சோகம் தீராத பின்னிரவுகளில் உங்களின் தனிமைக்கு துணையாக சில பாடல்களும், அந்தப் பாடலை பாடியவர்களின் குரல்கள் எப்போதும் இருக்கும்.
ஒருமுறை கேட்டால் ‘ரிபீட்’ மோடில் கேட்க தூண்டும் அந்தப் பாடல்களுக்கு சொந்தக்காரர்கள் கிட்டத்தட்ட உங்களின் சோகம் தீர்க்கும் மருத்துவர்கள்.
அவர்களின் பாடல்கள் எப்போதும் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
அப்படி ஒரு பாடகராக ஸ்ரேயா கோஷலை சொல்ல முடியும். அவரைத் தவிர்த்து, மெல்லிய குரலில் மனதை ஆட்கொள்ளும் பாடகர் சைந்தவி.
ஆம். இன்று பாடகி சைந்தவியின் பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் அவர் பாடிய சிறந்த பாடல்கள் குறித்தும், அவை ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பார்ப்போம்.
தனது 12-வது வயதிலேயே பாடகராக பரிணமித்தவர் சைந்தவி. அவரின் குரல் தனித்துவமிக்கது.
சைந்தவியின் முதல் திரைப்பாடல் ‘அந்நியன்’ படத்திலிருந்து தொடங்குகிறது.
அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அண்டங்காக்கா’ பாடலில் குழுவோடு இணைந்துப் பாடியிருப்பார். அடுத்து ‘தொட்டி ஜெயா’ படத்தில் ‘அச்சுவெல்லம்’, ‘ஏபிசிடி’ படத்தில் ‘மஞ்சள் முகமே’ பாடல்களைப் பாடினார்.
குறிப்பாக ‘சரவணா’ படத்தில் அவர் பாடியிருக்கும் ‘காதல் வந்தும் சொல்லாமல்’ பாடல் அட்டகாசம். காதலை சொல்ல முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கும் உணர்வுகளுக்கு குரல் கொடுத்திருப்பார்.
இதே சூழலில் சிக்கி தவிப்பவர்களுக்கு இந்தப் பாடல் காதல் மருந்து. ரிபீட் மோடுக்கு ஏற்ற பாடல். ஸ்ரீகாந்த் தேவா இசையில் மெலோடியான இப்பாடல் பலருக்கும் ஆல் டைம் ஃபேவரைட்.
இதையெல்லாம் தாண்டி அவரின் மிகச்சிறந்த பாடல்கள் எப்போதும் மனதுக்கு நெருக்கமான பாடல்களாக சிலவற்றை அடித்துச் சொல்ல முடியும்.
அப்படியான ஒரு பாடல் ‘தெய்வ திருமகள்’ படத்தில் இடம்பெற்ற ‘விழிகளில் ஒரு வானவில்’. வெல்லத்தை நாக்கில் வைத்தால் கரையும் வேகத்தைக் காட்டிலும் சீக்கிரமாக நினைவில் கரையும் சக்தி இந்தப் பாடலுக்கு உண்டு.
தனது குரலால் அப்படியொரு இனிமையை சேர்த்திருப்பார் சைந்தவி. வீடியோ காட்சிகள் சுற்றியும் மழை நனைந்தபடி அனுஷ்கா இருக்க, அந்த மழையின் ஈரத்தை பாடல் கேட்கும் நம்மிடம் கடத்திவிடுவார் சைந்தவி.
அடுத்து ‘உதயம் என்எச்4’ படத்தில் இடம்பெற்ற ‘யாரோ இவன்’ பாடலில் மிரட்டியிருப்பார். ஜி.வி.பிரகாஷ் இசையும், சைந்தவியின் குரலும் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கும்.
இணை பாடகரான ஜி.வி., ‘உன் காதலில் கரைகின்றவன்… உன் பார்வையில் உறைகின்றவன்’ என பாடியிருப்பார்.
உண்மையில் உன் குரலில் கரைகின்றவன் என பாடியிருந்தால் சாலப்பொருத்தம்.
“என் பெண்மையும் இளைப்பாறவே… உன் மார்பிலே இடம் போதுமே” வரிகளுக்கு உயிர் கொடுக்கும் குரல் சைந்தவியுடையது.
“அழுதால் உன் பார்வையும், அயர்ந்தால் உன் காதலும், அதிகாலையில் கூடலும் சோகம் தீர்க்கும் போதுமா” என ‘மயக்கம் என்ன’ படத்தில் இடம்பெற்ற ‘பிறைதேடும் இரவிலே’ பாடலில் நம் சோகத்தையெல்லாம் கரைத்திருப்பார்.
ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு இரவின் மடியில் இந்தப் பாடலை கேட்டுக்கொண்டிருக்க அங்கே தனது குரலால் தாலாட்டு பாடிக்கொண்டிருப்பார் சைந்தவி.
‘அனல் மேலே வாழ்கிறாய், நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே, மீசை வைத்த பிள்ளையே’ என்ற வரிகளும், சைந்தவியின் மெல்லிய குரலும் வாழ்வின் எல்லா சோகத்தையும் மறக்கடித்துவிடும்.
இறுதியாக ‘அசுரன்’ படத்தில் ‘எள்ளு வய பூக்களையே’ பாடலில் இடம்பெற்ற வலிகளின் வார்த்தைகளுக்கு தனது உருக்கமான குரலால் உயிரூட்டியிருப்பார்.
“கல்லாக நின்னாயோ, கால் நோக நின்னாயோ, கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு” என அவர் இழுத்துப் பாடும்போது முழு சோகமும் நமக்குள் ஆட்கொண்டிருக்கும்.
“அய்யோன்னு போனாலும், ஆகாசம் போனாலும், தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ” என தாயின் ஏக்கத்தையும், பிரிவின் வலியையும் கடத்தி கண்ணீர் சிந்த வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் சைந்தவி.
தமிழ் சினிமாவில் சிறந்த பாடகர்களுக்குள் ஒருவர் சைந்தவி. இன்று அவருடைய பிறந்த நாள்.
தனது குரலால் லட்சக்கணக்கானோரின் சோகத்துக்கு மருந்தாக இருக்கும் அவருக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து வெற்றிப் பாடல்களைப் பாட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நன்றி – நியூஸ் 18 தமிழ்நாடு