தமிழ்த் திரை உலகம், குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் பலரைப் பார்த்துள்ளது. எஸ்.ஏ. சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய ஷங்கர், இதற்கு ஆகச்சிறந்த உதாரணம்.
அண்மைக்கால எடுத்துக்காட்டு அட்லீ. இவர், ஷங்கரிடம் சினிமா படித்தவர். ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். நல்ல விமர்சனங்களையும் பிரமாதமான வசூலையும் குவித்தது அந்தப் படம்.
‘தளபதி’ விஜய்யுடன் இணையும் வாய்ப்பு தானாகத் தேடி வந்தது. விஜய்யுடன் சேர்ந்து தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தார் அட்லீ.
இந்திக்குச் செல்லும் ஆசை முகிழ்த்தது. ஷாரூக்கானை வைத்து, தனது ஐந்தாவது படத்தை இயக்கினார். அதுதான் ‘ஜவான்’. இந்தப் படம் 1,100 கோடி ரூபாய் வசூலித்து ‘ரிகார்ட் பிரேக்’ செய்தது.
‘ஜவான்’ பிரமாண்ட வெற்றி பெற்ற போதும், உடனடியாக அட்லீ புதிய படம் இயக்கவில்லை. அவர் டைரக்ஷனில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தை இந்தியில் தயாரித்துள்ளார்.
‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அட்லீயுடன் இன்னொரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார், முரத் கேடானி.
வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பேபி ஜான்’ படத்தின் ‘புரமோஷன்’ நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அட்லீ, அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார்.
இந்தப் படத்துக்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக அட்லீ தெரிவித்தார்.
படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்குகிறார்.
அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து இப்போது அவருடைய படத்தையே அட்லீ தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மீண்டும் எப்போ படம் இயக்குவீங்க, அட்லீ?
– பாப்பாங்குளம் பாரதி