தருண் பாஸ்கர் இயக்கி நடித்துள்ள தெலுங்கு படமான ‘கீடா கோலா’ கடந்த நவம்பர் மாதம் வெளியானது.
இந்தப் படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் செயற்கை தொழில்நுட்பம் மூலம் (AI) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் விவேக் சாகர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தங்களிடம் எந்த அனுமதியும் பெறமால் எஸ்.பி.பி. குரலை ‘கீடா கோலா’ படத்தில் பயன்படுத்தி உள்ளதால், படத் தயாரிப்பாளருக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.பி.பி சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனது அப்பா மறைவுக்குப் பிறகு தொழில்நுட்பம் மூலம் அவரது குரல் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், அதை எங்களுக்குத் தெரியாமலும், அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயம்.
வணிகச் சுரண்டலுக்காக ஒரு லெஜெண்டின் குரலை இப்படிப் பயன்படுத்தக் கூடாது. இந்த நிலை, வருங்காலத்திலும் தொடர்ந்தால், இசைத் துறையில் தங்களது குரலை சொத்தாக கருதும் பாடகர்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
முறையான அனுமதி பெறாமல் தனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதோடு, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், ராயல்டியில் குறிப்பிட்ட பங்கைக் கொடுக்க வேண்டும் என இசையமைப்பாளருக்கும் படத் தயாரிப்பாளருக்கும் சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் தருண் பாஸ்கரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.