சுதந்திர வேட்கைக்குத் தடை – ‘தியாக பூமி’ தந்த அனுபவம்!

தமிழில் திரைப்படங்கள் வெளியாவது கொண்டாட்டமாகப் பார்க்கப்பட்ட காலமொன்று உண்டு. கேளிக்கையாகவும், வேறு வழியில்லாதபோது கிடைக்கும் பொழுதுபோக்காகவும் கூட கருதப்பட்டதுண்டு. ஆனால், தொடக்க காலத்தில் திரைப்படம் பார்ப்பதென்பது ஒரு பிரமிப்பான அனுபவம்.

பேசாப் படங்களில் இருந்து திரைப்படக் கலையை விடுவிக்கும் வகையில், இம்பீரியல் பிலிம் கம்பெனி சார்பில் 1931ஆம் ஆண்டு காளிதாஸ் வெளியானது.

நாயகன் தெலுங்கில் பேச, நாயகி தமிழில் பேச, பெரும்பாலான பாத்திரங்கள் இந்தியில் பேசும் வகையில் இதில் உரையாடல் அமைந்திருந்தது.

சமூகப் படங்களின் அறிமுகம்!

மும்பையிலும் கொல்கத்தாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், 1934இல் சென்னையிலேயே தயாரிக்கப்பட்டது ஸ்ரீனிவாச கல்யாணம் எனும் திரைப்படம்.

நாடகத்தைப் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டதனால் திரைப்படங்களில் புராண, இதிகாசக் கதைகளே நிறைந்திருந்தன. 1935இல் தான் கௌசல்யா, டம்பாச்சாரி, மேனகா ஆகிய சமூகப் படங்கள் தமிழில் வெளியாகின.

இந்த வரிசையில் தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க சமூகப்படம் ‘தியாக பூமி’. 1930களில் மவுனப்பட இயக்குனர் ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இப்படத்தின் இயக்குனர் கே.சுப்பிரமணியம்.

பவளக்கொடி இவரது இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம். அதன்பின் நவீன சாரங்கதாரா, பாலயோகினி, சேவா சதனம் ஆகியவற்றை இயக்கினார். சேவா சதனம் படத்தின் நாயகி எஸ்.டி.சுப்புலட்சுமியை பின்னர் சுப்பிரமணியம் இரண்டாவதாக மணம் முடித்தார்.

பத்திரிகையில் வெளியான திரைக்கதை!

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வரிசையில் கே.சுப்பிரமணியத்தின் பெயர் இடம்பெறக் காரணம் ‘தியாக பூமி’. இப்படம் மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதன் பங்குதாரர்களில் ஒருவர் சுப்பிரமணியம்.

தியாகபூமி படத்தின் டைட்டில் கார்டில், தயாரிப்பு மற்றும் கதை குறித்த தகவல்களை அடுத்து, ‘ஆனந்த விகடனில் வெளியான கதை திரைக்கதையாக மாற்றப்பட்டுள்ளது’ என்று கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இப்படத்தின் திரைக்கதையை சுப்பிரமணியத்திடம் அளித்துவிட்டு, ஆனந்த விகடனில் படத்தின் ஸ்டில்களைக் கொண்டே தொடராக கல்கி வெளியிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

கல்கி எழுதிய பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, அலையோசை உள்ளிட்ட கதைகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் உருவாக்கப்பட்டன.

‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமெடுப்பதற்காக இயக்குனர் மகேந்திரனிடம் எம்ஜிஆர் திரைக்கதை எழுதச் சொன்னதாக வரலாறு உண்டு. தற்போது அக்கதை மணிரத்னத்தால் திரைப்படமாக உருப்பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த தகவல்களுக்கு இடையே, திரைப்படமாக எடுப்பதற்கென்றே கல்கி பிரத்யேகமாக எழுதிய கதை ‘தியாக பூமி’ என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.

கோடை, மழை, பனி, இளவேனில் ஆகிய நான்கு பாகங்களாக முறையே 11, 10, 16, 32 அத்தியாயங்களுடன் இக்கதை ஆனந்த விகடனில் வெளியானது. அப்போது அப்பத்திரிகையின் ஆசிரியராக கல்கி இருந்தார்.

இந்த தொடர் முடிந்த மறுவாரமே படம் தியேட்டரில் வெளியானது. ஆனந்த விகடனில் வெளியான கதை பெரும் புகழைப் பெற்றது போலவே திரைப்படமும் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது.

படக்குழுவின் பங்களிப்பு!

திரைக்கதைக்குப் பதிலாக ஸினாரியோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அந்த காலத்திய வழக்கம். இப்படத்தின் தொடக்கத்திலும் ஸினாரியோ மற்றும் டைரக்‌ஷன் கே.ஸுப்ரமண்யம் பி.ஏ., பி.எல். என்று குறிக்கப்பட்டுள்ளது.

இயக்குனரின் பெயருக்குப் பிறகு இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் ராஜா சாண்டோவைத் தொடர்ந்து, இந்த வழக்கத்தைத் தமிழில் சுப்பிரமணியமும் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுவே ஒரு படத்தில் இயக்குனர் குழு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை வெளிக்காட்டுகிறது.

இப்படத்தின் இசையமைப்பாளர்கள் பாபநாசம் சிவன், ராஜகோபாலய்யர். ஆனால் டைட்டில் கார்டில் இசையமைப்பு, இசை இயக்கம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இசை இயக்கம் என்ற பிரிவில் பாபநாசம் சிவன் மற்றும் மோதிபாபுவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பின்னணிப் பாடல்கள் என்ற பெயரில் வத்சலா மற்றும் டி.கே.பட்டம்மாள் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

எஸ்.டி.சுப்புலட்சுமியும் குழந்தை நட்சத்திரம் சரோஜாவும் கூட இப்படத்தில் பாடல் பாடியுள்ளனர். மொத்தம் 17 பாடல்கள் படத்தில் உள்ளன.

நல்ல காட்சியனுபவம்!

படத்தின் கதை ஏற்கனவே தெரிந்தாலும், திரைப்படமாகப் பார்ப்பதற்கான காட்சி அனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் சுப்பிரமணியம். பெரும்பாலான காட்சிகளில் கதாபாத்திரங்களோ, ஒளிப்பதிவுக் கருவியோ நகர்ந்து கொண்டிருப்பதன் மூலமாக நம் கண்கள் ஒரே இடத்தில் நிலை பெறுவதைத் தவிர்த்திருக்கிறார்.

சென்னையில் நதிக்கரை, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்விடம், முக்கியச் சாலைகள், காவல் நிலையம் மற்றும் அங்காடிகள் சில படத்தில் இடம்பெற்றுள்ளன.

அந்தக் காலகட்டத்தில் வெளியாகி பிரதி மிச்சமிருக்கும் அரிதான திரைப்படங்களுள் தியாக பூமியும் ஒன்று என்பதால் நிச்சயம் இது ஒரு ஆவணம் தான்.

கதையின் பரவல்!

தியாக பூமி படத்தின் தொடக்கத்தில் கதைச் சூழல், நிகழும் ஆண்டு போன்றவற்றைக் குறிப்பிட எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. “மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ” என்ற எழுத்துகளுடன் திரைக்கதை தொடங்குகிறது.

மழை பெய்து குடிசைகளுக்குள் வெள்ளம் புக… அந்த நேரத்தில் சம்பு சாஸ்திரியின் மகள் மழைக்கிடையே ஜன்னல் கதவை மூடிவிட்டு கூரையில் இருந்து நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைக்கிறாள். அந்த நேரத்தில் கோயிலொன்றில் பஜனை பாடிக் கொண்டிருக்கிறார் சம்பு.

ஊரில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமழைக்குப் பயந்து கோயிலுக்குள் ஒதுங்க, அங்கிருக்கும் உயர்சாதியினர் அவர்களை வெளியே விரட்டுகின்றனர். அவர்களைத் தன் வீட்டு மாட்டு கொட்டகையில் தங்கச் சொல்கிறார் சம்பு.

இதனால் நெடுங்கரை கிராமத்தினர், சாதிப் பிரஷ்டம் என்ற பெயரில் அவர் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்கின்றனர். அதே நேரத்தில் சம்புவின் மூத்த மனைவியின் மகள் சாவித்திரியின் கணவர் ஸ்ரீதரன் தீபாவளிக்கு வரவிருக்கும் தகவல் வருகிறது.

ஆனால், சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட காரணத்தால் சம்பு குடும்பத்தினரோடு உறவு பாராட்ட ஸ்ரீதரன் குடும்பத்தினர் மறுக்கின்றனர். அதே நேரத்தில் வேறு பெண்களோடு ஸ்ரீதரனுக்கு தொடர்பு ஏற்படுகிறது.

இதிலிருந்து விடுபட வழி தெரியாமல், மூன்று ஆண்டுகள் கழித்து ஸ்ரீதரன் தாயார் சாவித்திரியைச் சென்னைக்கு (மதராஸ்) அழைத்துச் செல்கிறார். கணவன் வீட்டில் அடிமைச் சேவகம் பார்க்கும் சாவித்திரி, தன் நிலையை விளக்கித் தந்தைக்குக் கடிதங்கள் எழுதுகிறார்.

அவரிடம் இருந்து பதில் வராத நிலையில், சாவித்திரி நெடுங்கரைக்குத் தனியாகச் செல்கிறார். அங்கு குடும்பத்தினர் யாரும் இல்லாததால் மனமுடைந்து சென்னை திரும்புகிறார்.

அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் சாவித்திரி, தனியாக இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாமல் அல்லலுறுகிறார். அப்போது, தன் கண்ணில் படும் சம்புவின் அருகே குழந்தையைப் போட்டுவிட்டுச் செல்கிறார்.

சென்னையிலுள்ள சாவடிக்குப்பம் பகுதியில் வசிக்கும் சம்பு, அந்த பெண் குழந்தைக்கு சாரு என்று பெயரிட்டு வளர்க்கிறார். ஆறு ஆண்டுகள் கழித்து, மும்பையில் இருந்து செல்வச் சீமாட்டி உமா ராணியாகத் திரும்புகிறார் சாவித்திரி.

அவர் தன் மகள் சாரு என்று அறிவதும், தந்தையிடம் பாசம் பாராட்டுவதும், இடையில் கணவர் என்று உரிமை கொண்டாடும் ஸ்ரீதரனை நீதிமன்றத்தில் சாவித்திரி சந்திப்பதும் மீதிக்கதை.

படத்தின் இறுதியில், சம்புவுக்கும் சாவித்திரிக்கும் இடையே தியாகம் குறித்த உரையாடல் உள்ளது.

அதில், “சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்யலாம் அப்பா. ஆனால் அடிமைத்தனத்துக்காகத் தியாகம் செய்ய மாட்டேன்” என்று சாவித்திரி சொல்லும் வசனம், சுதந்திரப் போராட்டம் மற்றும் மகாத்மா காந்தி இடம்பெற்ற காட்சிகளைக் காட்டிலும் வலுவாக ஒரு தலைமுறையின் வேட்கையை உணர்த்துகிறது.

கண்ணில் பட்ட விஷயங்கள்!

கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்பதனைத் தழுவி அமைக்கப்பட்ட ‘கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்’ பாடலைப் பாடும் ஒரு காட்சி படத்தில் உள்ளது. இது முடிவடைந்ததும், பாடி ஆடியதற்காகச் சாருவை அடிக்கிறார் தலைமையாசிரியை.

அப்போது, சாருவின் புத்தகப் பெட்டி ஆடுவதைக் காண்கிறார். அதனுள் ஒரு நாய்க்குட்டி இருக்கிறது. இதனைக் கண்டு அப்பெண்மணி கோபமுறுகையில், ‘இந்த நாய் மூஞ்சி உங்களைப் போலவே இருக்கறதா சொல்லுறா, அதுக்காகவாவது இது மேல இரக்கம் காட்டக் கூடாதா’ என்று சொல்லும் காட்சியைக் கண்டு மக்கள் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

நீண்டநாட்கள் கழித்துப் பார்க்கும்போது மகள் சாவித்திரியை சம்பு சாஸ்திரிக்கோ, அவரது வீட்டில் பணியாற்றிய நல்லானுக்கோ அடையாளம் தெரியவில்லை என்கிறது கல்கியின் திரைக்கதை.

திரைப்படங்களில் கதாநாயகர்கள் ஒட்டுமீசையுடனும் மருவுடனும் வேடமிட்டு நடித்தால் பிற பாத்திரங்களுக்கு அடையாளம் தெரியாது என்பவற்றின் ஆதி ஊற்றாக இது போன்ற காட்சிகளே இருந்திருக்க வேண்டும்.

படத்துக்குத் தடை!

தீண்டாமைக் கொடுமை, பெண் விடுதலை, மது விலக்கு, சுதந்திரப் போராட்டம் போன்ற விஷயங்கள் இப்படத்தில் நிறைந்துள்ளன. அந்த காலத்தில் பேசுபொருளாக இருந்தவற்றை நோக்கியே இப்படத்தின் கதையும் பயணிக்கிறது.

சுதந்திர வேட்கையுடன் படத்தின் திரைக்கதை அமைந்ததால் இப்படத்துக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. ஆனால், தடை விதிக்கப்படும் என்பதை முன்பே உணர்ந்து சென்னை கேசினோ அருகேயிருந்த கெயிட்டி தியேட்டரில் இலவசமாக மக்களுக்குத் திரையிடும் ஏற்பாட்டை சுப்பிரமணியம் மேற்கொண்டார்.

தடை விதிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் தடியடி நடத்தி தியேட்டரில் இருந்த கூட்டத்தை போலீசார் விரட்டினர் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவல்களுக்கு மாறாக, 1939இல் தியாக பூமி வெளியானபோது எந்த தணிக்கையும் அமல்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.

2005இல் தீராநதி பத்திரிகையில் வெளிவந்த அவரது ‘திருப்பட வேண்டிய பதிவுகள்’ எனும் கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பில் இருந்த காலத்தில் வெளியான தியாக பூமிக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும், அந்த அமைச்சரவை ராஜினாமா செய்தபிறகு பிரிட்டிஷ் ஆட்சி அமலில் இருந்த 1944இல் மீண்டும் தியாக பூமி ரிலீஸ் செய்யப்பட்டபோதுதான் அப்போதைய அரசு தடை விதித்தது என்றும் தியோடர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியாயினும், இந்தியா சுதந்திரமடைந்தபிறகு 1952இல்தான் இப்படத்தின் மீதான தடை விலக்கப்பட்டது. அப்போது, திரையிட்ட இடங்களிலெல்லாம் தியாக பூமி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இப்படம் குறித்த தகவல்கள் புத்தகங்களாகவும் வெளியிடப்பட்டன.

நட்சத்திரங்களின் தோற்றம்!

திரைப்படம் தமிழ் பேசத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் நட்சத்திர நடிகர்களாக தியாகராஜ பாகவதரும் பி.யு.சின்னப்பாவும் உருவெடுத்தனர். டி.பி.ராஜலட்சுமி போன்றவர்கள் பெண்கள் திரைப்படத்தை இயக்க முடியும் என்று நிரூபித்தனர்.

ஆங்கில, தமிழ் படைப்புகளையொட்டி திரைக்கதையை உருவாக்கும் நிபுணர் குழுக்கள் பெருகின. திரைப்படத்தை ஒரு வரையறுக்கப்பட்ட தொழிலாக அமைக்கும் வகையில் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ போன்ற நிறுவனங்கள் உருவாகின.

1940கள் முதல் 60களின் இறுதி வரை திரைப்பட அரங்கங்களை நிர்மாணிப்பது ஊற்றாகப் பெருக்கெடுத்தது. ஒரு கனவுத் தொழிற்சாலையாக உருமாறியது சினிமா.

திரைப்படத்தின் உருவாக்கம் முதல் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகான செயல்பாடுகள் வரை அனைத்துக்கும் இலக்கணம் வகுக்கப்பட்டன.

அந்த வகையில், தமிழ்த் திரையுலகம் குறிப்பிட்ட வடிவத்தையும் முக்கியத்துவத்தையும் பெறக் காரணமாக இருந்தவர் கே.சுப்பிரமணியம்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் சிங்கள மொழிகளில் இவரது படங்கள் வெளியாகியுள்ளன.

ஆனாலும், புனே திரைப்படக் கல்லூரி ஆவணக்காப்பகத்தில் மட்டுமே இன்று தியாக பூமி படத்தின் நெகட்டிவ் உள்ளது. இப்படைப்பின் ஒரு பிரதி கூட அவரது குடும்பத்தினரிடம் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு, புனேயில் இருந்து இப்படத்தின் திரைப்படப் பிரதி வரவழைக்கப்பட்டு சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் திரையிடப்பட்டது. அப்போது மாணவிகளிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.

தடம் பதிக்கும் சினிமாவுலகம்!

இன்பசாகரன் எனும் திரைப்படத்தை உருவாக்கியபோது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் அரங்கம் தீவிபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் அந்த அரங்கம் ஏலம் விடப்பட்டபோது, அதனை வாங்கி ஜெமினி ஸ்டூடியோவை எஸ்.எஸ்.வாசன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது.

சென்னையிலிருந்த பல ஸ்டூடியோக்கள் பெயர்க்கப்பட்டு, அங்கு பல்வேறு கட்டடங்கள் நிலை கொண்டுள்ளன. இந்த கால மாற்றத்தினூடே இப்போதும் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன என்பதே அந்த காலத்தில் அஸ்திவாரம் அமைத்தவர்கள் எத்தனை அழுத்தமாகத் தடம் பதித்துள்ளனர் என்பதைச் சொல்லிச் செல்கிறது!

படத்தின் பெயர்: தியாக பூமி, தயாரிப்பு: மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன், இயக்கம்: கே.சுப்பிரமணியம், கதை: கல்கி, ஒளிப்பதிவு: சைலேன் போஸ், ஆடியோகிராபி: பி.கே.விஸ்வநாத், கலை: கே.ஆர்.சர்மா, படத்தொகுப்பு: ஆர்.ராஜகோபால், இசையமைப்பு: பாபநாசம் சிவன் & ராஜகோபாலய்யர்

நடிப்பு: பாபநாசம் சிவன், கே.ஜே.மகாதேவன், எஸ்.டி.சுப்புலட்சுமி, கே.எஸ்.லலிதா, பேபி சரோஜா

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment