‘நாயகன்’ படம் உருவாகிய விதம்!

மனம் திறக்கிறார், தயாரிப்பாளர் மகன்

மணிரத்னம் இயக்கத்தில் முதன்முதலில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம் ‘மௌனராகம்’.

அந்தப் படம் மூலம் ‘ஏ’ சென்டர்களில் அவர் ஓரளவு அறியப்பட்டார். எனினும் அவரை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நாயகன்’.

மணிரத்னம்–கமல்ஹாசன் கூட்டணி இணைந்த முதல்படம். விமர்சன ரீதியாக அமோக பாராட்டுகளை அள்ளிய நாயகன், வசூலையும் குவித்தது.

இந்தப் படத்தின் கதைக்களம் குறித்துப் படம் வெளிவந்த நாளில் இருந்து இன்று வரை ஓடிக் கொண்டிருக்கும், சர்ச்சை ஒன்று உண்டு.

இது பிரபல ஹாலிவுட் படமான ‘காட்ஃபாதர்’ படத்தின் ரீமேக் என்று ஒரு தரப்புச் சொல்லி வருகிறார்கள்,

இன்னொரு தரப்பு, மும்பையைக் கலக்கிய தமிழரான வரதராஜ முதலியார் வாழ்க்கை வரலாறுதான் நாயகன் என அடித்துச் சொல்கிறார்கள்.

இன்று வரை அந்த விவாதம் தொடர்கிறது. நிஜம் என்ன? நாயகன் படத்தைத் தயாரித்த முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் முக்தா ரவி உண்மை உடைக்கிறார்.

“எனது சகோதரர் முக்தா சுந்தர், அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து காட்ஃபாதர் படத்தைத் தமிழில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கினார்.

அந்தப் படத்துக்கு சிவாஜி கணேசன், கமல்ஹாசன், அமலா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இடையில், எங்களைச் சந்தித்த அனந்து, சிவாஜி நடித்தால் கமல்ஹாசனுக்கு செட் ஆகாது என்று சொன்னார். அதனால் சிவாஜி வேண்டாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால், கமல்ஹாசனையும் வயதான தோற்றத்தில் நடிக்க வைக்க முடியாது. அதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தோம்,

அந்த சமயத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கக் கமல் விரும்பினார். அவரிடம் மணிரத்னம் வரதராஜ முதலியார் கதையைச் சொன்னார். கதையைக் கேட்ட எனது அப்பா முக்தா சீனிவாசன், சில காட்சிகளைக் கூடுதலாகச் சொன்னார். அதனை மணிரத்னம் ஏற்றுக்கொண்டார்.

அமலா திடீரென படத்திலிருந்து ஒதுங்கியது, அந்தக் கேரக்டரில் சரண்யா நடித்தது தனிக்கதை.

நாயகன், வரதராஜ முதலியார் கதைதான் என்றாலும், கமல்ஹாசன் காட்ஃபாதர் படத்தில் வரும் டான் கேரக்டராகவே தன்னை நினைத்துக் கொண்டார். அதனால் தான் படத்தில் அவருக்கு டூயட் இல்லை. படமும் பெரிய வெற்றி பெற்றது” என்று மனம் திறந்தார், முக்தாவின் புத்திரன்.

– பாப்பாங்குளம் பாரதி.

 

 

Comments (0)
Add Comment