‘தளபதி’ விஜய், இப்போது சினிமா, அரசியல் என இரட்டைப் படகுகளில் சவாரி செய்து கொண்டிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள அவர், இனிமேல் அரசியல் மட்டுமே என தீர்க்கமான முடிவை எடுத்து விட்டார்.
இப்போது விஜய் ‘THE G.O.A.T.’ (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவரது 68-வது படம். இனி ஒரு சினிமாவில் நடித்து விட்டு, புதிய பயணத்துக்கு அவர் தயாராகியுள்ளார்.
தனது ரசிகர்களையும் தயார்ப்படுத்திவிட்டார். அவரது 69-வது மற்றும் கடைசிப் படத்தை எச். வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. திரைக்கதையை அவர் தயார் செய்து விட்டார். செப்டம்பர் மத்தியில் ‘ஷுட்டிங்’ தொடங்கி விடும்.
விஜயின் கடைசிப் படத்துக்கு முந்தையப் படமான ‘கோட்’ படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
புனைவுக்கதையில் சில நிஜ சம்பவங்களைக் கோர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், விஜய்.
பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த், அஜய் ராஜ், லைலா ஆகியோருடன், விஜய் ஜோடியாக சினேகா, மீனாட்சி நடித்துள்ளனர்.
முத்துக்கள் மூன்று இந்தப் படத்தில் ஏகப்பட்ட பரிசோதனை முயற்சிகளை செய்துள்ளார், வெங்கட் பிரபு. அதில் முக்கியமான மூன்று விஷயங்களைப் பார்ப்போம்.
இந்தப் படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் அவரை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இதற்காக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை, வெங்கட்பிரபு நேரில் சந்தித்து அனுமதி பெற்றார்.
மறைந்த பவதாரிணியும், ‘இறப்பு’க்குப் பின்னர், இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் மூலம், இது சாத்தியமாகியுள்ளது.
பவதாரிணியின் குரலை எடுத்து ‘FEED’ செய்து, வேறு ஒரு பாடகி அதனை பாட, பாடலில் அந்தக் குரல் பவதாரிணியின் குரலாகவே ஒலிக்கும்.
இந்தப் பாடலின் ஆண் குரலுக்கு பாடி இருப்பவர், ‘சாட்ஜாத்’ விஜயே தான்.
‘டீ-ஏஜிங்’ தொழில்நுட்பம் மூலம், மகன் விஜயை, ‘தி கோட்’ படத்தில் மிகவும் இளைமையாக காட்டி உள்ளனர். இதற்காக வெளிநாடுகளுக்கெல்லாம் பறந்து மெனக்கெட்டுள்ளார், வெங்கட்பிரபு.
அடுத்த மாதம் 5-ம் தேதி ‘கோட்’ உலகம் முழுவதும் ‘ரிலீஸ்’ ஆக உள்ள நிலையில், அண்மையில் இதன் ‘டிரெய்லர்’ வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனை பார்த்த அஜித், வெங்கட்பிரபுவை போனில் தொடர்பு கொண்டு ‘கோட் டிரெய்லர் ‘சூப்பர்’ உங்களுக்கும், விஜய்க்கும் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.
விஜய் திடீர் சந்திப்பு:
இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் நேற்று (திங்கள் கிழமை) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
‘தி கோட்’ படத்தில் விஜயகாந்தை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் பிரேமலதாவை, விஜய் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி தெரிவித்த பின் விஜயகாந்தின் திருவுருவப் படத்துக்கு விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.
சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெங்கட் பிரபு, “விஜயகாந்த் ஆசியுடன் ‘தி கோட்” என பதிவிட்டுள்ளார்.
பிரேமலதாவும், விஜயும் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக உள்ள நிலையில் இருவரும், இந்த சந்திப்பின் போது, அரசியல் பேசவில்லை என இரு தரப்பும் விளக்கம் அளித்துள்ளன.
– பாப்பாங்குளம் பாரதி.
#விஜய் #Vijay #வெங்கட்பிரபு #Venkatprabhu #கோட் #GOAT #ஏஜிஎஸ் #AGS #கேப்டன்_விஜயகாந்த் #Captain_Vijayakanth #பிரேமலதா_விஜயகாந்த் #Premalatha_Vijayakanth #தயாரிப்பாளர்_அர்ச்சனா_கல்பாத்தி #Producer_Archana_Kalpathi #விஜய_பிரபாகரன் #Vijaya_prabhakaran