மும்பையில் நிறைவடைந்த தலைவர்-170 படப்பிடிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு ‘தலைவர் 170’ என தற்காலிமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் ஆஸ்தான இசை அமைப்பாளராக சில ஆண்டுகளாக நீடிக்கும் அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் ஆரம்பமானது.

இதன் பின்னர் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, பகுதியில் உள்ள ஓடு தொழிற்சாலையில் ரஜினி பங்கேற்ற சண்டை காட்சிகள், ஒரு வாரத்துக்கும் மேலாக படமாக்கப்பட்டது.

மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பில் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருவரும் பங்கேற்று நடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு, ‘எங்கள் படத்தின் மும்பை படப்பிடிப்பு முடிந்து விட்டது’ என தெரிவித்துள்ளது. படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பி விட்டார்.

1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஹம்’ இந்திப்படத்தில் ரஜினியும், அமிதாப்பும் சேர்ந்து நடித்தார்கள். 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

‘ஹம்’ திரைப்படத்திற்காக படமாக்கப்பட்டு, படத்தின் நீளம் காரணமாக, அதில் இடம் பெறாத சில காட்சிகளை, தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி, ‘பாட்ஷா’வில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சேர்த்ததாக ஒரு தகவல் உண்டு.

33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி – அமிதாப் இணையும் படம், 46 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் ஷுட்டிங் நடக்கும் ரஜினி படம் என பல ‘சரித்திர’ சிறப்புகள் ‘தலைவர் 170’ மீதான எதிர் பார்ப்பை எகிற வைத்துள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment