உலக நாயகன்’ கமல்ஹாசனின் கனவுப் படம் ‘மருத நாயகம்’ ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த மருதநாயகன் என்ற மன்னரைப் பற்றிய கதை அது.
கமல்ஹாசனே இயக்கி தயாரித்து மருதநாயகனாக நடிக்க, விஷ்ணு வர்த்தன், சத்யராஜ், நாசர், பசுபதி, அபிராமி போன்ற கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.
1997 ஆம் ஆண்டு இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் அமர்க்களமாக நடைபெற்றது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், படத்தின் பூஜைக்கு வந்திருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியும் விழாவில் பங்கேற்றார்.
படத்தின் மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், இந்தியத் திரை உலகை பிரமிப்பில் ஆழ்த்தியது.
ஆனால், நிதி நெருக்கடி காரணமாக ‘மருதநாயகம்’ படம் கைவிடப்பட்டது.
“படத்தின் பட்ஜெட் மிகவும் அதிகம் – யாராவது ஒரு தயாரிப்பாளர் பணம் போட முன் வந்தால் படம் மீண்டும் தொடங்கப்படும்” என்று கமல் அடிக்கடி கூறிவந்தார்.
இந்த படம் குறித்து கமல் இப்போது மனம் திறந்துள்ளார்.
சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக கோவா சென்றிருக்கிறார் கமல்ஹாசன்.
அப்போது மருதநாயகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு, “இப்போது தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறி விட்டது. எனவே இந்தக் காலகட்டத்தில் ‘மருதநாயகம்’ படம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்புகள் உள்ளன – அது, சாத்தியமாகலாம் என்பது என்னுடைய நம்பிக்கை” என்று தெரிவித்தார் கமல்ஹாசன்.
உலக நாயகனே! மருத நாயகனாகவும் உங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.