தமிழ் சினிமாவில் முக்கிய வில்லனாக இருப்பவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கான பாத்திரங்கள் சரியாக அமையாமல் இருந்ததால், இவரது நடிப்பு பெரிதாகப் பேசப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் விநாயகத்திற்கு மிகச் சரியான வாய்ப்பு கிடைத்தது. அதில், ரஜினிக்கு வில்லானாக நடித்திருந்தார்.
ஜெயிலர் படத்தில் வர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அந்த அளவிற்கு ரசிகர்களிடையே பிரபலமான ஒரு வில்லனாக அறியப்பட்டார் நடிகர் விநாயகன்.
இந்நிலையில் தற்போது கதையின் நாயகனாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி வில்லனாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தான் இதில் ஆச்சரியமான செய்தி.
மம்மூட்டியின் சொந்த நிறுவனமான மம்மூட்டி கம்பெனியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
அறிமுக இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மம்மூட்டியும் இந்தப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
விநாயகனும் மம்மூட்டியும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.