமான வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்தவர் சுந்தர்ராஜன்.

தமிழ் சினிமாவில் 1980 காலகட்டங்களில் மிகவும் முன்னணி நடிகராக மோகன் இருந்து வந்தார். பாடல்களை வைத்து மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்தார். அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை.

அப்படி உச்சத்தில் இருந்த மோகனை வைத்து சுந்தர்ராஜன் பல படங்களை இயக்கியுள்ளார்.

குங்குமச்சிமிழ், நான் பாடும் பாடல், சரணாலயம், மெல்லத் திறந்தது கதவு என பல வெள்ளிவிழா திரைப்படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதற்குப் பிறகு விஜயகாந்த் பக்கம் தனது திசையைத் திருப்பினார் சுந்தர்ராஜன்.

மோகனைப் போலவே ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு விதமான வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஜயகாந்த் திகழ்ந்து வந்தார்.

வைதேகி காத்திருந்தாள் என்ற கதையை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சிக்கலுக்கு பிறகு விஜயகாந்த் தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களை ஒப்புக்கொள்ள வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார் சுந்தர்ராஜன்.

இதுவரை பார்க்காத விஜயகாந்தை வைதேகி காத்திருந்தாள் படத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரமாக மக்கள் கண்டு களித்து மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுத்தனர்.

இது ஒரு புறமிருக்க வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் உருவானது குறித்து மிகப்பெரிய கதை இருப்பதாக கூறப்படுகிறது.

இளையராஜா தன்னிடம் ஏழு டியூன்கள் இருப்பதாகவும் அதற்காக ஒரு கதை எழுத முடியுமா எனக் கேட்டுள்ளார்.

ஏன் முடியாது? மொத்தப் பாடல்களையும் அந்தப் படத்திலேயே வைத்து விடலாம் என சுந்தர்ராஜன் எழுதிய படம் தான் வைதேகி காத்திருந்தாள் எனக் கூறப்படுகிறது.

அடுத்த திரைப்படம் அம்மன் கோயில் கிழக்காலே. வைதேகி காத்திருந்தாள் வெற்றிக்கு பிறகு இருவரும் கூட்டணி சேர்ந்து உருவான திரைப்படம் இது.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூல் சாதனை செய்தது. விஜயகாந்துக்கு சிறந்த நடிகர் என விருது கிடைத்தது.

இந்த அனைத்து படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

மிகப்பெரிய இயக்குநராக வெற்றி பெற்ற பிறகும் நடிப்பில் இறங்கினார் சுந்தர்ராஜன். துணைக் கதாபாத்திரங்களாக நடித்தாலும் தான் இருக்கும் இடத்தை சரியாக நிரப்பி விடுவார். இயக்குநர் அல்லவா‌.

இயக்குநராக இருக்கும் பலர் கேமரா முன்பு நின்று நடிப்பது கிடையாது. ஒரு சிலர் மட்டுமே தங்களது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் அனைத்து விதமான கலைகளிலும் திறமை பெற்றுவராக விளங்கி வருகிறார் சுந்தர்ராஜன்.

– நன்றி : முகநூல் பதிவு

Comments (0)
Add Comment