எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராதக் காட்சிகள்!

எம்.ஜி.ஆருடன் நான் பழகிய காலங்களை எண்ணும் பொழுது… அது ஒரு வசந்த காலம் என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவருடன் ஒரு செய்தியாளனாக மட்டுமின்றி… அதையும் தாண்டிய குடும்ப உறுப்பினராக அவருடன் பழகிய நினைவுகள் பசுமையானவை.

இன்றும் எண்ணிப் பார்க்கின்… இதயம் ஏங்குகிறது. 1974-ஆம் ஆண்டிலிருந்தே எம்.ஜி.ஆருடனான தொழில் சார்ந்த தொடர்பு எனக்குத் தொடங்கிவிட்டது.

தமிழக அரசியல் களத்தில் உச்சபட்ச தீவிரத்தில் எம்.ஜி.ஆர் விசுவரூபம் எடுத்திருந்த காலம் அது. ராமாவரம் தோட்டம், மாம்பலம் இல்லம், அதிமுக அலுவலகம், சத்யா படப்பிடிப்புத் தளம் என்று நிர்வாகிகளையும் நிரூபர்களையும் எம்.ஜி.ஆர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவற்றில் நான் பங்கெடுத்துக் கொண்ட வாய்ப்புகள் நெஞ்சில் நிலைக்கக்கூடிய நிகழ்ச்சிகளாகும்.

மற்ற இடங்களைவிட சத்யா படப்பிடிப்புத் தளத்தில் நிருபர்களைச் சந்திக்க எம்.ஜி.ஆர் வந்தால் அவர் தனிப்பட்ட ஆனந்தத்தில் மிதந்தபடியே பேசுவார்.

செய்திக்கான கேள்வி – பதில் நிகழ்வுகள் நிறைவு பெற்றதும் லேசாகக் கணைத்துக் கொண்டு, நிருபர்களை நோக்கி, “எல்லோரும் பேனாவை மூடி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கேள்வி-பதில் நிகழ்ச்சி முடிந்தது. இனி நாம் மனம் விட்டுப் பேசுவோமே!” என்று கூறுவார்.

அவர் சொன்ன ஒவ்வொரு சம்பவமும் சிலிர்ப்பூட்டுவதாகவே அமைந்தது. அவை என் நெஞ்சில் பதிந்திருப்பதை நான் அவ்வப்போது நினைவூட்டிக் கொள்வதுண்டு.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா? இதோ ஒரு தகவலும் வேண்டுகோளும்.

சத்யா படப்பிடிப்புத் தளத்தில் நடந்த உரையாடலின்போது எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

“நான் எந்தப் படத்தில் நடிக்கும் போதும் உச்சகட்டமாக வரும் கிளைமாக்ஸ் காட்சியின் போது தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விடுவேன்.

அந்த உச்சகட்டக் காட்சிகளை எப்படி வடிவமைத்துப் படமாக்குவது என்பதில் நான் தனிப்பட்ட முறையில் யோசிப்பேன்.

அந்த வகையில் நான்கு தனித்தனி உச்சகட்டக் காட்சிகளை மனத்தளவில் உருவாக்கி வைத்துக் கொள்வேன். அவற்றைத்தான் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளாகப் படமாக்குவோம்.

ஒவ்வொரு படத்திலும் அந்த நான்கு உச்சகட்ட காட்சிகளும் இருக்கும். படத்தை வெளியிடுவதற்கான நாள் வருவதற்கு முன்னதாக, அதனை தணிக்கைக்கு அனுப்பும் போதுதான், அந்த நான்கு உச்சகட்ட காட்சிகளில் எதை வைத்துக் கொள்வது என்று முடிவு செய்வோம்.

அந்தப் படத்தை வெளியிடுவதற்கு உரியக் காலகட்டத்தில் தமிழகத்தில் எத்தகைய சூழல் நிலவுகிறது என்பதை அடிப்படையாக வைத்துத்தான் உச்சகட்டக் காட்சிகளில் எதனை படத்தோடு பொருத்தி வெளியிடுவது என்று முடிவு செய்வேன்.

அதனால்தான் என்னுடைய ஒவ்வொரு படத்திலும் கிளைமாக்ஸ் காட்சி மக்களின் அந்தக் காலகட்டத்துச் சூழலுடன் லயிப்போடு காணப்படுகிறது.

என் படங்கள் வெற்றி பெறுவதற்காக நான் பயன்படுத்துகின்ற பல்வேறு யுக்திகளில் இதுவும் ஒன்று.”

– என எம்.ஜி.ஆர் நிருபர்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்வு கொண்டார்.

இந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான சிந்தனை எனக்குண்டு.

எம்.ஜி.ஆர். படங்களை எடுத்தவர்கள், வெளியிட்டவர்கள், எம்.ஜி.ஆரோடு நேரடி நெருக்கத்தில் இருந்த கலைத்துறையினர் போன்றோர் இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுத்தினால் அது சினிமாத் துறைக்குக் கிடைக்கின்ற ஒரு முக்கியமான திரைத்துறை வரலாற்றுப் பதிவாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் நடித்த படம் ஒவ்வொன்றுக்கும் 4 கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டன அல்லவா? ஒவ்வொரு படத்திலும் ஒரு கிளைமாக்ஸ் காட்சிதான் இடம்பெற்றுள்ளது.

அப்படியானால் மீதி இருக்கின்ற அந்த 3 கிளைமாக்ஸ் காட்சிகள் என்ன ஆயின? அவற்றைத் தேடித் திரட்டினால், அவை தமிழ்க் கலைத் துறைக்கு முக்கியமான எம்ஜிஆர் பதிவு கிடைக்கும் அல்லவா?

எம்.ஜி.ஆர் தொடர்பாக ஆக்கபூர்வமாகச் சிந்திப்பவர்கள், அவரின் வரலாற்றைத் தேடுவோர், அவரின் வாழ்வியலைத் தொகுக்கக் கருதுவோர், அவரைப் பற்றிய தொகுப்புகளை வெளியிடுவதன் மூலமாகத் தமது ஆற்றாண்மையைத் தீர்த்துக்கொள்ளக் கருதுவோர் இதில் ஈடுபாடு காட்டினால் நலம்.

இதேபோன்று எம்ஜிஆர் ஒவ்வொரு படத்திற்கும் என படைக்கப்பட்ட பாடல்களில் சிலவற்றைத் திரைப்படங்களில் சேர்க்காமல் தவிர்த்திருக்கிறார்கள்.

பக்கத்தின் நீளம் காரணமாக, எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளும் இடம்பெறாமல் போயிருக்கின்றன. சில பாடல்கள் இருந்தும்கூட படப்பிடிப்பு நடக்காத காரணத்தால், அவை அப்போதைய தேவைக்குப் பொருந்தி வராத காரணத்தால் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்படியாக பல எம்.ஜி.ஆரின் படப் பாடல்களும் பாடல்களோடு கூடிய காட்சிகளும் படங்களிலிருந்து தவிர்க்கப்பட்டு இருந்தாலும் எங்கோ அவை சேமிப்பில் இருந்திருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் நடித்து ஓரளவு வளர்ந்த நிலையில் கைவிடப்பட்ட படங்கள் உண்டு. அவற்றில் ஒரு படத்தின் சில காட்சிகளை வைத்து தான் பாக்கியராஜ் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டு வெற்றி கண்டார்.

அதேபோலத்தான் தெலுங்கிலும், எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் சீடரான என்.டி.ராமராவ் நடித்த பல காட்சிகளை வைத்து இப்போதும் படங்களை எடுத்து, வெளியிட்டு, வெற்றி கண்டு வருகிறார்கள்.

இதே போன்று எம்ஜிஆர் நடித்து கைவிடப்பட்ட படங்களின் காட்சிகளையும் தேடி எடுத்து அவற்றையும் எம்ஜிஆரின் பிறந்தநாள் அல்லது நினைவுநாளின்போது தொலைக்காட்சிகளில் அவரின் நினைவாக ஒளிபரப்பினால் எம்ஜிஆரின் சீடர்கள், ரசிகர்கள் அபிமானிகள், ஆதரவாளர்கள் ஆகியோர் கண்டு மிகுந்த திருப்தி அடைவது உறுதி.

– ஆர்.நூருல்லா, பத்திரிகையாளர்

Comments (0)
Add Comment