இந்த ஆண்டு தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சுமாராக இருந்தது. அதேநேரம் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படம் என்ற விருதைப் பெற்றது.
இதனையடுத்து தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘ராயன்’. இது அவரது 50-வது படம். இதில் செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘ராயன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், “10 கிலோ சதை, 15 கிலோ எலும்பு வைச்சு துள்ளிட்டு இருக்க என்று நான் ஒரு படத்தில் வசனம் பேசியிருந்தேன் – அவர் இன்னும் துள்ளிட்டுதான் இருக்காரு – அவரது அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன் – அழகான வளர்ச்சி இது – இன்று ஓர் இயக்குநராக தனுஷ் வளர்ந்து நிற்கிறார்.
ராயன் திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும் – அதற்காக படக்குழு மிகுந்த முயற்சி எடுத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய செல்வராகவன், “தனுஷை நான் செதுக்கவில்லை – நான் கல்லு வைச்சிட்டு போய்ட்டேன் – அவரே செதுக்கி கொண்டார் – யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத நல்ல மனது கொண்டவர் தனுஷ் – என்னைக்கும் அந்த மனதுக்கு எந்தக் குறையும் வராது” என்று தனது தம்பி குறித்து பெருமிதம் கொண்டார்.
போயஸ் கார்டன் வீடு:
விழாவின் முத்தாய்ப்பாக தனுஷ் பேசினார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அவர் 150 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா கட்டியுள்ளார். இந்த வீட்டில், தனது பெற்றோர் மற்றும் மகன்களுடன் அவர் வசித்து வருகிறார்.
ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் விழாக்களில் குட்டிக் கதைகள் சொல்வது போன்று, தனுஷும், போயஸ் கார்டனில் தான் ஏன் வீடு வாங்க ஆசைப்பட்டேன் என்பது குறித்து பேசினார்.
நான் எப்போதுமே தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகன் – அவரது வீட்டை பார்க்க வேண்டும் என போயஸ் கார்டனுக்கு சென்றேன் – அப்போது எனக்கு வயது 16 இருக்கும் – அங்கே போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தனர் – அவர்களிடம் கேட்டதற்கு அங்க தான் இருக்கு சைலன்ட்டா பார்த்து விட்டு போயிடணும்னு சொன்னாங்க.
நானும் தலைவர் வீட்டைப் பார்த்து விட்டு சந்தோஷமாக திரும்பினால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜேஜேன்னு கூட்டம் – அது யாரு வீடுன்னு கேட்டதற்கு ஜெயலலிதாம்மா வீடுன்னு சொன்னாங்க – அப்படியே வியந்து போய் விட்டேன்.
இந்த பக்கம் ரஜினி சார் வீடு – அந்த பக்கம் ஜெயலலிதாம்மா வீடு – நடுவில் நம்ம வீடு கட்டினா எப்படி இருக்கும் என அந்த வயசிலேயே ஆசைப்பட்டேன் – நினைத்த மாதிரியே போயஸ் கார்டனில் வீடு கட்டி விட்டேன்’’ என தனுஷ் சொன்னபோது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
வீட்டைப் பார்க்க தலைவரைக் கூப்பிட்டீங்களா தனுஷ்?
– பாப்பாங்குளம் பாரதி.