கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம், கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாக இருந்தது.
ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
கடன் பிரச்சினையால் படம் வெளியாகவில்லை. இது தொடர்பாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இசை வெளியீட்டு விழா நடந்த படத்தின் பெயர் ‘எமகாதகன்’. அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்திக், மனோஜ் ஆகியோர் நாயகன்கள். ரஷ்மிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ், அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ளனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரித்துள்ளார். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் ரிலீஸ் ஆக முடியாமல் உள்ளன.
பெரிய பட்ஜெட்டில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படம் கூட ரிலீசாக முடியாத அளவுக்குப் பொருளாதார பிரச்சினையில் சிக்கி உள்ளது.
அதற்கு காரணம் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு இருக்கும் 60 கோடி ரூபாய் கடன் பிரச்சினை.
திரைப்பட சங்கத்தில் இது தொடர்பாக புகார் உள்ளது. ஆண்டுக்கு 30 பெரியப் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
அந்தப் படங்களுக்கு மட்டும் தியேட்டர்காரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
பெரியப் படங்கள் வெளியாகாத நேரங்களின் தான் தியேட்டர்காரர்கள் சின்னப் படங்களின் ரிலீஸுக்கு இடம் கொடுக்கிறார்கள்.
படம் எடுக்க வருபவர்கள் ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் வாருங்கள்.
பெரிய படங்கள் 800 தியேட்டர்கள் வரை ஆக்கிரமித்து விடுவதால் சிறிய படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
தியேட்டர்காரர்களும் பெரியப் படங்களுக்கே ஆதரவு தருகிறார்கள். அவர்களுக்கு வருடத்தில் ஏற்படும் இழப்பை அதை வைத்துதான் சரி செய்கிறார்கள்.
சினிமாவுக்கு இன்று சிரமம் தலைக்கு மேல் இருக்கிறது.’ கே.ராஜன் தெரிவித்தார். சில படங்களைத் தயாரித்துள்ள கே.ராஜன், சில சினிமாக்களில் நடித்துள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி