பண்பிலும் ‘மாணிக்க’மாக ஒளிர்ந்த பாடகர்!

விக்ரம், தனுஷ், சூர்யா, விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்.

பழம்பெரும் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையா பிள்ளையின் இளைய மகனான மாணிக்க விநாயகம், கணீர் என்ற குரலால் தனது பாடல்கள் மற்றும் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

மாணிக்க விநாயகம் பாடிய பாடல்கள்

தமிழ் சினிமாவில் சுமார் 800 பாடல்களைப் பாடி உள்ளார். இது தவிர, பக்திப் பாடல் ஆல்பங்கள், கிராமிய இசை ஆல்பங்கள் என 15,000 தனிப்பாடல்கள் பாடி வெளியிட்டுள்ளார்.

இவரின் ஐயப்ப பக்தி பாடல்கள் மிகவும் பிரபலம்.  

மாணிக்க விநாயகத்தின் ஹிட் பாடல்கள்

கண்ணுக்குள்ள கெளுத்தி – தில்
ஏல இமயமலை – தவசி
விடை கொடு – கன்னத்தில் முத்தமிட்டால்
அர்ஜுனரு வில்லு – கில்லி
வண்டி வண்டி – ஜெயம்
அருவா மீசை – தூள்
சின்ன வீடா வரட்டுமா – ஒற்றன்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு – இயற்கை
புண்ணாக்குன்னு சொன்னா – அருள்
கொக்கு பற பற – சந்திரமுகி
கட்டு கட்டு கீர கட்டு – திருப்பாச்சி
அய்யய்யோ – பருத்தி வீரன்
நானே இந்திரன் – சிங்கம்
தேரடி வீதியில் – ரன்
மன்னார்குடி கலகலக்க – சிவப்பதிகாரம்
சுப்பம்மா சுப்பம்மா – ரோஜா கூட்டம்

‘திருடா திருடி’ படத்தில் தனுஷிற்கு அப்பாவாக மிக அழகான, இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மாணிக்க விநாயகம், மீண்டும் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்திற்காக ஒரு பாடலை பாடினார்.

தொடர்ந்து, ஹீரோக்கள் பலருக்கு அப்பாவாக கேரக்டர் ரோல்களில் நடித்து பிரபலமானார்.

பின்னணிப் பாடகராக மட்டுமல்லாமல் ஏகப்பட்ட சினிமா படங்களில் நல்ல நடிகராக குணச்சித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து அசத்தி உள்ளார்.

தனுஷ், விஷால், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

திமிரு

2003-ம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷின் திருடா திருடி படத்திற்குப் பிறகு, கம்பீரம், பேரழகன், கிரி, அறிவுமணி, போஸ், கள்வனின் காதலி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகு, மாணிக்க விநாயகத்துக்கு விஷாலின் திமிரு படத்திலும் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருந்தது. ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வேட்டைக்காரன்

விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் கல்லூரி மாணவியின் அப்பாவாக நடித்திருப்பார். அவரிடம்தான் நடிகர் விஜய் ஆட்டோ வாடகைக்கு எடுத்து ஓட்டிக் கொண்டிருப்பார்.

விஜய்யின் தங்கை போல இருக்கும் அந்த கல்லூரி மாணவிக்கு ஒரு பிரச்சனை என்றதுமே விஜய் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் மகளுக்காக உருகும் அப்பாவாக நடித்திருப்பார்.

பின்னணிப் பாடகர், குணச்சித்திர நடிகர், நல்ல மனிதர் என பெயரெடுத்த மாணிக்க விநாயகம் இறுதியாக கடந்த 2017-ம் ஆண்டு ‘எண்பதெட்டு’ படத்தில் நடித்திருந்தார்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த மாணிக்க விநாயகமும் அவரது குரலும் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.

– எஸ்.மோகன ப்ரியா 

நன்றி: ஃபிலம் பீட்

Comments (0)
Add Comment