தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கி குணச்சித்திர வேடம், வில்லன் மற்றும் காமெடி வேடங்களிலும் முத்திரை பதித்தவர் வினு சக்கரவர்த்தி.
சுமார் 1000 படங்கள் வரை நடித்துத் தன்னை ஒரு நடிகனாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை எழுதி இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குநராகவும் வலம் வந்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், படகா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதிகபட்சம் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார். 2007ல் வெளியான ‘முனி’ திரைப்படம் இவரது 1000மாவது படமாக அமைந்தது.
தமிழில் குரு சிஷ்யன், நாட்டாமை, அருணாச்சலம், மாப்பிள்ளை கவுண்டர், சிவப்பு நிலா, நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, அமர்க்களம், பாண்டவர் பூமி, தென்காசி பட்டனம், ஜெமினி, சுந்தரா டிராவல்ஸ், கிரி, முனி, தேசிங்கு ராஜா, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி, ராமராஜன், ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜூன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக 2014ல் ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் 900 படங்களும், மலையாளத்தில் 30 படங்களும், தெலுங்கில் 5 படங்களும், ஒரு படகா மொழிப் படத்திலும் நடித்துள்ளார்.
காவல்துறை முதல் நடிப்புத்துறை வரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த வினு சக்கரவர்த்தி, சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்து, சில காலங்கள் ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும், பின்பு கொஞ்ச நாட்கள் ரயில்வே துறையிலும் பணியாற்றி வந்தார்.
தனக்கு எழுத்தின் மீது இருந்த ஆர்வத்தால் கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராக கலைத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் திருப்பூர் மணி அவர்களால் பரசங்கடா கெண்டதிம்மா என்ற கன்னடப் படத்தில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார்.
பின்னர் அந்தப் படம்தான் தமிழில் ‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’ என்று ரீமேக்காகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன்பின் இவருடைய நடிப்பிற்கு ஏறுமுகம்தான். தென்னிந்திய அளவில் நான்கு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அசத்திய நாட்டாமை
வெறும் சந்தனத்தை மட்டும் உடலில் பூசிக் கொண்டும், துண்டை மேலே போட்டுக் கொண்டும் நாட்டாமை போல் வருகிற காஸ்டியூமை தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இவர்தான்.
இவரது ஆஜானுபாகுவான உடலமைப்பும் கம்பீரமான குரல் மற்றும் இவரது டயலாக் டெலிவரியின் போது வித்தியாசமான பாடி லாங்குவேஜும் என்றும் இவரை பற்றி தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்க காரணமாயிருக்கிறது.
இன்று வரையும் மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்-களின் முக்கியமான குரல்களில் ஒன்றாக வினுசக்கரவர்த்தி அவர்களின் குரல் இருந்து வருவதே அதற்கு சான்றாகும்.
மறைந்தாலும் மறையாத புகழ்
ஆந்திராவிலிருந்து விஜயலட்சுமி என்ற பெண்ணை அழைத்து வந்து தனது ‘வண்டிச் சக்கரம்’ படத்தின் மூலம் சில்க் ஆக அறிமுகம் செய்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கவர்ச்சி நடிகை அறிமுகம் செய்தது இவர்தான்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களே தங்களுடைய படத்தில் ஏதாவது ஒரு சீன் மட்டும் வினு சக்கரவர்த்தி அவர்கள் நடிக்க வேண்டுமென்று இயக்குநர்களிடம் கேட்கும் அளவிற்கு படங்கள் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் தனக்கான சீனில் தனது ட்ரேட்மார்க் முத்திரையைப் பதித்து விடுவார்.
அந்த அளவிற்கு அனைத்துவித எக்ஸ்பிரஸன்களையும் தனது ஸ்டைலில் வித்தியாசமாக நடித்துக் கலக்கியவர்.
மண்ணுலகை விட்டு அவர் மறைந்தாலும் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமா உலகில் என்றும் வாழ்வார்.
- நன்றி : One India