நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.
ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படம் வரும் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாவதையொட்டி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை விஜயா போரம் மாலில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன், “ஜித்தன் ரமேஷ் என்கிற ஒரு நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட படம் இது. எனக்கும் அவருக்கும் நான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடி வந்த காலத்திலிருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது.
படப்பிடிப்பை கிட்டத்தட்ட பத்து ஷெட்யூல்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். தாங்க முடியாத கடும் வெப்பத்தில் 29 நாட்கள் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ்.
பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு அறையில் காட்சிகளை படமாக்கியபோது ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வெளியே வந்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொண்டு அதன்பிறகு மீண்டும் அந்த காட்சியில் நடிப்பதற்காக கீழே வந்து விடுவார்.
இதுகுறித்து பேசிய நடிகை கோமல் சர்மா, “இயக்குனர் அபிலாஷுடன் அமர்ந்து இந்தப் படத்தை பார்த்தேன். இடையில் பிரேக் விட்டபோது கூட எதற்காக படம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும்போது இப்படி நிறுத்துகிறார்கள் என்று நினைக்கும் அளவிற்கு படு வேகமாக கதை நகர்கிறது. என்றார்.
இதை தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் அவுசப்பச்சன், “திரையுலகில் எனது பொன்விழா ஆண்டில் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படத்திற்கு இசையமைக்கிறேன். நான் இருபது வயது வரை தான் முழுவதும் கேரளாவில் வாசித்தேன். எனது சினிமா பயணத்தை இங்கே சென்னையில் தான் துவங்கினேன்.
கிட்டத்தட்ட 75 சதவீத நாட்கள் இங்கே சென்னையில் தான் இருந்துள்ளேன். இதுவரை பல நூறு படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் தமிழில் ஏன் நீங்கள் இசையமைக்கவில்லை என கேட்டகிறார்கள்.
எனது 35வது வருட திரையுலக பயணத்தின் போதுதான் என்னிடம் பணியாற்றிய வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லோரும் தமிழ் சினிமாவில் பிரமாதமாக இசையமைத்துக்கொண்டு இருந்தார்கள். நான் போய் ஏன் அவர்களை கெடுக்க வேண்டும் என மலையாள திரையுலகிலேயே நின்று விட்டேன்” என்றார்.
இதை அடுத்து பேசிய நாயகன் ஜித்தன் ரமேஷ் 90% படம் காட்டில் தான் படமாக்கப்பட்டது அதிலும் நிறைய காட்சிகள் ஒரு குகையில் தான் எடுக்கப்பட்டன.
அந்த குகைக்குள் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் இருந்து நடித்தோம். மூச்சு விடவே சிரமப்பட்டோம்.
இந்தப் படத்தின் பட்ஜெட்டிலேயே மெழுகுவர்த்திக்கு தான் அதிகம் செலவழித்து இருப்பார்கள் என நினைக்கிறன். அந்த அளவிற்கு படப்பிடிப்பு தளத்தில் மெழுகுவர்த்தி பயன்பட்டது.
இந்தப் படத்தின் நாயகி அஞ்சு, தண்ணீரில் குளித்ததை விட சேற்றில் தான் அதிகம் குளித்து இருப்பார். கிட்டத்தட்ட 30 நாட்கள் இதே போன்று தான் அவரது நிலை இருந்தது. இடையில் கால் உடைந்து ஓய்வு எடுக்க வேண்டியது கூட இருந்தது. ஆனாலும் தனது பணியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். என்று கூறினார்.