சர்வதேச தரத்தில் உருவாகியிருக்கும் ‘பயமறியா பிரம்மை’!

இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி, குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பாடலாசிரியர் வெரோனிகா:

”இந்தத் திரைப்படத்தில் தான் முதன்முதலாக திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகிறேன்.‌ கவிதாயினியாக கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக சர்ரியலிசம் மற்றும் இருள் முகத்தைப் பற்றிய நிறைய கவிதைகளை எழுதி இருக்கிறேன்.

ஆனால், திரைப்படத்தில் பாடல்களை எழுதுவதற்கு வாய்ப்புகள் வந்ததில்லை. இதுதான் முதல் முறை. இயக்குநர் ராகுல் கபாலி மூலமாக இந்த வாய்ப்பு கிடைத்தது.

இயக்குநருடனான முதல் சந்திப்பில், ஒரு கொலைக் குற்றவாளி கதாபாத்திரம் கொலையைக் கலையாகப் பார்க்கிறது. இதன் பின்னணியில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார்.

ஊரில் என்னுடைய உறவினர் ஒருவர் ரவுடி. தற்போது அவர் உயிருடன் இல்லை. அவரைக் கொலை செய்து விட்டார்கள். என்னுடைய சிறிய வயதில் நடந்த இந்த சம்பவம் எனக்கு மனதில் ஆழமாக பதிந்தது.

இந்த சம்பவத்தால் பெண்கள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டார்கள் என்று யோசித்தேன். அங்கிருந்து ஏதேனும் பாடல் வரிகள் கிடைக்கிறதா.. என யோசிக்கத் தொடங்கினேன்.

அதிலிருந்து கிடைத்த பாடல் தான் இந்தப் பாடல். இசையமைப்பாளர் கே உடன் பணியாற்றுவது எனக்கு சவுகரியமாக இருந்தது. இந்த குழுவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் கே: 

”இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதற்கு இப்படத்தின் கதை தான் காரணம். வழக்கமான படங்களிலிருந்து இந்தப் படம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் புதிய புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பினை எனக்கு வழங்கியது.‌

இயக்குநர் ராகுல் கபாலி அடிப்படையில் ஒரு ஓவியக் கலைஞர். அவருடைய ஓவிய அனுபவத்தை படத்தில் காட்சிகளாக செதுக்கியிருக்கிறார். இந்தப் படைப்பு அவரின் நேர்மையான.. உண்மையான.. முயற்சி.‌

இந்தப் படத்திற்கான இசைக் கோர்ப்புப் பணிகளை இன்று காலையில் தான் நிறைவு செய்தேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. என்னுடைய பணியை ரசித்து செய்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் விஸ்வாந்த்: 

”கபாலி படம் பார்த்துவிட்டு இந்தப் படத்திற்காக முதன் முதலில் அழைத்தவர் இயக்குநர் ராகுல் கபாலி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன்.

அவர் அடிப்படையில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக் கலைஞர். அவருடைய அலுவலகம் முழுவதும் ஓவியங்களால் வண்ணமயமாக நிறைந்திருந்தது. படத்தின் திரைக்கதையை வாசிக்க கொடுத்தார்கள். வாசிக்கும்போதே இது ஒரு வழக்கமான தமிழ் படம் அல்ல என்பது தெரிந்தது. இதனை திரையில் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத புதிய முயற்சியாக இருப்பதை பார்வையாளர்கள் உணர்வார்கள். சர்வதேச தரத்திலான இந்த முயற்சியை படக்குழுவினர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.‌

இயக்குநர் ராகுல் கபாலியைப் பற்றி ஒரு சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். அவர் இதுவரை பதினேழு நாடுகளுக்கு டூவீலரில் பயணித்திருக்கிறார்.‌ உலகம் முழுவதும் சுற்றி, கிடைத்த அனுபவத்தை கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். ஓவியத்தைப் போல நேர்த்தியாக உருவாக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இயக்குநர் ராகுல் கபாலி:

”இது என்னுடைய முதல் படம். இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும். இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையுடனும் செயல்பட்டதில்லை.

குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து..‌ எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து, ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தப் படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும். வெளியாகும் படங்களில் இந்தத் திரைப்படம் எங்களின் புதிய முயற்சியை உங்களுக்கு உணர்த்தும்” என்றார்.

Comments (0)
Add Comment