பாட்டு… தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசந்தம்… ராஜவீதிகளில் வலம்வரும் தேவதைகளின் தெவிட்டாத ஊர்வலம்… உடற்கூட்டுக்குள் சிறகடிக்கும் உயிர் பறவை… சிட்டுக்குருவியைப் போல துன்பங்களிலிருந்து விட்டு விடுதலையாகும் சுக அனுபவம்…
ஒலிநயம் உள்ள சொற்கோர்வைகளின் தொகுப்புதான் பாட்டு எனப்படுகிறது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் உள்ள நீண்ட செய்யுள்களை, பாடல் என வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்து வருகிறது… இறைவனையே இசையவைத்தது இசை என்பார்கள் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்கள்…
பாட்டுக்கு அவ்வளவு பலம் இருக்கிறது… கற்பனைகளின் கோட்டைகளை தொடும் தமிழின் வளம் இருக்கிறது… உயிரின் அத்தனை உணர்ச்சிக்குள்ளும் பயணம் செய்கிறது பாட்டு… அப்படியென்றால் அந்தப் பாடலை பாடுபவர்களை எப்படி அழைப்பது… பாட்டுடைத் தலைவர்கள், பாட்டுடைத் தலைவிகள், தமிழ் திரையுலகில்தான் எத்தனை எத்தனை பேர்…
தமிழ் திரையிசையை பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள்… ஆனால் அவர்களின் பெரும்பாலோனார் தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்கள்… தமிழையும் ‘கொல்லாதவர்கள்’… அப்படிப்பட்டவர்களின் வரிசையில், ஆச்சரியக்குறியாய், அடக்கத்தோடு அமர்ந்திருந்தவர் ஒருவர் உண்டு… அவர்தான் மலேசியா வாசுதேவன்…
பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என்ற பல பரிணாமங்கள் அவருக்குள் உண்டு… கேரள மாநிலம், பாலக்காட்டை பிறப்பிடமாகக் கொண்டது மலேசியா வாசுதேவன் குடும்பம்… வாழ்வாதாரம் தேடி இந்தக் குடும்பம் மலேசியாவுக்குச் சென்றது…
ரப்பர் தோட்டங்களில், தொழிலாளர் கூட்டங்களில் ஒன்றானது… அங்குதான் சட்டு நாயர் – அம்மலு தம்பதிக்கு 8-வது மகனாக பிறந்தார் வாசுதேவன்…
மலேசியாவில் தமிழ் குடும்பங்கள் நிறைய இருந்ததால், சிறுவயதிலிருந்தே வாசுவுக்கு தமிழோடு நல்ல பரிச்சயம் ஏற்பட்டது… நன்றாக பாடும் திறமையும் இருந்ததால், அங்கு நாடகக் குழுக்களில் இணைந்து, நடித்தும், பாடியும் தனது கலை ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் வாசு…
கத்திரிக்காய் முற்றினால், கடைத்தெருவுக்கு வருவதுபோல, வாசுவின் கலை ஆர்வம் மலேசியாவிலிருந்து அவரை சென்னைக்கு குடிபெயர வைத்தது…
வழக்கம்போல், வாய்ப்புகள் தேடி அலைச்சல், வாய்ப்புகள் கிடைக்காமல் மன உளைச்சல்… ஒருவழியாக ‘டெல்லி டூ மெட்ராஸ்’ படத்தில், ‘பாலு விக்கிற பத்தம்மா… உன் பாலு ரொம்ப சுத்தம்மா..’ என்ற பாடல் பாட வாய்ப்பு கிடைத்து… இதுதான், வாசு பாடிய முதல் பாடல்…
பாட்டுக் கச்சேரி மேடை ஒன்றில், வாசு பாடிய பாடலைக் கேட்ட, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், ‘பாரத விலாஸ்’ படத்தில், ‘இந்திய நாடு என் வீடு’ என்ற பாடலில் ஒரு சிறு பகுதியைப் பாட வாய்ப்பளித்தார்…
‘குமாஸ்தாவின் மகள்’ படத்தில், குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பாடிய, ‘காலம் செய்யும் விளையாட்டு, இது கண்ணாம்மூச்சி விளையாட்டு..’ என்ற பாடல், வாசுதேவனின் முகவரியை இசையமைப்பாளர்களுக்கு வாசித்துக் காட்டியது…
இசைஞானி இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களோடு ஏற்பட்ட நீண்ட நாள் தொடர்பு, பின்னணி பாடகர் வரிசையில் வாசுவின் பெயரை அழுத்தமாக உச்சரிக்க வைத்தது…
’16 வயதினிலே’ படத்தில், ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’ என்ற பாடல், பாடகர் வாசுவை வானத்தில் பறக்க விட்டது… தொடர்ந்து 8 ஆயிரம் பாடல்கள்…
‘ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே’, ‘நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்’, ‘நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு’, ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ போன்ற எத்தனையோ முத்துக்கள் மலேசியா வாசுதேவனின் குரலில் ரசிகர்களின் ரசனை எனும் கழுத்தில் மாலையாய் சூட்டப்பட்டுள்ளது.
தமிழை அழகாக உச்சரித்த பாடகர்… வார்த்தைகளுக்கு வலிக்காமல், அதற்குள் வனப்பை புகுத்திய பாடகர்… ரசிகர்களோடு நட்பு வளர்த்துக் கொண்ட குரல் என வாசுவின் புகழ், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது…
எல்லா நடிகர்களின் குரலோடும் ஒத்துப்போகும் வாசுவின் குரல்… நடிகர் திலகத்துக்கு, டி.எம்.எஸ். தான் ஒத்துவருவார் என்ற கருத்தியலையும் களைந்தவர் வாசு… ‘பூங்காத்து திரும்புமா…’ பாடல், நடிகர் திலகத்தை ஒவ்வொரு மனசுக்குள்ளும் வருகைதர வைத்து விடும்…
‘சாமந்திப்பூ, ‘பாக்கு வெத்தலை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள மலேசியா வாசுதேவன், பல திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்…
பாட்டு என்ற ‘தங்க ரதத்தில் மஞ்சள் நிலவாய்..’ ஒளிர்ந்தவர் மலேசியா வாசுதேவன்
பாட்டு… உறங்கிக் கொண்டிருக்கும் பல உணர்வுகளை எழுப்பிவிடுகிறது. பாதி இரவில் கண்விழிப்பதும், பாட்டுக் கேட்டுக்கொண்டே விடியும் வரை உறங்காதிருப்பதும் ஒரு சுகமான அனுபவம்…
இந்த சுகமான அனுபவத்தை, எப்போதும் சுதந்திரமாக அனுபவிக்கலாம், மலேசியா வாசுதேவன் என்ற மாபெரும் கலைஞனின் குரலில்…
(பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் நினைவு நாள் (பிப்ரவரி 20, 2011) இன்று)
✍️ *லாரன்ஸ் விஜயன்*