‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்த இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘மகாராஜா’ விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளிவந்ததால், ரசிகர்களிடையே கவனம் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல், விஜய் சேதுபதிக்கும் இயக்குநர் நிதிலனுக்கும் அடையாளம் கொடுக்கும் படமாகவும் மாறியது.
இப்படத்தின் வசூல் உலகளவில் ரூ.100 கோடியை எட்டியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பு நிறுவனம் இயக்குநருக்கு பிஎம்டபள்யூ காரை பரிசாக அளித்துள்ளது.
இந்த நிலையில், நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘மகாராணி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்திற்கான திரைக்கதை வேலைகளில் இயக்குநர் முனைப்புடன் ஈடுபட்டு வருவதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.