ரஜினிகாந்தை நெருங்கும் விஜய்!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு ‘தளபதி’ விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த மாதம் 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்தி நடிகர் சஞ்சய் தத், இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார்.

பிரமாதம் – சுமார் – மோசம் என கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை ‘லியோ’.

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முதல் வாரத்தில் உலக அளவில் ரூபாய் 461 கோடி வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரை பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகப்போவதில்லை. எனவே ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலான 600 கோடி ரூபாயை விஜயின் ‘லியோ’ தொட்டுவிடும் என தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.

இதனிடையே ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. பல நிபந்தனைகளுடன், விழாவுக்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

5 ஆயிரம் பேரை மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், ரசிகர்கள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, குறிப்பிட்ட நேரத்தில் விழாவை முடித்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள், இதில் அடக்கம்.

இது தவிர விஜய் மக்கள் இயக்கமும் தனியாக ஒரு நிபந்தனை விதித்தது. ‘ரசிகர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாஸ் உடன், விஜய் மக்கள் இயக்க உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் கொண்டு வந்து, நுழைவு வாயிலில் காட்ட வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டனர்.

லியோ டிரைலர் வெளியீட்டின் போது, ரோகிணி தியேட்டர் இருக்கைகள் நொறுக்கப்பட்டதால், ரசிகர்களுக்கு இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதாக, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment