கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான தாமரையின் நேர்காணல் இருந்து ஒரு பகுதி.
உங்களது பாடல்களில், கதையை பாடலாகக் கேட்பதுபோல் இருக்கும். அதில், உவமையும் இருக்கும், கவிதையும் இருக்கும். இந்த பாணியை எப்படி கைக்கொண்டீர்கள்?
கவிஞர் தாமரை :
இதற்கு என் கற்பனை, இயல்பான தமிழார்வம் போன்றவை காரணமாக இருக்கலாம். தனிப்பட்ட திறமை என்றும் சொல்லலாம்.
நான் சிறுவயதில் இருந்தே அதிகமாக பாடல்களைக் கேட்டு வளர்ந்தவள். 60களில், 70களில் வந்த பாடல்கள் எல்லாம் வரிகளாக, காட்சிகளாக மனதில் படிமங்களாகவே படிந்திருக்கின்றன.
எம்.எஸ்.வி, கண்ணதாசன், வாலி, டி.எம்.எஸ், பி.சுசிலா போன்றோரெல்லாம் மிகப்பிடித்தவர்கள்.
ரசிகையாக இவர்களது பாடல்களைக் கேட்டு, பாடலென்றால் எப்படி இருக்க வேண்டும் என மனதில் உருக்கொண்டுவிட்டது.
ஒரு பாடலை எழுதும்போது வேறு உலகத்திற்குப் போய்விடுவேன். ஆணுக்கு எழுதும்போது ஆணாகவும், பெண்ணுக்கு எழுதும்போது பெண்ணாகவும் இருப்பேன்.
ஒரு பாடலை எழுதுவதற்கு நீங்கள் பின்பற்றும் முறைகள் என்ன?
தாமரை :
பொதுவாக பாடல் எழுதும்போது சில கேள்விகள் எழும். அந்தப் பாடல் நடக்கும் காலம், நேரம்.. காதல் பாடல் என்றால் அந்த காதல் கைகூடுமா? கூடாதா?
கல்யாணத்திற்கு முந்தைய காதலா? அல்லது தம்பதிக்குள் நிகழும் காதலா? அவர்களிடையே அதுவரை நடந்தது என்ன? இந்தப் பாடலுக்குப் பின் அவர்களுக்கு நடக்கப்போவதென்ன? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் எழும்.
யார் ஒளிப்பதிவாளர்? எங்கே படமாக்கப்போகிறீகள்? என்பது வரை இயக்குநரிடம் கேட்பேன்.
இந்த உரையாடலில்தான் பாடலை எப்படி எழுதப்போகிறோம் என்ற உத்தி பிடிபடும். கதையை முன்பே கேட்டுவிடுவதால் ஒரு படத்தில் கதாநாயகன் உயிரிழக்கப்போகிறார் என்பதுகூட எனக்குத் தெரியும்.
பாடலின் உச்ச உணர்வை ஒரு சொல்லில் அல்லது ஒரு வரியில், கேட்பவர்களுக்குக் கடத்த, கதையின் அழுத்தமான காட்சிகளைத் தெரிந்துகொள்வது அவசியம் என நினைக்கிறேன்.
எனவே, ஒரு படத்தில் ஒரு பாடலை மட்டுமே எழுதினால் கூட, முழு கதையையும் கேட்ட பின்பே எழுதுவேன். எப்போதும் அப்படித்தான்.
உதாரணத்திற்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல முடியுமா?
தாமரை :
சுப்ரமணியபுரம் படத்தில் ‘கண்கள் இரண்டால்’ பாடலில் வரும் ‘தடையில்லை சாவிலுமே உன்னோடு வர’ எனும் வரி கூட திரைப்படத்தின் இறுதிக்காட்சியை ஒட்டி எழுதியதுதான்.
அந்த பாடல் அவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்பதை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
அக்காலகட்டங்களில், இறப்பு எனும் சொல்லை அமங்கலம் எனக் கூறி பாடலில் இடம்பெற விடமாட்டார்கள். ஆனால், நாங்கள் அந்த மரபை உடைத்தோம்.
உங்கள் காதல் பாடல்களில் வீடு குறித்தான விவரணைகள் அதிகம் வருகின்றனவே? உதாரணத்திற்கு, ‘என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்’, ‘பெண் உனை தேடும் எந்தன் வீடு’, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. காரணத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
தாமரை :
உளவியல் ரீதியாகவும் இதைச் பார்க்கலாம். ஆணின் அக உலகமும் பெண்ணின் அக உலகமும் வேறுவேறானவை.
திருமணம் என்று வந்தால், தனக்கான வீட்டை எப்படி அமைக்க வேண்டும் என்றுதான் பெண் முதலில் யோசிப்பாள். ஆண் வீட்டைத் தவிர மற்றதை எல்லாம் யோசிப்பான். நானும் ஒரு வீட்டுப் பறவை.
அதிகம் வெளியில் செல்லமாட்டேன். எங்கேயாவது சென்றாலும் வீடு திரும்புவதே நோக்கமாக இருக்கும். எனவே, வீடு குறித்த வரிகள் பாடல்களில் அதிகம் வெளிப்படுகிறது போலும்.
உங்களது வரிகளுக்கு உங்கள் வாசிப்பு எந்த அளவிற்கு கைகொடுத்துள்ளது?
தாமரை :
நான் ஒரு புத்தகப்புழு. வீட்டில் அவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன. சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பதும், பாடல் கேட்பதும்தான் எனக்கு வேலைகள்.
புத்தகமும் பாடலும் வளர்த்த பிள்ளை நான். அந்த அத்திவாரத்தில்தான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. நன்றாக எழுத விரும்பினால் நிறைய படியுங்கள். இதுதான் என் அறிவுரை.
‘தமிழுக்காகவும், படைப்புகளுக்காகவுமே என் கற்பனை. வியாபாரத்திற்காக அல்ல’ என்பது உங்கள் கொள்கை. ஆனால், இன்றைய தலைமுறையில் ஆங்கிலம்தான் எல்லாமே என்று ஆகிவிட்டதே?
தாமரை :
ஆங்கில வார்த்தைகள்தாம் இன்று தமிழாக பலர் மனதில் பதிந்துள்ளன. ஒரு தலைமுறையே ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறது. மொழி நம் கண் முன்னேயே சீரழிகிறது. அழிந்துவிடுமோ என்ற பயம் வருகிறது.
மொழியை யார் காப்பாற்றுவது? நானும் நீங்களும்தான் காப்பாற்ற வேண்டும்.
நான் 28 ஆண்டுகளாகப் பாடல்கள் எழுதுகிறேன். நான் சொல்ல நினைத்த உணர்வுகளையெல்லாம் தமிழில்தான் சொல்லியுள்ளேன்.
ரசிகர்கள் என் பாடல்களைக் குறித்து உணர்வுபூர்வமாகப் பேசுகிறார்கள்.
ஆக, பாடல்களில் உணர்வைக் கடத்த முடியும்போது பேச்சில் முடியாதா? ரசிகர்களை கைகூப்பி ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். ஆங்கிலம் கலவாத தமிழில் பேசுங்கள்.
நன்றி: புதிய தலைமுறை