சோ ஏத்துக்கலைனா படம் வெற்றி தான்!

- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பற்றி சோ

“நான் வக்கீலாக, லீகல் அட்வைசராக, நடிகராக, டைரக்டராக, பத்திரிகை ஆசிரியராக பல ஆண்டுகள் இருந்திருக்கிறேன். பலதரப்பட்ட அரசியல்வாதிகளுடன், மக்களுடன் பழகி இருக்கிறேன்.

“இவ்வளவு பேரில் குறையே சொல்ல முடியாத ஒரு மனிதரைச் சொல்லு” என்று என்னிடம் யாராவது கேட்டால், நான் உடனே சொல்கிற பெயர் எஸ்.பி.முத்துராமனாகத்தான் இருக்கும்.

அவரை மாதிரி ஒரு மனிதரைப் பார்ப்பது ரொம்பக் கஷ்டம்.

அதாவது காற்றே இல்லாத இடத்தில் ஒரு விளக்கின் ஜோதி அசையாமல் எப்படி இருக்குமோ அந்த மாதிரி என்று உதாரணம் சொல்லப்படுகிறதே, அப்படிப்பட்ட சலனமில்லாத மனிதர் எஸ்.பி.எம்.

சினிமாத் துறையில் பெரியவர்கள், சின்னவர்கள் என்கிற பாரபட்சம் காட்டாத மனிதர்.

துணை நடிகர்களிடம் அவ்வளவு மரியாதைக் காட்டுவார். அவரை புரொடியூசரின் டிலைட் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்கள் சந்தோஷப்படக் கூடிய டைரக்டர்.

இவரே படத் தயாரிப்பாளரான மாதிரி படப்பிடிப்பைக் கச்சிதமாக திட்டமிட்டு, நேரத்தை வீணடிக்காமல், செலவை அனாவசியமாக அதிகரிக்காமல், சொன்னால் சொன்ன நேரத்தில் படத்தை முடிக்கக் கூடியவர்.

சினிமாவில் அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதபடி மிக எளிமையாக இருப்பார். முக்கியமாக ‘தலைக்கனம்’ இல்லாமல் இருப்பார்.
நண்பர் ரஜினியை வைத்து அதிகப் படங்களை இயக்கியவர் எஸ்.பி.எம்.

கமல், ஜெய்சங்கர், சிவகுமார் என்று பலரை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். அவர்கள் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

அவருடன் பணியாற்றியவர்கள் வீட்டில் திருமணங்கள் நடந்தால் இவரே அந்த வீட்டில் ஒருவரைப் போல இறங்கி வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். அவரிடம் யாரும் போய்ச் சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை.

தன்னைச் சற்றும் விளம்பரப்படுத்திக் கொள்வதை விரும்பாதவர்.

ஷூட்டிங்கின்போது நடக்கும் எந்தச் சம்பவமும் அவரைப் பதற்றப்பட வைக்காது. கிரேனில் ஏறிக் கஷ்டப்பட்டு எடுத்த ஒரு ஷாட் சரியாக வரவில்லை என்றாலும் எந்தப் பதற்றத்தையும் அவரிடம் பார்க்க முடியாது.

படப்பிடிப்பின்போது எது நடந்தாலும் அதை அமைதியாக ஏற்றுக் கொள்வார். சினிமாவில் இந்த மாதிரியான மனநிலையுடன் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஒரு படத்தின் வெற்றி, தோல்வி அவரைப் பெரிய அளவில் பாதித்து விடாது. ஒரு படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாவிட்டால், சரி அடுத்த படத்தை இன்னும் கவனம் செலுத்திப் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் தான் அவரிடம் இருக்கும்.

எதையும் திட்டமிட்டு இயக்குகிற பழைய பாணி ஸ்கூலைச் சேர்ந்தவராக இருந்தாலும், மார்டனாக ரஜினி, கமலை வைத்தும் திட்டமிட்டு பல படங்களை எடுத்திருக்கிறார்.

எஸ்.பி.எம்.மின் தாராள மனதை வெளிக்காட்ட இந்தச் சம்பவத்தைச் சொல்லலாம்.

ரஜினி எஸ்.பி.எம்.காகவே ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து படம் எடுத்தார். அந்தப் படத்தின் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அந்தப் படம் நன்றாகப் போனது.

ரஜினி முயற்சி எடுத்து தனக்காகத் தயாரித்துக் கொடுத்து – அதன் மூலமாக வந்த பணத்தை எஸ்.பி.எம். என்ன பண்ணினார் தெரியுமா?

அந்தப் பணத்தைப் பங்கு போட்டு தன்னுடன் பணியாற்றியவர்கள் எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தார். ரஜினி படம் பண்ணியது இவர் ஒருவருக்காக.

ஆனால் இவர் அதிலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன்னுடன் உழைத்த யூனிட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பகிர்ந்து கொடுத்தார்.

இதுவும் சினிமாவில் பரவலாக இல்லாத அருமையான குணம்.

எதனாலேயோ என்னைக் கண்டால் அவருக்கு மிகவும் பிடிக்கும். இத்தனைக்கும் நான் பல விஷயங்களில் தலையிட்டிருக்கிறேன். அவருடைய பல படங்களில் நான் நடித்து இருக்கிறேன்.

அவருடைய டைரக்ஷனில் ‘மனிதன்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என்று பல படங்களில் நானும் ரஜினியும் இணைந்து நடித்திருக்கிறோம்.

ஷூட்டிங் இருக்கிற நாட்களில் நான் செட்டுக்குள் நுழையும்போதே “ஷூட்டிங் எப்போ முடியும்?” என்று கேட்பேன்.

“மூன்று மணிக்குள் முடித்து விடுவேன்” என்று ஒரு நேரத்தைக் குறிப்பிட்டுச் செல்வார் எஸ்.பி.எம்.

அதன்படி சரியான நேரத்தில் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விட்டு அனுப்பி விடுவார். அவர் மீது பலருக்கும் இருந்த மரியாதைக்கு அதுவும் ஒரு காரணம், ரஜினி முதற்கொண்டு பலர் அவருடைய இயல்பு தெரிந்து ஒத்துழைத்திருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோவாக இருந்தாலும் “சோ-வை எப்படி முதலில் அனுப்பி வைக்கலாம்?” என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

‘ஆறிலிருந்து அறுபது வரை’ அவருடைய டைரக்ஷனில் வெளியாகி வெற்றி பெற்ற படம்.
ரஜினியே அவருடைய வழக்கமான பாணியிலிருந்து மாற்றி வித்தியாசமான, கனமான பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். எனக்கும் அதில் சீரியசான ரோல்.

ஒரு பத்திரிகை ஆசிரியர் கதாபாத்திரம்.

அதனால் படத்தை ஆரம்பிக்கும் போதே “வழக்கமாக உங்களுக்கு உண்டான எதுவும் இதில் கிடையாது” என்று தெளிவாகச் சொல்லி விட்டார்.

சோகத்தை மையமாகக் கொண்டிருந்த அந்தப் படமும் வெற்றி பெற்றது என்றால் அதற்குக் காரணம் எஸ்.பி.எம் தான்.

அவருடைய டைரக்ஷனில் ரஜினியும் நானும் இணைந்து நடித்த ‘குரு சிஷ்யன்’ படத்தில் கடைசி சீன்.

தங்கப் புதையலை நாங்கள் தேடிப் போகிற மாதிரியான காட்சி. நெருப்பு ஆறு மாதிரி ஓடும். ஒரு தலையைத் திருகினால் கதவு திறக்கும். ஒரே புகை மூட்டமாக இருக்கும்.

இந்த மாயாஜாலத்தை எல்லாம் பார்த்து நான் அசந்துபோய் எஸ்.பி.எம்.மிடம், “என்ன சார் இது. பாதாள பைரவி மாதிரி இருக்கே சார்” என்று கேட்டேன் சிரித்துக்கொண்டே.

என்னிடம் “உன்னால் இதை ஏத்துக்க முடியலையா?” என்று அவர் கேட்டார்.
“ஆமா… சார்… ஏத்துக்க முடியலை”

உடனே சத்தம் போட்டு, “சோ-வால் ஏத்துக்க முடியலை.. அதனால் படம் சக்சஸ். வெற்றி தான் நமக்கு” – உரத்த குரலில் சொன்னார் எஸ்.பி.எம்.

அவர் சொன்னபடியே அந்தப் படமும் நன்றாகப் போனது.

எஸ்.பி.எம். கலைஞருடைய அபிமானி. அவரை அவருக்கு மிகவும் பிடிக்கும் தனிப்பட்ட முறையில் தான். அரசியல் ரீதியாக அவருக்கு என்ன கருத்து இருக்கிறது என்று அவருக்கும், ஓட்டுப் போடுகிற மிஷினுக்கும் மட்டும்தான் தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது.

அவருடைய தந்தை சுப்பையா திமுகவில் முக்கிய பிரமுகர். திமுகவினரால் மிகவும் மதிக்கப்பட்டவர். படத்தில் நான் அரசியல் கலந்த டயலாக்குகளைப் பேசும்போது அதில் திமுக மீதான விமர்சனம் இருக்கும்.

நான் வசனத்தைப் பேசுவதற்கு முன்பு எஸ்.பி.எம்.மிடம், “சார் திமுகவை விமர்சிக்கிற மாதிரி இருக்கும்.. பரவாயில்லையா?” என்று கேட்டால், “தாராளமாகப் பேசுங்க சார்.. தனிப்பட்ட முறையில் என்னுடைய ஈடுபாடு வேற.. இது சினிமா.. இது வேற.. நீங்க பேசுங்க சார்.. ஒண்ணே ஒண்ணு.. சென்சாரில் கட் ஆகாமப் பண்ணுங்க” என்று பொறுமையாகச் சொல்வார்.

அந்தக் காட்சியை நன்றாக ரசித்து எடுத்துப் பரிமளிக்க வைப்பார். அந்தக் காட்சியைப் பார்க்கிற யாருக்கும், “சோ… எதையோ சேர்த்து விட்டிருக்கான்” என்று தோன்றுமே ஒழிய, அதை எடுத்த எஸ்.பி.எம்மைக் குறை சொல்லத் தோன்றாது.

எல்லோருக்கும் நண்பர் அவர். அவருக்கு பொறாமை என்பது கிடையாது. துவேஷம் கிடையாது. யார் மீதும் மனக் குறைகள் கிடையாது. ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று ஒரு பாட்டு வருமே அது கண்டிப்பாக இவருக்குப் பொருந்தும்.

படத்திற்கு அவசியம் தேவைப்பட்டால் தான் வெளிநாட்டுக்குப் போகிற மாதிரியான காட்சிகளை வைப்பார். அழகான செட்டுக்களைப் போடுவார். படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் திடீரென்று ஒன்றை வலுக்கட்டாயமாக நுழைக்க மாட்டார்.

தயாரிப்பாளரின் வலியை நன்றாக உணர்ந்த டைரக்டர் அவர். ஏவிஎம் நிறுவனத்திற்காக பல வெற்றிப் படங்களை இயக்கிக் கொடுத்திருக்கிற எஸ்.பி.எம். அந்த நிறுவனத்தை ஒரு கோயிலைப் போலத்தான் பார்த்தார்.

சரவணன் மீது அளவு கடந்த மரியாதை. தன்னை வளர்த்த அந்த நிறுவனத்தின் விசுவாசமா? பக்தியா? இவற்றில் எதை வகைப்படுத்த முடியும்?

அப்படி ஒரு நிறைந்த மனது எஸ்.பி.எம்.முக்கு.”

சோ-வின் ‘ஒசாமஅசா’ தொடர் – 25

எழுத்தும், தொகுப்பும் : மணா

 

Comments (0)
Add Comment