தமிழ் சினிமாவில் 90 காலங்களில் கதாநாயகனாக வலம் வந்தவர், சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட நடிகர் பிரசாந்த். இவர் நடித்த அனைத்துத் திரைப்படங்களும் 90-ஸ் கிட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன்பின்னர் சில ஆண்டுகளாக பிரசாந்த் திரைப்படங்களில் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் பிரசாந்த் மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது ‘அந்தகன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். பட நிகழ்ச்சியில் இப்படத்தைப் பற்றிப் பேசிய தியாகராஜன், “பிரசாந்த் ரசிகர் ஒருவர் வண்டி ஓட்டும்போது கீழே விழுந்து இறந்து விட்டார்.
இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த பிரசாந்த் தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராகச் சென்று ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
விபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 5 ஆயிரம் ரசிகர்களுக்கு பிரசாந்த் இலவச ஹெல்மெட் வழங்கி உள்ளார்.
5 ஆயிரம் பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார். ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டாதீர்கள். ஹெல்மெட் அணியாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றெல்லாம் விழிப்புணர்வு செய்தார்.
சிறுவயதில் இருந்தே பிரசாந்துக்கு பியானோ இசைக்கத் தெரியும் என்பதால் அந்தகன் படத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்தியில் வெளியான இந்தப் படத்தின் தமிழ் உரிமையைக் கடும் போட்டிக்கு மத்தியில் நாங்கள் வாங்கினோம்.” என்றார்.
சமீபத்தில் ‘அந்தகன்’ பட புரமோஷன் நிகழ்ச்சிக்குச் சென்றபோது நடிகர் பிரசாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டியதாக சர்ச்சைக் கிளம்பியது.