மலேசியா சென்று திரும்பியுள்ள கவிஞர் வைரமுத்து, கோலாலம்பூரில் உள்ள பிரபல தேநீர்க் கடைக்குச் சென்றுவந்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதிலிருந்து…
ஒரு மாறுபட்ட ஆளுமையைச் சந்திக்கப் போகிறோம் என்றார் டத்தோஶ்ரீ சரவணன். ‘முன்னாள் பிரதமரை நேற்று அறிமுகம் செய்தீர்கள்; இன்று யாரை?’ என்றேன்
‘ஒரு டீக்கடைக் காரரை’என்றார். பற்றிக்கொண்டது பரபரப்பு எனக்கு.
‘மணியன் டீஸ்டால்’ வாசலில் கார் நின்றது. நடைபாதைக் கடையில் தகரக் கூரையின் கீழே தேநீர் சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் தேயிலை மனிதரைச் சந்தித்தோம்.
உதவிக் கரங்களாய் உடன் வந்தார்கள் வி.பி.குமாரும், ராஜேந்திரனும்.
சற்றொப்ப அறுபது பேர்அமர்ந்திருந்தார்கள்; எங்களுக்கு இடமில்லை. உடைந்த நாற்காலிகளை ஒதுக்கிக் கொடுத்தார்கள். எங்களைக் கண்டதும் பரவசத்தோடு ஓடிவந்தார் மணியன்.
‘எத்துணை வயது?’
‘79’
‘தொழில் செய்வது?’
‘39 ஆண்டுகள்’
‘தொழில் ரகசியம்?’
‘தேயிலையில் இஞ்சியைச்
சண்டையில்லாத
கணவன் மனைவியைப்போல்
சரியாகக் கலப்பது’
‘ஒரு நாளுக்கு எத்தனை கோப்பை விற்பனை?’
‘1500’
‘ஒரு தேநீர் விலை?’
‘3 ரிங்கிட்’
தேநீர் என்ற ஒரு மந்திரத்தை வைத்து மலாய்க் காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்ற மூவினத்தையும் மொத்தமாய்க் கட்டிப்போட்டு மூலையில் உட்கார வைக்கிறார் மணியன். நாங்களும் பருகிப் பார்த்தோம்.
தேநீரை விழுங்கிய பிறகும் நாக்கில் எஞ்சி நிற்கிறது இஞ்சி.
இந்த வயதில் ஆறு மணி நேரம் தொடர்ந்து நின்றுகொண்டே தொழில் செய்கிறார் மணியன்.
எனக்குத் தோன்றியது ‘தமிழன் நிற்பான். உழைத்துப் பிழைக்கும் உறுதிகொண்ட தமிழன் எந்த நாட்டிலும் தோற்றுப்போக மாட்டான்.
முன்னாள் பிரதமரைச் சந்தித்த அதே மகிழ்ச்சி, இந்தத் தேநீர்க் கடைக்காரர் சந்திப்பிலும் குறையாமல் இருந்தது.
நன்றி டத்தோஶ்ரீ.
நள்ளிரவில் சென்னை வந்தேன். இன்னும் விடியவில்லை; இதை எழுதுகிறேன்.