கிரைம் நாவல் மன்னன் என்று புகழப்படும் ராஜேஷ்குமார் எழுதிய நாவலின் அடிப்படையில், தினகரன் எழுதி இயக்க, சிங்காரவேலன் தயாரிப்பில் பாலா ஹாசன், பவித்ரா ஜனனி, வினோதினி வைத்தியநாதன், அஞ்சலி ராவ், நடிப்பில் தயாராகி, நவம்பர் 28 முதல் Zee தமிழில் காணக் கிடைக்கும் வலைத்தொடர் ‘ரேகை’.
குளியல் அறையில் இளைஞன் ஒருவன் குளித்த நிலையில் செத்துக் கிடக்கிறான். குளியலறை உள்ளே தாழ்ப்பாள் போட்டிருக்கும் நிலையில் அது தற்கொலை என்று தெரிகிறது.
ஆனால், இறந்து கிடப்பவன் வெற்றி என்ற காவல் துணை ஆய்வாளரால் (பால ஹாசன்) ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசாக ஆக்கப்பட்ட நபர்.
குளியல் அறை இரும்புக் கதவின் உள்புறத் தாழ்ப்பாளைக் கதவின் வெளிப்பக்கம் காந்தம் வைத்து, நகர்த்தி திறந்து உள்ளே போய் பிளீச்சிங் பவுடரில் அமிலத்தைக் கொட்டி விஷப் புகை வர வைத்து அவனைக் கொன்றிருப்பதை வெற்றி கண்டுபிடிக்கிறார்.
இன்னொரு சமயம், ட்ரை சைக்கிளில் ஒருவன் ஒரு மனிதனின் உடலை அறுத்துத் துண்டுத் துண்டாக ரத்தம் வழிய வழியக் கொண்டு போவதையும் கண்டு பிடிக்கிறார்.
துரத்திப் போகையில் சாலை போடக் கொதிக்க வைத்து இருக்கும் கொதிக்கும் தாரில் விழுந்து அவன் இறக்கிறான்.
அடுத்தடுத்து சில கொலைகள்.
கை ரேகையைச் சோதித்தால் நான்கு பேருக்கும் ஒரே கை ரேகை.
நான்கு பேருக்கும் எப்படி ஒரே மாதிரி கை ரேகை இருக்கும்?
வெற்றிக்கும் ஸ்டேஷனில் உள்ள பெண் காவலருக்கும் (பவித்ரா ஜனனி) காதல்.
பெண் காவலரின் அக்கா கணவன் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வர, வெற்றி அந்த அக்கா கணவரை அறைந்து விடுகிறார்.
திருமணம் நின்று போகிறது. அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள்.
அந்த மாப்பிள்ளை நிச்சயம் முடிந்த உடனே பெண் காவலரிடம் குழைந்து நெளிந்து பழகுவதோடு, ஒரு கணவனுக்கு மனைவி பணிவிடை செய்வது போல நடந்து கொள்கிறான்.
ஒரு நிலையில் வெற்றிக்கு வேண்டிய அந்த ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நபர் உட்பட, கொல்லப்பட்ட அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்ற நிலையில், கை ரேகை மர்மம் என்ன? இறந்தவர்களுக்குள் என்ன தொடர்பு? கொலைகளை யார் செய்வது என்பதே இந்த ‘ரேகை’ வெப் சீரிஸ்.
ராஜேஷ்குமார் எழுதிய ‘உலகை விலை கேள்’ என்ற கிரைம் நாவலின் கதையை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் வெப் தொடர் இது.
ஆரம்பக் காட்சிகள் அப்படியே ராஜேஷ்குமார் நாவல் படிப்பது போல இருக்கிறது. வெட்டுப்பட்ட கை, கால் இவற்றின் டம்மியை நம்பும் அளவுக்கு சிறப்பாகச் செய்திருக்கிறார் கலை இயக்குநர்.
போஸ்ட் மார்ட்டம் செய்யும் பெண் டாக்டராக சிறப்பாக நடித்துள்ளார் வினோதினி.
பெண் போலீசாக நடித்திருக்கும் பவித்ரா ஜனனியின் குரல் இனிமையாக இருக்கும். (பிக்பாஸில் கேட்டது) ஆனால், இதில் அந்த இனிமை இல்லை.
விசாரிக்கப் போன இடத்தில் யாரும் எதிர்பாராமல் வெற்றியும் பெண் காவலரும் தாக்கப்படும் காட்சிகள். கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் சிறப்பு.
நிச்சயம் செய்யப்பட நபர், பெண் போலீசிடம் குழைவதும் வழிவதும் அதை வைத்து வெற்றியும் பெண் போலீசும் ஒருவரை ஒருவர் கடுப்பு ஏற்றக் கலாய்க்கும் காட்சிகளும் ஸோ நைஸ்.
உண்மையில் இந்த சீரிஸின் கிரைம் கதையைவிட இந்தக் கிண்டல் கதை நல்லா இருக்கு.
புதுசு புதுசாக கேரக்டர்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அடுத்தடுத்த காட்சிகளில் அவர்கள் பெயரைச் சொல்லி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். யார், என்ன என்று புரியாமல் குழம்பிப் போய் நிற்க வேண்டி இருக்கிறது.
தவிர மூணு காட்சிக்கு ஒரு முறை ”சி.சி.டி.வி ஃபுட்டேஜ் பாரு… நம்பர் டிரேஸ் பண்ணு. போன் நம்பர் டீடெய்ல் எடு…” என்று வருவது லாஜிக்கப்படி சரி என்றாலும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
கொலையாளி யார் என்பதில் இருக்கும் சஸ்பென்ஸ் கொலைக்கான காரணத்தில் இல்லை.
அந்த ஏரியாவில் கொஞ்சம் சிறப்பாக யோசித்து வேறு காரணம் சொல்லி இருக்கலாம்.
பெரிதாக எல்லாம் போர் அடிக்கவில்லை என்பது இதன் பலம்.
– சு.செந்தில் குமரன்