மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தத்ரூபமாக தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமப்படுத்திய காமிரா மேதை என்று அழைக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், ரஜினியின் பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கர்ணன்.
காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக அளவு கௌபாய் படங்களை இயக்கியவர் கர்ணன்.
சண்டை, சாகசக் காட்சிகளைப் படமாக்குவதில் தனித் திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அமரர் எம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம்.
திரைப்படங்களில் காட்டும் குதிரை ஓட்டம், குதிரை சண்டை காட்சிகளை தத்ரூபமாக கையாளும் விதம் இவருக்கு மட்டுமே உரித்தான சிறப்பு. பல சாகச காட்சிகளை திறம்பட படம் எடுக்கும் திறனாளர்.
தங்க இரத்தினம் படத்தில் இரண்டு பக்கமும் கைக்கு எட்டாத அளவுக்கு அலைகள் வந்து மோதிக்கொள்ளும் காட்சி, பிரமிக்க வைக்கும்.
அதேபோல், மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்தின் போர்க்கள காட்சி, குதிரையேற்றக் காட்சிகள் இவர் படமாக்கியதுதான். எம்ஜிஆருக்குப் பிடித்த ஒளிப்பதிவாளரும் கூட.
தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்க ஆரம்பித்த பிறகு, கர்ணன் 20 குதிரைகள் 10 கார்களை சொந்தமாக வாங்கி சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை எடுத்தாராம்.
அதேபோல தண்ணீருக்கடியில் படம் பிடிப்பதில் அந்தக் காலத்திலேயே அசத்தியவர் இவர். கர்ணன் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் நீருக்கு அடியில் இருக்கும் பொருட்களை தெள்ளத்தெளிவாக நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டியவிதம் பிரமிக்க வைக்கும்.
ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன், இந்த படத்தில் இவரது ஒளிப்பதிவை கண்டு வியந்து ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் கர்ணனுக்கு வைர மோதிரம் பரிசாக அளித்தார்.
நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கர்ணன்தான்.
கர்ணன் தமிழக அரசின் 2003-ம் ஆண்டுக்கான ‘ராஜா சாண்டோ வர்த்தக விருது’ பெற்றவர்.
சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிவப்பு சூரியன் உள்ளிட்ட 150 படங்களுக்கு மேலாக ஒளிப்பதிவாளராகவும், 25 திரைப்படங்களில் இயக்குனராகவும் இருந்து முத்திரைப் பதித்துள்ளார்.