150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ஆரம்பத்தில் கன்னடப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து, பிறகு, அங்கு ஹீரோ ஆனவர்.
தமிழில் ‘நன்றி’ என்ற படத்தில் அவரை நாயகனாக அறிமுகம் செய்தவர் ராம. நாராயணன். கராத்தேயில் ‘பிளாக் பெல்ட்’ பெற்ற அர்ஜுன், அடிதடி சண்டைக் காட்சிகளில் நடித்து வந்தார்.
ஆரம்பக் காலத்தில் அவரது படங்கள் எல்லாம் சுமாரான வெற்றியைப் பெற்றன. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ‘சங்கர் குரு’ திரைப்படம், அர்ஜுனுக்கு முதல் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது.
அதன் பிறகு பல ஆண்டுகள் அவர், தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்துக்கொண்டிருந்தார். அர்ஜுனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஷங்கர்.
அவரின் முதல்படமான ‘ஜென்டில் மேன்’ அர்ஜுனை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
அதன்பின் இயக்குநராகவும், தன்னை உயர்த்திக்கொண்டார், அர்ஜுன். இதுவரை அவர் 15 படங்களை இயக்கியுள்ளார்.
அர்ஜுன் நடித்து, இயக்கிய ‘ஏழுமலை’ என்ற திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது. அவருக்கு, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் 22 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க அர்ஜுன் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தில் தனது மருமகன் உமாபதியை ஹீரோவாக நடிக்க வைக்க, அர்ஜுன் முடிவு செய்துள்ளார்.
(கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்தது)
‘ஏழுமலை’ இரண்டாம் பாகத்தில் உமாபதி ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடைசியாக விஜயின் ‘லியோ’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த அர்ஜுன் இப்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் வில்லன் கதாப்பாத்திரல் நடித்து வருகிறார்.
– பாப்பாங்குளம் பாரதி.