இயக்குநர் லிங்குசாமிக்கு என்ன ஆச்சு?

சொந்தமாக சினிமா தயாரித்து நைந்து போன டைரக்டர்களில் லிங்குசாமியும் ஒருவர். உதட்டில் எப்போதும் புன்னகை, வெடிச்சிரிப்பு, விளையாட்டு பேச்சு என உற்சாகமாக வலம் வரும் லிங்குசாமி, ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்தவர்.

ஏ. வெங்கடேஷிடம், உதவியாளராகப் பணியாற்றி விட்டு, ‘ஆனந்தம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

முதல் படமே சூப்பர் ஹிட். இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘ரன்’ திரைப்படம், சூப்பர் டூப்பர் ஹிட். தமிழ்நாட்டின் வெற்றிப்பட இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்த லிங்குசாமிக்கு அடுத்த படங்களான ‘ஜி, ‘பீமா ஆகியவை தோல்விப் படங்களான அமைந்தன.

கடனாளியாக்கிய சொந்தப் படங்கள்

எனினும் விஷாலை ஆக்‌ஷன் ஹீரோவாக உயர்த்திய ‘சண்டைக்கோழி’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியின் மூலம், லிங்குசாமி, தனது பழைய இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

அவரது, கெட்ட நேரம் சொந்தத் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். அவரே தயாரித்து, இயக்கிய ‘பையா’ வசூல் ரீதியாக அவருக்கு நல்ல வசதியைப் பெற்றுக்கொடுத்தது.

ஆனால், லிங்குசாமி இயக்கித் தயாரித்து, சூர்யா நடிப்பில் வெளியான  ‘அஞ்சான்’  திரைப்படம், 2014 ஆம் ஆண்டு வெளியாகி படுதோல்வியை தழுவியது.

இதனால் பெரும் இழப்பை சந்தித்த லிங்குசாமிக்கு அடுத்த அடியாக அமைந்தது கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தம வில்லன். அவர் தயாரிக்க, நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கிய இந்தத்  திரைப்படம், லிங்குசாமியை, பெரும் நிதிச்சுமையில் சிக்க வைத்தது.

இது தவிர அவர் தயாரித்த ‘தீபாவளி’, ‘வழக்கு எண் 18|9′,  பட்டாளம் ஆகியப் படங்களும் பெரும் தோல்வியை அடைந்தன.

இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு  கார்த்தி, சமந்தா ஆகியோரது நடிப்பில், “எண்ணி ஏழு நாள்” என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, லிங்குசாமியின்  திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து 1 கோடியே 3 லட்சம் ரூபாய்  கடன் வாங்கியது.

கடன்தொகையை  அவர் திரும்பச் செலுத்தவில்லை. இதனால்  பிவிபி  நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த லிங்குசாமிக்கு உத்தரவிட்டது. லிங்குசாமியும்  1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார்.

இந்தக் காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல், திரும்பி வந்தன. இதையடுத்து, லிங்குசாமிக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

வழக்கை  நீதிமன்றம், லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. அந்த வழக்கில் இருந்து இப்போது தற்காலிகமாக அவர், ‘ரீலீஃப்’ பெற்றுள்ளார்.

குழப்பத்தில் லிங்குசாமி

கடன்சுமை, லிங்குசாமிக்கு மனச்சுமையை அதிகரித்து விட்டது. அவர் கடைசியாக ‘வாரியர்’ எனும் தெலுங்குப்படத்தை இயக்கினார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தெலுங்கு  நடிகர் ராம் பொத்தேனி, நாயகனாக நடித்திருந்தார்.

இந்தப் படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இரண்டு மொழிகளிலும் படம் ஓடவில்லை. இந்தப் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவர்  டைரக்டு செய்யும் அடுத்த படத்துக்கான அறிவிப்பில் பல்வேறு குழறுபடிகள்.

‘பையா -2’ படத்தை இயக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். கொஞ்ச நாட்களில் மகாபாரதத்தை இரண்டு பாகங்களாக எடுக்கப்போவதாக அதிரடி அறிவிப்பை கொடுத்தார், லிங்குசாமி.

இந்த நிலையில் லிங்குசாமி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய படம் ஒன்றை, இரு பாகங்களாக டைரக்டு செய்ய உள்ளதாக இன்றைய ஆங்கில தினசரி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

தனது குழுவினர், அனுபவமிக்க எழுத்தாளர்களுடன்  அவர் கொடைக்கானலில், கதை விவாதம் செய்து வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமியின் அடுத்த படம் குறித்து மாறுபட்ட  தகவல்கள் வெளியாகி வருவதால், அவரது அபிமானிகள் சங்கடம் அடைந்துள்ளனர்.

நிஜம் எது? அடுத்த படம் எது? என்பதை லிங்குசாமியே பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பதே லிங்குசாமி, ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.

#இயக்குநர்_லிங்குசாமி #Director_Lingusamy #பையா_2 #Paiyaa_2 #மகாபாரதம் #Mahabharatham  #திருப்பதி_பிரதர்ஸ்_நிறுவனம்_பிவிபி_கேப்பிட்டல்ஸ் #Tirupati_Brothers_Company_BVP_Captials_fund #எழுத்தாளர்கள் #Writers

Comments (0)
Add Comment