எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பொருந்தும் குரல் எப்படி வாய்த்தது?

பின்னணிப் பாடகர் டி.எம்.எஸ். கொடுத்த விளக்கம்

அதெப்படி சிவாஜிக்கு டி.எம்.எஸ். பாடினால் சிவாஜியே பாடியது போலவே இருக்கிறது, எம்.ஜி.ஆருக்குப் பாடினாலும் அதே உணர்வுதான் கிடைக்கிறது? இந்த அதிசயம் எப்படி சாத்தியமாகிறது?

டி.எம்.எஸ்ஸின் பதில்:

ஒவ்வொரு நடிகரும் எந்தவிதமான பாவத்துடன் பேசுவார்கள் என்பதைக் கவனித்துக் கொள்வேன். அதோடு, அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துக் கொள்வேன்.

பிறகு, அவர்களுடைய குரலுக்கு என்னுடைய குரல் பொருந்துவதுபோல பாடுவேன். சிலசமயம் ஆண்மைத்தனமான குரலில் பாடவேண்டும். சிலசமயம் சோகமாக, சிலசமயம் குதூகலமாக என குரலின் வடிவம் பாடலுக்கு, நடிகர்களுக்கு ஏற்றாற்போல மாறும்.

சும்மா மைக்கில் நின்று பாடிவிட்டுச் செல்லமுடியாது. மைக் முன்பு நடிக்கவேண்டும். பாடும்போது நான் எப்படி நடித்துக்காட்டுகிறேன் என்று பார்ப்பதற்காக நடிகர்கள் வருவார்கள்.

பிறகு நான் வெளிப்படுத்திய நடிப்பை அப்படியே படப்பிடிப்பில் செய்துவிடுவார்கள்.

பின்னணிப் பாடல் என்பது நடிப்பையும் சேர்த்ததுதான். கதாபாத்திரத்துக்கு என்னுடைய குரல் வலு சேர்ப்பதால் தான் நான் பாடவேண்டும் என்று சிவாஜியும் எம்.ஜி.ஆரும் விரும்புவார்கள் என்று பேட்டியளித்துள்ளார் டி.எம்.எஸ்.

உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் வந்ததே பாடலில், கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப் பாடுவதாகக் காட்சி அமைந்திருந்தது. இதற்காக ஸ்டூடியோவில் சிறிது தூரம் ஓடிவந்து அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

‘சாந்தி’ படத்தில் “யார் இந்த நிலவு” என்கிற பாடலைக் கேட்டு சிவாஜி அசந்து போயிருக்கிறார்.

டி.எம்.எஸ். பாடியதுபோல நடிக்கவேண்டும் என்றால் சிறிது பயிற்சி தேவை என்று டேப் ரிக்கார்டரை எடுத்துக்கொண்டு போய் தொடர்ச்சியாகப் பயிற்சி எடுத்தபிறகே படப்பிடிப்புக்கு வருவார்.

– நன்றி: முகநூல் பதிவு

 
Comments (0)
Add Comment