2013-ம் ஆண்டு ஃபெடே அல்வாரெஸ் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர், திரில்லர் படமான ‘ஈவில் டெட்’ ரசிகர்களை மரண பயத்தின் உச்சியில் நடுங்க வைக்கும் அளவிற்கு அமைந்திருக்கும். ரோடோ சயாகுஸுடன் இணைந்து இந்தத் திரைக்கதையை ஃபெடே அல்வாரெஸ் எழுதியுள்ளார்.
ஈவில் டெட் படத்தில் ஜேன் லெவி, ஷிலோ பெர்னாண்டஸ், லூ டெய்லர் புச்சி, ஜெசிகா லூகாஸ் மற்றும் எலிசபெத் பிளாக்மோர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்தவர்களுக்கு பிலிம் பேர் விருதுகளும் கிடைத்தது. சிறந்த ஹாரர் படம் என விருதையும் வென்றது ‘ஈவில் டெட்’ திரைப்படம்.
ஈவில் டெட் படத்தைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘டோண்ட் ப்ரீத்’ படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார் ஃபெடே அல்வாரெஸ். இந்தப் படம் ஹாலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், ஃபெடே அல்வாரெஸ் தற்போது இயக்கியிருக்கும் படம் ‘ஏலியன்: ரோமுலஸ்’. ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கெய்லி ஸ்பேனி, டேவிட் ஜான்சன், ஆர்ச்சி ரெனாக்ஸ், இசபெலா மெர்சிட், ஸ்பைக் ஃபியர்ன், ஐலீன் வு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டிவென்டியத் செஞ்சுரி ஸ்டூடியோஸ் இந்தியா, இந்தப் படத்தை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வரும் 23-ம் தேதி வெளியிடுகிறது. சயின்ஸ் பிக்ஷன், ஹாரர் படமான இது, உண்மையிலேயே திகிலூட்டும் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்கிறது படக்குழு.