‘லால் சலாம்’ படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். த.ச. ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
‘பான் இந்தியா’ படமாக உருவாகும் ‘வேட்டையன்’ படத்தில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடந்த, கலைஞர் நினைவிடத் திறப்புவிழாவில் பங்கேற்ற ரஜினி, ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
போலீஸ் வேட மேக்கப்பில் ரஜினி, ஐதராபாத்தில் உள்ள படப்பிடிப்பு அரங்குக்கு வந்தபோது, அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதையடுத்து அவர் காரில் இருந்து இறங்கிப் படப்பிடிப்பு அரங்கத்தில் நுழைகிறார். அப்போது ரசிகர்களை பார்த்து கை அசைக்கிறார். ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.
போலீஸ் கெட்டப்பில் இருந்த ரஜினியை அவர்கள் போட்டோ எடுக்கிறார்கள். ரஜினி மறுப்பேதும் சொல்லவில்லை.
காவல்துறை அதிகாரி கெட்டப்பில் ரஜினிகாந்த் ஸ்டெய்லாக போஸ் கொடுத்தபடி செல்லும் வீடியோ, இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
‘வேட்டையன்’ படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மார்ச் முதல் வாரத்தில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து விடும். இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.
இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. இதனிடையே ரஜினிகாந்தை, பிரபல இந்தி தயாரிப்பாளரும் இயக்குநருமான சஜித் நாதியத்வாலா அண்மையில் சந்தித்து பேசியுள்ளார்.
அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில், நாதியத்வாலா வெளியிட்டுள்ளார். அவரும், ரஜினியும் புதிய படத்தில் இணையப் போவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது ‘பான் இந்தியா’ படமாக இருக்கும் என்றும் செய்திகள் உலா வருகின்றன.
– பாப்பாங்குளம் பாரதி.