திரைத் தெறிப்புகள்-40:
விச்சித்திரம் தான். கர்நாடக இசையுலகில் எம்.எல். வசந்தகுமாரி பாடுவதில் அடைந்த உயரம் பலருக்கும் தெரியும். அவரது மகளான ஸ்ரீ வித்யாவும், இசையும், நடனமும் கற்றவர் என்றாலும், திரையில் கர்நாடக இசைப் பாடகியாகப் பாடி நடித்திருக்கிற விசித்திரம் நிகழ்ந்து இருப்பது, 1975-ம் ஆண்டில் கே. பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில்.
“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி?
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்?
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…”
– என்று ஸ்வர மையமாக மிக மென்மையான வயலின் இசைப்பதைப் போன்ற குரலில் இந்தப் பாடலைப் பாடியிருப்பார் வாணி ஜெயராம்.
படத்தின் தலைப்புக்கேற்றபடி பல அபூர்வமான வரிகளை இப்பாடலில் எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.
“காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி.
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி.
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் – மனித
இன்பம் துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்.
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்.
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்?
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று”.
எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் இந்தப் பாடல் வரிகளில் தான் எவ்வளவு வாழ்வியல் சாயல்கள்?!
“ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை.
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை.
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் ? அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்.
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க!
அதை நடத்த ஒருவன் உண்டு கோயிலில் காண்க.
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க.
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல…”.
– என்று நிறைவு பெறும் இந்தப் பாடலின் துவக்கம், வாழ்க்கை குறித்த பல கேள்விகளை இயல்பாக எழுப்பினாலும், “எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல” என்று நம்பிக்கையை அழுத்தமாக ஊட்டும் இந்தப் பாடலை திரும்பவும் ஒருமுறை, எம்.எஸ்.வி.யின் மகத்தான இசையில் – வாணி ஜெயராமின் குழைவான இனிய குரலில் ஒலிப்பதைக் கேட்டுப் பாருங்கள்.
கேட்கிற கணத்தில் உங்கள் காதுகள் அற்புதமாக நிறையும் அனுபவத்தைப் பரிபூரணமாக உணர்வீர்கள்.
– மணா