ரசிகர்களைக் கவர்ந்த விமல் படங்கள்!

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திர நடிகர்கள் கோலோச்சி வந்திருக்கின்றனர்.

அவர்களது படங்களுக்குப் போட்டியாகச் சில சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகியிருக்கின்றன.

அதில் நடித்த கலைஞர்கள் சட்டென்று புகழ் பெற்று நட்சத்திரங்களுக்குச் சவால் விடும் வகையில் வளர்ந்திருக்கின்றனர்.

ஆனால், கால ஓட்டத்தில் ஏதோ சில காரணங்களால் அவர்களது பயணத்தில் சுணக்கம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அதையும் தாண்டி எதிர்நீச்சல் போட்டுத் தன்னை நிரூபித்தவர்கள் ஏராளம்.

அப்படியொரு நடிப்புக் கலைஞர் தான் நடிகர் விமல்.

துணைப் பாத்திரங்களாக..!

ரமேஷ் என்ற இயற்பெயருடைய விமல், பிரதான பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசையோடு ‘கூத்துப்பட்டறை’யில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.

‘ஜாலி மேன்’ என்று சொல்லும்படியாக கலாட்டாக்களை அரங்கேற்றிய இளமைப் பருவத்தைக் கொண்டவர். அப்படிப்பட்டவருக்குத் திரையுலகில் உடனடியாக நாயக வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை.

நெப்போலியன், உதயா, ஜெயா சீல் நடிப்பில், 2001இல் வெளியான ‘கலகலப்பு’ படத்தில் சிறு பாத்திரத்தில் தலைகாட்டியவர் விமல்.

சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரில் தயாரான சுந்தர்.சியின் படத்தில் அவர் நாயகனாக நடித்தது காலம் உருவாக்கிய மாற்றம்.

கில்லி, கிரீடம், குருவி, பந்தயம், தெனாவெட்டு போன்ற படங்களில் நாயகர்களின் நண்பர்களில் ஒருவராகக் கூட்டத்தில் இடம்பிடித்தார் விமல். இயக்குநர் பிரியதர்ஷனின் ‘காஞ்சிவரம்’ படத்தில் துணை பாத்திரம் ஏற்று நடித்தார்.

அந்தக் காலகட்டத்தில், நாயக வாய்ப்புகள் தேடிப் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களைச் சந்தித்தார். அப்படித் தனது கூத்துப்பட்டறை நண்பர்கள் மூலமாக, பாண்டிராஜின் ‘பசங்க’ படத்தில் நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது.

நாயகனாகத் தந்த வெற்றிகள்!

‘பசங்க’ படத்தில் விமல் ஏற்று நடித்த மீனாட்சி சுந்தரம் பாத்திரம், மிகச்சாதாரணமான இளைஞர்களில் ஒருவராக அவரைக் காட்டியது. அதேநேரத்தில், அப்படித் திரிகிற மனிதர்களிடத்திலும் ‘நாயக குணம்’ உண்டு என்று சொன்னது.

அதன்பிறகு, சற்குணம் இயக்கிய ‘களவாணி’ படத்தில் வரும் அறிக்கி என்ற அறிவழகன் பாத்திரம் விமலின் உடல்மொழி, வசன உச்சரிப்புக்கு என்று உருவாக்கப்பட்ட பாத்திரமாக அமைந்தது.

தொடர்ந்து தூங்கா நகரம், எத்தன், வாகை சூடவா, கலகலப்பு என்று வெற்றிப்படங்களாகத் தந்தார் விமல். இவற்றில் ‘எத்தன்’ படத்தில் விமலின் காமெடி நடிப்பு அட்டகாசமாக இருக்கும்.

‘கலகலப்பு’ படத்தில் இன்னொரு நாயகன் மிர்ச்சி சிவா, ஜான் விஜய், ஜார்ஜ் மரியான், சுப்பு பஞ்சு, கருணாகரன் என்று பெருஞ்கூட்டமே நடித்திருந்தது. அதையும் மீறி நடிப்பில் ‘ஸ்கோர்’ செய்தார் விமல்.

அந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த ‘இஷ்டம்’, ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதோடு அவை வழக்கமான கமர்ஷியல் படங்களாகவே ரசிகர்களால் நோக்கப்பட்டன.

அதை மீறி தேசிங்கு ராஜா, புலிவால், மஞ்சப்பை படங்கள் வெற்றிகளை ஈட்டின.

ஆனால், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு விமல் நடித்த பல படங்கள் வித்தியாசமான காம்பினேஷன்களாக அமைந்தும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. தியேட்டரில் முழுமையான, திருப்தியான, சிறப்பான திரையனுபவத்தைத் தரவில்லை.

மாப்ளசிங்கம், மன்னர் வகையறா, களவாணி 2 என்று வந்த ஒரு டஜன் படங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு வெளியான ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ மட்டுமே கொஞ்சமாய் கவனம் ஈர்த்தது.

இதோ இப்போது ‘தேசிங்கு ராஜா 2’, ‘பரமசிவன் பாத்திமா’ உட்பட நான்கைந்து படங்கள் விமல் நடிப்பில் வெளியாக இருக்கின்றன. அவற்றிலாவது விமல் தனது பழைய மாயாஜாலத்தைச் சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சறுக்கல் எங்கே?

அலட்டலான உடல்மொழி, முனகுகிற மாதிரியான வசன உச்சரிப்பு, எள்ளலும் எகத்தாளமும் மிகுந்த மனோபாவம் என்று விமல் நடித்த பாத்திரங்கள் குறிப்பிட்ட வார்ப்பிலேயே இருந்தன.

எப்படி எண்பதுகளில் பாக்யராஜ் தனக்கென்று தனி பாணியை வகுத்துக் கொண்டாரோ, அதே மாதிரியான இமேஜ் விமலுக்குத் தானாக அமைந்தது.

ஆனால், அதனைப் புறந்தள்ளிவிட்டு வித்தியாசமாக அவர் மேற்கொண்ட சில முயற்சிகள் எடுபடவில்லை.

குடும்பத்தோடு தியேட்டருக்கு வருகிறவர்களை ஈர்க்கிற நடிப்பு விமலின் ப்ளஸ். அதனைத் தொடர்ந்து தருகிற பட்சத்தில், அவர் படங்கள் வெற்றியைக் குவிக்கக் கூடும். அதற்கேற்ற கதைகளை அவர் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

கடந்த காலத்தில் அவர் அவ்வாறு தேர்ந்தெடுத்த கதைகள் நல்ல திரையனுபவத்தைத் தரவில்லை என்பதே உண்மை.

அதனை உணர்ந்து, நல்லதொரு குழு உடன் இணைந்து செயலாற்றும்போது விமல் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப சிறப்பான திரையனுபவங்களை அளிப்பார்.

அப்படியொரு நம்பிக்கையை இந்த பிறந்தநாள் விமலுக்கு வழங்க வேண்டும். அவருக்கு நமது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

– மாபா

Comments (0)
Add Comment