‘லியோ’வில் தன்னுடைய தவறை உணர்ந்தேன்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

‘மாநகரம்’ படம் மூலம் சினிமா பயணத்தை தொடங்கியவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.

இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம்-2 ஆகிய படங்கள் வசூலில் சாதனைப் படைத்ததோடு, லோகேஷுக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தன.

நான்கு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் ஐந்தாவதாக இயக்கிய படம் ‘லியோ’. விஜய் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ‘லியோ’, தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெரும் லாபத்தை அள்ளி தந்தது.

ஆனால் அச்சு மற்றும் காட்சி ஊடக விமர்சனங்களில் வறுத்தெடுக்கப்பட்டது. ‘லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் போல் லியோ இல்லை’ என பல தரப்பினரும் குறைபட்டுக்கொண்டனர்.

ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றாத லோகேஷ் கனகராஜ், இப்போது மவுனம் கலைத்துள்ளார்.

‘லியோ’ படத்தில், தான் தவறு இழைத்து விட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியின் சுருக்கம்: ‘இடைவேளைக்கு பிறகு லியோ படம் சரி இல்லை என வெளிவந்த விமர்சனங்களை நான் அறிவேன். உண்மைதான். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இது எப்படி நிகழ்ந்தது என்பதை அனைத்து ரசிகர்களுக்கும் சொல்ல கடமை பட்டுள்ளேன். குறிப்பிட்ட தேதியில் லியோவை ரிலீஸ் செய்ய வேன்டும் என எனக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது.

அந்தப் படத்தை 10 மாதங்களில் முடிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது. அதன்படி முடித்து கொடுத்து விட்டேன்’

– இது லோகேஷின் விளக்கம்.

லியோ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது ரஜினிகாந்துக்கு 171 – வது படம்.

‘வேட்டையன்’ படம் முடிந்ததும், லோகேஷுக்கு கால்ஷீட் அளித்துள்ளார், ரஜினி. ‘ரஜினி படத்தை மிகவும் ஜாக்கிரதையாக எடுப்பேன்’ என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

‘லியோ படத்தில் செய்த தவறை ரஜினி படத்தில் செய்ய மாட்டேன். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது நிறைவு பெறும், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என இப்போது சொல்ல மாட்டேன்.

லியோ எனக்கு பாடம் கற்றுத்தந்துள்ளது. எனவே ரஜினி படத்தை சிறப்பாக எடுக்க அதிக நாட்கள் தேவைப்படும்’ என கூறியுள்ளார், லோகேஷ் கனகராஜ்.

ரஜினி படத்தை முடிக்க, ஷங்கர் மாதிரி ஐந்து, ஆறு வருஷம் எடுத்திடாதீங்க!

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment