ஹிப் ஹாப் ஆதி, கீத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சார், பாபா பாஸ்கர், கருணாஸ் நடிப்பில் ஹிப்ஹாப் ஆதி கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி இசை அமைத்து இயக்கி இருக்கும் படம்.
பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ் அருண்குமார், அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் ஆகியோர் தயாரித்தது.
2017 ஆம் ஆண்டு, இதே குஷ்பு, ஹிப் ஹாப் ஆதி இணைவில் ‘மீசையை முறுக்கு’ முதல் பாகம் வந்தது.
அந்த ”முதல் பாகம் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியது; இந்த இந்தப் படம் இசையைப் பற்றி பேசும்” என்று பட வெளியீட்டுக்கு முன்பு ஆதி சொன்னார். பேசி இருக்கிறாரா? பார்ப்போம்.
1980 களில் – மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கர்நாடக சங்கீதத்தின் மூலம் இசை உலகை ஆண்டு கொண்டிருந்த சூழலில், பிரபல கர்நாடக வித்வான்களின் கச்சேரியை நடத்தும் ஒருவரின் (ஆடுகளம் நரேன்) மகன் (கருணாகரன்),
எதிர்பாராத விதமாக ஒரு கானா பாடல் கேஸட்டைக் கேட்டு அது பிடித்துப் போய் அதை பாடிய தாஸ் என்ற கானா பாடகரைக் (ஆதி – 1) கண்டுபிடித்து, மேல்சாதி மேட்டுக்குடி மக்கள் மட்டுமே பாடவும் பார்க்கவும் முடிகிற பெரிய கர்நாடக சங்கீத சபாவில் பாட வைக்க முயல, அது முறியடிக்கப்பட்டதோடு தாஸ் அவமானப்படுத்தப்படுகிறான்.
”என்றாவது ஒரு நாள் எங்கள் கானா இசையும் வெல்லும்” என்று சபதம் போடுகிறான்.
நிகழ் காலகட்டத்தில் பஸ் டிரைவர் ஒருவரின் (பாபா பாஸ்கர்) மகனான இளைஞன் (ஆதி – 2) தன் நண்பனோடு சேர்ந்து கானா பாடல்கள் பாடுவது, அதன் மூலம் திரை உலகில் இடம் பிடிப்பது என்று போராடுகிறான்.
மகன் எப்படியாவது முன்னேறி லைஃபில் செட்டில் ஆகவேண்டும் என்பது அப்பாவின் ஆசை
ஆனால், திரையுலகம் வாரிசுக் கலைஞர்களுக்கு மட்டும் இடம் கொடுத்து புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்பு தராமல் கதவை மூடுவதால் அவன் பாதிக்கப்படுகிறான்.
ஒரு டான்ஸ் மாஸ்டரை (கீர்த்திகா ஷர்மா) கரெக்ட் செய்யும் விஷயத்தில் அவனுக்கும் ஒரு தயாரிப்பாளர் மகனுக்கும் போட்டி வர, அவளோ லெஸ்பியன் என்பது தெரிய வருகிறது.
ஒரு நிலையில் அந்த தயாரிப்பாளர் மகனுக்கும் அவனுக்கும் இடையிலான சண்டையாக அது மாற, போலீஸ் ஸ்டேஷன் வரை போகிறது.
மகனின் நிலைமை பற்றி பஸ் டிரைவரான அப்பா கவலைப்படுகிறார். அப்போதுதான் அவரது கதை மகனுக்கு சொல்லப்படுகிறது.
எண்பதுகளில் கர்நாடக இசை சபாவில் கானா பாட்டை பாட முயன்ற தாஸின் மகன்தான் அந்த பஸ் டிரைவர்.
சபா வாசலில் தாஸை அவமானப்படுத்திய அது கர்நாடக இசை மேதையின் (நாசர்) பேத்தி (ரம்யா ரங்கநாதன்) தாஸின் மகனை (ஆதி-3) காதலித்து குடும்பத்தை மீறி கல்யாணம் செய்து கொண்டு அவனுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறாள்.
அதாவது தாஸ் தனது கானா பாட்டை சபா வாசல் வரை கொண்டு போக, தாஸின் மகன் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வரை கொண்டு போகிறான். எனினும் எதிர்பார்த்த இழப்பு ஒன்று ஏற்பட, அவனும் இசையை கை விட்டு மகனைக் காப்பாற்ற பஸ் டிரைவர் ஆகிறான்.
தங்களது பாரம்பரிய இசையான கானா இசைக்கு ஒரு அடையாளம் கிடைக்க, தனது தாத்தா, அப்பா இருவரும் போராடி தோற்ற நிலையில் ‘தன்னாலும் முடியாது; இசை உலகம் மேட்டுக் குடிக்குதான்’ என்ற விரக்தி மனநிலைக்கு இந்த ஜென்ஸீ இளைஞனும் வர,
ஒரு நிலையில் உத்வேகம் கிடைத்து, இதுவரை அதில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பதை உணர்ந்து, தெளிந்து போராடியபோது நடந்தது என்ன என்பதே படம்.
மண்ணின் இசை, மொழி, வாழ்வியல் இவை எல்லாம் கலை மற்றும் இசை வடிவங்களில் நம் மண்ணிலேயே புறக்கணிக்கப்பட்டு,
ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடி இசை, இந்த மண்ணுக்கு சம்மந்தமில்லாத மொழி, அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே அதிலும் முன்னுரிமை, திறமைக்கு மரியாதை இன்மை… இவற்றால் உண்மையான திறமையாளர்கள் ஒடுக்கப்படுவதையும்,
சென்னையின் பல வரலாற்று விஷயங்களின் ஆதாரமாக இருக்கும் கானா இசை எப்படி மேட்டுக்குடி மக்களால் இழிவானதாக காலகாலமாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதையும்,
சினிமாவில் வாரிசுகள் திணிக்கப்படுவது மூலம் புதியவர்கள் எப்படி திறமையை வெளிப்படுத்த முடியாமலேயே வீழ்ந்து விடுகிறார்கள் என்பதையும் பேசும் படம் இது. அதுதான் இந்தப் படத்தின் முதல் சிறப்பு.
ஜென்ஸீ இளைஞனாக மட்டுமே இல்லாமல் தாஸ், பஸ் டிரைவர் இவர்களின் பிளாஷ் பேக்குகளில் அந்த கேரக்டர்களாக, ஆதியே நடித்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் வெகுஜன ஆடியன்ஸை கொஞ்சம் குழப்பும் என்றாலும் புரியும்போது அட என்று ஆச்சர்யப்பட வைக்கும் அந்த உத்தி சிறப்பு.
சமூக நீதியோடு கானாவின் பக்கம் நின்று பேசும் வசனங்கள் அருமை.
இரண்டு தலைமுறையாக முடியாத ஒன்றை மூன்றாம் தலைமுறை இளைஞன் ஒரு சாதிப்பதோடு, தோற்றுப்போன தனது முந்தைய தலைமுறையும் ஜெயிக்க வைத்தான் என்பது உணர்வுரீதியாக அருமையாக இருக்கிறது.
”ஆரா பத்துக்கு பத்து…” பாடல் செம ஹிட்.
வழக்கம் போல உற்சாகமாக நடிக்கிறார் ஆதி.
கதாநாயகி கீத்திகா சர்மா கிக் ஏற்றுகிறார். ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சார் இருவரும் சிறப்பு.
கருணாஸ் வழக்கம் போல சிறப்பாக நடிக்கிறார். கிளைமாக்சில் ஒரு துளி கண்ணீர் காட்சியில் நடிப்பில் ஜொலிக்கிறார் பாபா பாஸ்கர்.
பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு பழுதில்லை. பென்னி ஆலிவரின் படத் தொகுப்பு சிறப்பாக இருக்கிறது. இல்லை என்றால் முதல் பாதியிலேயே மண்டை காய்ந்து இருக்கும்.
ஆம்.
சிறப்பாக ஆரம்பிக்கும் படம் அப்புறம் ரொம்ப நேரம் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சாதாரணமாக போகிறது.
ஷாரா, ஹர்ஷத் கான், யோகி பாபு இவர்கள் எல்லாம் தலா ஆளுக்கு ஒரே ஒரு முறை மட்டும் ஜோக் அடித்து விட்டு, ‘அவ்ளோதான் ஸ்டாக் இல்லை…‘ என்கிறார்கள்.
காமெடி என்பது எழுத்தில், சூழலில், சரியான நடிப்பில்தான் வரும். எதையாவது பேசி கோணங்கி சேட்டை செய்து ஹிஸ்டீரியா வந்த மாதிரி கத்துவது காமெடிக்கு உதவாது.
தேவை இல்லாத பரபரப்பு கூட்டி கத்தினால் ஆடியன்ஸுக்கு அதே பரபரப்பு வந்து விடாது. புகை போட்டு பழுக்க வைக்கப்படும் பழங்கள் ருசியாக இருக்காது.
படம் முழுக்க பாட்டுகள் இருந்தாலும் ‘ஆரா பத்துக்கு பத்து’ பாடலைத் தவிர மற்றவை எல்லாம் ஆதியின் பழைய ஜெராக்ஸ்கள்தான்.
இரண்டாம் பாதியில் எமோஷனலாக தூக்கி நிறுத்த வேண்டிய படத்தை ஜஸ்ட் லைக் தட் சுருட்டிக் கொண்டு வருகிறார்கள். லாஜிக், மேஜிக் இரண்டும் இல்லாமல் படம் போகிறது.
ரம்யா ரங்கநாதனின் வயிற்று மடிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் இருந்திருக்கலாம்.
இரண்டு தலைமுறை தோற்ற இடத்தில் மூன்றாம் தலைமுறை எப்படி ஜெயித்தது என்பதை சொல்லும் விதம் சிலிர்க்க வைக்க வேண்டாமா? உருப்படியாக ஒன்றும் இல்லை. படம் முடியப் போவுது என்பதால் ஜெயிக்கிறார் ஆதி. அம்புட்டுதான்.
நிஜத்தில் இன்னும் மக்கள் இசை, மண்ணின் இசை, மண்ணின் மொழி இவை இன்றும் புறக்கணிக்கப்படவே செய்யப்படுகின்றன.
மேட்டுக்குடி வர்க்கம் இன்னும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதை நேர்மையாக சொல்ல வேண்டும்.
மாறாக அந்த சமுதாய ஆட்களே வந்து தூக்கி ஜாக்கி போட்டு நிறுத்தினராகள் என்று பூசி மெழுகக் கூடாது. நேர்மையாகச் சொல்லும் சூழல் இல்லை என்றால் விட்டு விடுங்கள். அதற்கு ஒரு காலம் வரும். ஆனால், உண்மை வரலாற்றைத் தவறாகப் பிரதிபலிக்கக் கூடாது.
பொதுவாக ஹிப் ஹாப் ஆதி பாடல்களில் சரணம், பல்லவி என்று எல்லாம் இருக்காது. நேரடியாக வரிகள் வரும். இதை அவர் தனது வசதிக்கு செய்து கொண்டார். இது ஒன்றும் அவரது பெருமை அல்ல.
அவரால் முடிந்தது அவ்வளவுதான் என்றுதான் அதைப் பார்க்க வேண்டும். ஆனால், அதை என்னவோ ஹிப் ஹாப் ஆதியின் சாதனையாக புரட்சியாக சொல்லும் ஒரு காட்சியில், சுந்தர் சி கூட நடித்து இருக்கிறார்.
உண்மை அது அல்ல.
ஒரு பாடலில் தொகையறா, பல்லவி, அனுபல்லவி, சரணம், துண்டு பல்லவி, இறுதிப் பல்லவி இவை எல்லாம் வருவது ஒரு சிறந்த கலை வடிவம்.
தொகையறா என்பது ஒரு பாடல் முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பு, தாளக் கட்டுப்பாடு அல்லது பின்னணி இசை இல்லாமல் அல்லது குறைந்த இசையுடன் பாடகரின் குரலால் உணர்ச்சிபூர்வமாகப் பாடப்படும் அறிமுகப் பகுதி. பாடலின் சூழலை உணர்த்தும் ஒரு குட்டிப் பாடல் அது.
பாடலின் மையக் கருத்தை, ராகத்தை, தீர்மானிக்கும் – பல்லவி,
பல்லவியின் கருத்தைத் தொடர்ந்தோ அல்லது அதற்கு முரணாகவோ சற்று உயர்வான மெட்டில் புதிய வரிகளுடன், பொதுவாகப் பாடலில் ஒரு முறை மட்டுமே வரும் – அனுபல்லவி,
பாடலின் கதையை அல்லது கருத்தை மேலும் விரிவுபடுத்திச் சொல்லும் – சரணங்கள் (இரண்டு அல்லது மூன்று),
சரணத்துக்குப் பின் பல்லவியின் ஒரு பகுதியை உணர்வு இணைப்புக்காக மீண்டும் பாடுவது – துண்டு பல்லவி.
பாடலின் நிறைவாக அமைவது – இறுதிப் பல்லவி. இவை எல்லாம் சிறப்பான வடிவங்கள்.
சில சமயம் சரணத்தோடு துண்டு பல்லவியை இணைக்கும் இடத்தில் நடக்கும் மொழி விளையாட்டு சிறப்பான இலக்கியச் சுவை.
பல பாடல்களின் பல்லவியில் இருந்து வேறுபட்ட வரிகளோடு அமையும் இறுதிப் பல்லவி பாடலுக்கே சிகரமாக மாறும்.
அப்படி இருக்க, இதெல்லாம் ஹிப் ஹாப் ஆதி இசையில் இருக்காது என்பதற்காக அவை எல்லாம் மட்டமானவை என்பது போல ”சரணம்-ன்னா எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகனா?, பல்லவின்னா நடிகை சாய் பல்லவியா? அவங்க பாடுவாங்களா” என்று எல்லாம் கலாய்ப்பது சரியான விஷயம் இல்லை.
அவை ஒன்றும் மேட்டுக்குடி சங்கீதத்தின் வடிவங்கள் அல்ல. தமிழிசையின் வடிவங்களே இவை. தொகையறா என்பது தூய தமிழ்ச் சொல்.
மேட்டுக்குடி மக்களின் சங்கீத இசை உலக ஆதிக்கத்தை கண்டிக்கும் படத்தில் இப்படி ஒரு காட்சி என்பது இந்தப் படத்தை எடுத்தவர்களின் மேட்டுக்குடி மனப்பான்மையையே காட்டுகிறது.
பராமரிக்க சோம்பேறித்தனப்பட்டு பெரிய வீட்டை பூட்டிப் போட்டிருப்பது குடிசையில் உட்கார்ந்து கும்மி அடிப்பதற்கு வசதியாக இருக்கலாம், அது பெருமை அல்ல.
அது ஒன்னும் கெத்து இலை. அதுக்கு எல்லாம் நெஞ்சு நிமித்தக் கூடாது. வாயுப் பிடிப்பு வர வாய்ப்பு இருக்கு.
மொத்தத்தில் மீசையை முறுக்கு 2… முறுக்கும் அளவுக்கு முடி இல்ல.
— சு. செந்தில்குமரன்