சபாபதி – காலத்தால் அழியாத நகைச்சுவைக் காவியம்!

நகைச்சுவை நடிகர்களின் பெரும் புகழைப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற கதையை எழுதி, நாயகனாக்குவது இன்றைய கண்டுபிடிப்பு அல்ல. அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது.

அப்படித் தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்தான் டி.ஆர். ராமச்சந்திரன். இவர் ஹீரோவாக நடித்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில், அன்று முன்னணி நாயகனாக வளர்ந்துவிட்ட சிவாஜி கணேசன் இரண்டாவது ஹீரோவாக நடித்தார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால் ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி. நகைச்சுவை நாயகனாக அடைந்த வெற்றியால், ராகினி மட்டுமல்ல, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி, ஸ்ரீரஞ்சனி எனப் பல முன்னணிக் கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை.

டி.ஆர். ராமச்சந்திரன் நாடகம் வழியாக சினிமாவுக்கு வந்தவர். 25 படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், அதன் பிறகு நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 30 ஆண்டு காலம் நிலையான செல்வாக்குடன் சாதனை படைத்தவர்.

40களில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த மேட்டுக்குடி இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர்.

முட்டாள்தனம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையுடன் குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கமும் கொஞ்சம் அம்மாஞ்சித்தனமும் கலந்த காதல் உணர்ச்சி, இவற்றுடன் தனது அபாரமான உடல்மொழியால் ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்த நகைச்சுவைக்கு டி. ஆர். ராமச்சந்திரன் சிறந்த உதாரணம்.

கதாநாயகிகள் தங்களது கண்களை நடிக்கப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, இவர் தனது உருண்டையான கண்களைப் பயன்படுத்தினார்.

இவர் உருட்டி விழிப்பதைப் பார்த்ததுமே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர் ஏற்றுக்கொண்ட பெரும்பாலான பாத்திரங்கள் மேட்டுக்குடி வாழ்வை நகைச்சுவையாக்கின.

50-க்கும் அதிகமான படங்களில் தனக்கான பாடல்களைப் பாடி நடித்த இவர், ரசனையுடன் பல படங்களைத் தயாரித்தும் நடித்திருக்கிறார்.

ஏ.வி. மெய்யப்பச் செட்டியார், பிரகதி பிக்சர்ஸ் கம்பெனியுடன் இணைந்து தயாரித்த ‘நந்தகுமார்’ படத்தில் நடிக்க வெங்கட்ராமன் நாடகக் குழுவில் இருந்த அத்தனை பேரையும் ஒப்பந்தம் செய்தார்.

இதுதான் ராமச்சந்திரன் நடித்த முதல் படம். இதில் சின்னக் கதாபாத்திரம் என்றாலும் தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை மெய்யப்பச் செட்டியாருக்குப் பிடித்துப் போய்விட்டது.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள்.

இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதி’யை அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார்.

நாடக வடிவில் இருந்ததைத் திரைக்கு மாற்றி எழுதும்படி ஏ.டி. கிருஷ்ணசாமியைக் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

மிகப் பெரும் வெற்றியை பெற்ற இந்தப் படம், ராமச்சந்திரனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் செல்லப் பிள்ளையானார் ராமச்சந்திரன்.

உலக போர் முடிந்த பிறகு சென்னைக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு ஏ.வி.எம் தயாரித்த பெரும்பாலான வெற்றிப் படங்களில் ராமச்சந்திரனுக்காவே ரகளையான காமெடி கதாபாத்திரங்கள் முக்கியவத்துடன் உருவாக்கப்பட்டன.

சபாபதி, ஒரு பணக்கார அரசியல்வாதி வீட்டுச் செல்லப்பிள்ளை. இவர்கள் வீட்டில் சபாபதி என்று ஒரு வேலைக்காரரும் இருக்கிறார்.

பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் சபாபதிக்கு, வேறு ஊரில் வாழும் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் சிவகாமி சுந்தரியைத் திருமணத்திற்குப் பேசி வைக்கிறார்கள்.

20 – 6 – 40 அன்று திருமணம் நடைபெறுகிறது. அதாவது பள்ளி இறுதித் தேர்வு முடிந்து திருமணம், இருவரும் அவரவர் ஊரில் வாழ்கிறார்கள்.

நடைபெற்ற தேர்வில் சிவகாமி தேர்ச்சி பெற, சபாபதி தோல்வி அடைகிறார். ஒரு காலகட்டத்தில் சிவகாமி, சபாபதி வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

அவர் உதவியால் தேர்வில் வெற்றியும் பெறுகிறார். ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்தாலும் சிவகாமி, கல்லூரியில் சேரவில்லை. இருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர இருப்பதாகச் சொல்கிறார்கள்.

வேலைக்காரர் சபாபதியும் அவரது மனைவி குண்டுமுத்து உதவியால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்கிறார். பெண்கள் படித்தால் வீடு நலம் பெரும் எனத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.

இளம் சபாபதியாக டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்து இருக்கிறார். நந்தகுமார் என்கிற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும், சபாபதிதான் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. இன்றும் அவரின் சிறந்த படம் எனப் பேசப்படுவது சபாபதிதான்.

பள்ளி இறுதி வகுப்பு மாணவராக இத்திரைப்படத்தில் வரும் இவர், தோற்றத்திலும் அவ்வாறே இருப்பது சிறப்பாக உள்ளது.

உடல் மொழி, உடல் அசைவுகளில் அவர் காட்டும் வேகம், ஆங்கிலம் பேசும் விதம், நடை உடை பாவனை என அனைத்திலும் கச்சிதமாகப் பொருந்தி விடுகிறார்.

பாலாறு பாலத்தில் ரயில் போவதைப் பாதி பகுதி குப் குப் மீதிப் பக்கம் கடகட என எழுதி வைத்து இருக்கிறார்.

ஒவ்வொரு குக்குப்பிற்கும், ஒவ்வொரு கடகடாவிற்கும் அவர் வாசிக்கும் அழகே அலாதிதான்.

  • மணி அமுதன்
 
Comments (0)
Add Comment