நிவின் பாலி, அஞ்சலி, சூரி, நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கி இருக்கும் படம். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி வழங்க, ஆழி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்கிற – பிறப்பு இறப்பு என்று மாறி மாறி வந்தாலும் அதே மனிதனாக முந்தைய வாழ்க்கை நினைவுகளோடு பிறந்து பிறந்து அதே திறன்களோடு வாழும் ஒரு தமிழன்(நிவின் பாலி).
பல்வேறு பிறப்புகளிலும் ஒரே பெண்ணை (அஞ்சலி) காதலிப்பவன். அந்தப் பெண்ணுக்கு நினைவுத் தொடர்ச்சி இல்லை. ஒவ்வொரு பிறவியிலும் அவளுக்கு அதை நினைவூட்ட வேண்டும். சில பிறவிகளில் அவளைப் பார்த்து விட்டு மட்டும் கூட போய் விடுவது உண்டு.
ஒவ்வொரு பிறவியிலும் தமிழர்களின் மொழி, கலாச்சாரம் கருத்துகள் மாறுவதை – மாறுவது என்பதைவிட கெடுவதைக் கண்டு ஒவ்வொரு முறையும் வருந்துபவன் அல்லது பொங்குபவன்.
இன்றைய சூழலில் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு விடுமுறைக்கு தமிழகம் வந்து தனது ஊருக்கு போய்க்கொண்டு இருக்கும் நபரை (சூரி) ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கிறான் அவன்.
தீபாவளி நாள். வேறு யாருமில்லாத ரயில் பயணம். சுமார் மூன்று மணி நேரத்துக்கு இடைநிறுத்தம் இல்லாத அந்த பயணத்தில் இருவருக்குமான மொழிப் பயன்பாடு மாறுபாடு, கருத்து வேறுபாடு வளர்ந்து,
ஒரு நிலையில் கதவிடுக்கில் சிக்கிய ஒரு எலியை நாடு திரும்பும் தமிழன், ரயில் கதவு இடுக்கில் வைத்து கொல்லப் போக, அமரத் தமிழன் கோபப்பட,
நாடு திரும்பும் தமிழன் ‘எலிதானே’ என்று எளிதாகப் பேச, ‘அதுவும் ஓர் உயிர், அதன் வாழ்வுரிமை….’ என்று அமரத் தமிழன் கோபப்பட,
இருவருக்கும் எழும் மோதலின் விளைவு என்ன என்ற கோணத்திலான ஒரு கதையின் மூலம்.
பல்லாயிரம் ஆண்டு கால தமிழ் இனத்தின் வாழ்வும் கலாச்சரமும் இன்று எந்த நிலையில் உள்ளது; அமரத் தமிழன் இனி என்ன செய்யப் போகிறான் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எழுதியவன் ஒரு மனிதனே; தமிழனே.
ஆனால், இனி இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கொடுமையை இன்றைய தமிழர்களும் சகஜமாக ஏற்றுக் கொள்வதை கேள்வி கேட்கும் படம் இது.
தண்ணீர் இனி காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழலில் மனிதர்களைப் பார்த்து அஞ்சும் அணில்களும் பறவைகளும் கூட உயிர் பயத்தைவிட தாகம் பெருகி மனிதன் கையில் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டில்கள் பின்னால் கெஞ்சிக் கொண்டு ஓடி வருகிறதே… அதை நினைவுபடுத்தும் படம்.
பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு இயற்கையோடு – மற்ற உயிர்களோடு இணைந்து வாழ்ந்த தமிழர்கள் உலக மக்களின் இயல்போடு தானும் மாறிய விதம், அந்நியர்களின் ஊடுருவல்கள்,
அவர்களுக்கு துணைபோன நம்மவர்கள், சம உரிமையோடு வாழ்ந்த பெண்களின் மாண்பு குறைந்தது, என்பதை எல்லாம் சொல்லி…
அண்மைக்கால இழப்பாக ஒரு காலத்தில் தமிழகத்தின் கலை அடையாளமாக ஒலித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன வானொலி…
– என்று எல்லாவற்றையும் ஏக்கத்தோடு நினைத்துப் பார்க்கும் சூழலை ஏற்படுத்துகிறார் ராம்.
குணத்திலும் மாண்பிலும் நெறிகளிலும் சிறந்து விளங்கிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழன் ஒருவனுக்கு இன்றய தமிழனைப் பார்த்தால் என்ன அதிர்ச்சியும் கோபமும் ஏற்படும் என்பதை காட்டுவதோடு,
போகப் போக நடப்பதை – நடக்கப் போவதை அவன் எப்படி சமாளிக்கப் போகிறான் என்ற மறைமுகமான கேள்வியையும் படம் எழுப்புகிறது.
சினிமா என்பது கதை சொல்வது மட்டுமல்ல; அதையும் மீறி ஒன்றை உணர்த்துவதே. பார்க்கும் அவரவர்க்கும் தனித்தன்மையோடு அவரவர் பார்வைக்கு ஏற்ப புரிதலை உணர்வை ஏற்படுத்துவதே தனது படம் என்ற அதே நிலையில் இந்தப் படத்தையும் இயக்கி இருக்கிறார் ராம்.
இது வழக்கமான படமல்ல. வித்தியாசமான அனுபவம் தருகிற படம். அவரவர் சிந்தனைக்கு ஏற்ப அவரவர்க்குள் இறங்கும் படம்.
பொதுப் பார்வைக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கத்தக்கவர்களாக தோன்றும் நபர்கள் உள்ளுக்குள் எவ்வளவு உயரிய சிந்தனையை இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள் என்ற சொல்லலும் அருமை.
அமரத் தமிழனாக தோற்றம், ஆகிருதி எல்லாவற்றிலும் பொருந்தும் நிவின் பாலி அவருக்கே உரிய பணியில் நடித்திருக்கிறார்.
மலையாளம் என்பதே பழந்தமிழ் சொற்களும் சமஸ்கிருதமும்தான் என்று ஆன பிறகு அவரது பேச்சில் அடிக்கும் மலையாள வாடை கூட அவ்வளவாக உறுத்தவில்லை.
சூரி குடும்பத்துக்காக உழைத்துப் பிழைக்கிற இன்றைய மனநிலை மனிதர்களின் – அவர்களுக்கே தவறு என்று தெரியாத அவர்களுடைய சுயநலத்தை இயல்பாக வெளிப்படுத்தி நடிக்கிறார்.
அஞ்சலியை அவர் போக்கில் வளைய வரவிட்டு காட்சிகளை எடுத்துள்ளார் ராம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இந்த கதைக்கு உரிய எந்த தனித்தன்மையும் இல்லை. அதே நேரம் பெரிதாகக் குறையும் இல்லை.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு சிறப்பு. ரயில் பயணக் காட்சிகளில் ஒளிப்பதிவும் மதியின் படத்தொகுப்பும் கவனிக்க வைக்கிறது.
படத்தின் முடிவும் அந்தக் கடைசி காட்சியும் வேறு ஒரு தளத்துக்கு பார்வையாளர்களைக் கொண்டு போகிறது.
ஏழு கடல் ஏழு மலை… இடையிடையே சில பள்ளத்தாக்குகள் வந்தாலும் வழக்கத்துக்கு அப்பாற்பட்ட பொருள் பொதிந்த முயற்சி.
— சு. செந்தில் குமரன்