‘புதியபாதை’யில் சினிமாப் பயணத்தை தொடங்கிய பார்த்திபன், மசாலாப் படங்களோடு, ஹவுஸ்ஃபுல், ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற மாறுபட்ட படங்களையும் தமிழுக்கு அளித்தவர்.
இப்போது அவர், புதிய படம் ஒன்றை ஓசைப்படாமல் இயக்கி நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் குறித்த தகவல்களை அவர் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
‘துணிவு’ அஜித் போன்று, நீண்ட தாடி வளர்த்து, சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டியபடி, புன்னகையோடு, அந்த உரையாடலை ஆரம்பிக்கிறார் பார்த்திபன்.
அவரது உரையின் சுருக்கம் இது:
“நான் புதிய படத்தை இயக்கி வருகிறேன். படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு படத்தை எடுத்துவிடலாம்.
ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம்.
இந்தமுறை ‘நான் லீனியர்’ ‘எக்ஸ்பிரிமென்டல்’ என எந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது.
அந்தப் படத்துக்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய உள்ளன.
தொழிநுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே ‘அவ்வையார்’, ‘சந்திரலேகா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நான் எடுக்கும் படம் பிரமாண்டமான படம் அல்ல. ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். அதற்கான நிறைய விஎஃபெக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
முடிந்ததும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்” – என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.
-பாப்பாங்குளம் பாரதி.