இயக்குநர்களுக்கு விமர்சனங்களைத் தாங்கும் பக்குவம் இல்லை!

-எஸ்.ஏ.சந்திரசேகர்

ஆக்ஷன் ஹீரோவாக வெற்றி நடைப்போட்ட ‘இளைய தளபதி’ விஜயின் மற்றொரு பரிமானத்தை வெளிக்கொணர்ந்த படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்தப் படத்தின் மூலம் தான் எழில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அந்தப்படம் வெளியாகி 25 ஆண்டுகளாகிறது. இதனையொட்டி ‘எழில் 25’ விழாவும், அவர் இயக்கிய ‘தேசிங்கு ராஜா – 2’ படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விஜயின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், காரசாரமாக பேசினார்.

அதன் சுருக்கம்:

‘எப்போதும் ஒரே மாதிரி பழகும் தன்மை கொண்டவர் இயக்குநர் எழில். என மகன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் அவர் வாழ்க்கையில் ஒரு மைல்கல்.

துள்ளாத மனமும் துள்ளும் படத்துக்குப் பின் தான் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகமானார்கள்.

நான் கதை கேட்கும் போது விஜய்யின் தந்தையாக கதை கேட்பதில்லை. சாதாரண ரசிகனாக சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுவேன்.

இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. ஹீரோ இருக்கும் வரை எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள்.

ஹீரோவால் தான் படம் ஓடுகிறது. எனவே இதன் மூலம் அவர் ஒரு பெரிய மனிதர் என்று இயக்குநர் நம்புகிறார். மனதில் தோன்றுவதை சொல்கிறேன். நல்ல கதையம்சம் இருந்தால் இந்தப் படங்கள் பெரிய வெற்றியைப் பெறும்.

இன்றைய இளம் இயக்குநர்களுக்கு விமர்சனங்களை தாங்கும் தைரியமோ, பக்குவமோ இல்லை’
இவ்வாறு மனம் திறந்து பேசினார், சந்திரசேகர்.

விழாவில் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment