ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணம்!

திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து

சினிமாவில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் நெப்போலியன், அரசியலிலும் நுழைந்து, மத்திய அமைச்சர் பதவிவரை உயர்ந்தவர்.

மனைவி பெயர் ஜெயசுதா. இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

தனுஷ் சிறு வயதிலேயே தசைச் சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரால் எழுந்து நடக்க முடியாது. வீல்-சேர் உதவியோடு தான் தன்னுடைய வேலைகளை செய்து கொள்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறிய நெப்போலியன், அங்கு ஜீவன் டெக்னாலஜீஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார்.

மகன் தனுஷுக்கு, திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை நெப்போலியன் குடும்பத்தார் நிச்சயம் செய்தனர்.

தனுஷ் – அக்ஷயா திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாப்பிள்ளை தனுஷ் வீல்சேரில் அமர்ந்திருக்க, அவர் பக்கத்தில் மணப்பெண் அக்ஷயா நின்று கொண்டிருந்தார்.

தாலி கட்டும் நேரத்தில் தனுஷால் கைகளை தூக்கி தாலி கட்ட முடியாது என்பதால் அவருடைய தாயார் உதவி செய்தார்.

தனுஷால் கைகளை முழுமையாக தூக்கி மாலை போட முடியாது. எனவே, மணமகள் அக்ஷயா தலை குனிந்து மாலையை வாங்கிக் கொண்டார். பின்னர் அவரே, தனுஷின் மாலையை சரி செய்தார். அப்போது நெப்போலியன் மற்றும் அங்கு குழுமி இருந்தோர் கண்கலங்கினர்.

திருமணத்தில் தமிழ்த் திரை உலக நட்சத்திரங்கள் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, பாண்டிராஜன், விதார்த், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மெஹந்தி விழாவில் திரையுலகினர் பலரும் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment