ஜனவரி 10-ல் ‘பராசக்தி’ வெளியாவதே மிகச் சரி!

‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று வெங்கட்பிரபு இயக்கிய ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் சிவகார்த்திகேயனைத் தனது இடத்தில் வைத்து அழகு பார்த்தார் விஜய்.

அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்குவதால், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிற ‘ஜனநாயகன்’ தான் தனது கடைசிப்படம் என்று அறிவித்தார்.

அப்படிப்பட்ட விஜய் நடித்த ‘ஜனநாயகனு’க்குப் போட்டியாக சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி வெளியாவது சரியா?

இப்படியான விவாதங்கள் சமூகவலைதளங்களிலும் பொதுவெளியிலும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன.

அவற்றின் பின்னணியில் ‘வணிகக் கணக்கு வழக்கு’ இருக்கிறது. சரி, இருந்துவிட்டுப் போகட்டும்.

வரும் 9-ம் தேதியன்று ‘ஜனநாயகன்’ வெளியாகிறதென்றால், அதற்கடுத்த நாள் ‘பராசக்தி’ வெளியாகிறது. இது சரியானதுதானா? இந்தக் கேள்வி பொதுவான சில ரசிகர்களிடமும் உள்ளது.

பராசக்தி’யின் பராக்கிரமம்!

1952, அக்டோபர் 17-ல் வெளியானது நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு.கருணாநிதியின் கதை வசனத்தில், சிவாஜி கணேசன் நாயகனாக அறிமுகமான ‘பராசக்தி’.

அந்தப் படத்தின் டைட்டிலை, தான் நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்திற்கு முதலில் சூட்டினார் விஜய் ஆண்டனி.

ஆனால், பராசக்திக்கு நிதியுதவி செய்த ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் மெய்யப்பச் செட்டியார் வாரிசுகளிடம் அந்த டைட்டிலுக்கான உரிமை இருந்தது. அவர்கள் தரப்பில் அந்த தலைப்பைத் தர விரும்பவில்லை என்று ஒரு பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கிற படத்திற்கு ‘பராசக்தி’ பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் இரண்டு படங்களும் ஒரே டைட்டிலை அறிவித்து, பின்னர் தனது படத்தலைப்பை ‘சக்தித் திருமகன்’ என விஜய் ஆண்டனி மாற்றிக்கொண்டது தனிக்கதை.

1965-ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டது பராசக்தி திரைப்படம் எனத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின.

அதற்கேற்றாற் போல, அந்தக் காலக்கட்டத்து சிகையலங்காரம், உடைகளுடன் நடிகர், நடிகையரின் ஸ்டில்கள் ஊடகங்களில் கசிந்தன. பின்னர், அப்படத்தோடு சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பேட்டிகளும் அதனை உறுதிப்படுத்தின.

1937, 1948, 1965 என வெவ்வேறு காலக்கட்டங்களில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

உண்மையைச் சொன்னால், 1937-க்கு முன்னரே ‘தனித்தமிழ் இயக்கம்’ உள்ளிட்ட பல முன்னெடுப்புகள் தமிழ் மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. அந்த முயற்சிகளனைத்துமே இன்னொரு மொழியின் திணிப்பை, எதேச்சதிகாரத்தை எதிர்த்திருக்கின்றன.

அந்தச் சூழல்கள் தான், நமது முன்னேர்களில் சிலர் ‘கட்டாய இந்தி’யை எதிர்த்துப் போர் செய்யக் காரணமாகியிருக்கிறது.

அவர்களது வழியில், இன்றும் தமிழ் மண்ணைச் சமைத்துக் கொண்டிருக்கின்றனர் சான்றோர் பலர். அவர்கள் பெருமிதப்படும்படியாக ‘பராசக்தி’ இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது, சமீபத்தில் வெளியான அப்படத்தின் ட்ரெய்லர்.

கமர்ஷியல் படத்திற்குரிய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருக்கும் என்றபோதும், அதையும் மீறி அப்படம் பேசுகிற அரசியல் ‘வீச்சு’ கொண்டதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

சரி, இப்போது வரும் ஜனவரி 10-ல் இப்படம் வெளியாவது எப்படிப் பொருத்தமானதாக இருக்கும் என்று பார்க்கலாம்.

உலக இந்தி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ‘உலக இந்தி தினம்’ ஜனவரி 10 அன்று கொண்டாடப்படுகிறது. 1975-ம் ஆண்டு அந்த நாளன்று நாக்பூரில் முதல் உலக இந்தி மாநாடு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது. அதனை நினைவூட்டும் வகையில், இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2006-ம் ஆண்டு ‘உலக இந்தி தின’க் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார் அந்த காலக்கட்டத்தில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்.

உலக அளவில் இந்தியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தும் வகையில், சர்வதேச அளவில் அதன் பெருமைகளைப் பேசுகிற வகையில் இது கொண்டாடப்படுகிறது.

கல்வி, ஊடகம், சர்வதேச உறவுகள் எனப் பல துறைகளை வலுப்படுத்துவதில் இந்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இத்தினம் பின்பற்றப்படுகிறது.

அதற்கேற்ப உலகம் முழுக்கவிருக்கும் இந்தியத் தூதரகங்களில் இத்தினம் முன்னெடுக்கப்படுகிறது.

‘இந்தி: பாரம்பரிய அறிவையும் செயற்கை நுண்ணறிவையும் இணைப்பது’ என்பது 2026-ம் ஆண்டுக்கான உலக இந்தி தினத்தின் கருப்பொருள்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 14 அன்று ‘தேசிய இந்தி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு நிர்ணய சபையால், நாட்டின் அலுவல் மொழியாக இந்தி தெரிவுசெய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் இது பின்பற்றப்படுகிறது. ஆதலால், இரண்டையும் ஒன்றென எண்ணிக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஆக, இந்தியின் பெருமைகளைப் பேசும்விதமாக ‘உலக இந்தி தினம்’ கொண்டாடுகிறபோது ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

அதாவது, ஒரு மொழியைக் கொண்டாடுகிற நாளன்று, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் அம்மொழி திணிக்கப்பட்டதை எதிர்த்து நிகழ்ந்த போராட்டங்களைப் பேசுவதாக உள்ள ஒரு காட்சிப்புனைவு திரையிடப்படுகிறது.

இது ஒரு அழகிய முரண் மட்டுமல்ல; பெரும் கவன ஈர்ப்புக்கான வழியும்கூட. அந்த வகையில், ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10 அன்று வெளியாவதே மிகச் சரி.

நிச்சயமாக, ‘பராசக்தி’ படம் தமிழில் தயாரான பீரியட் படங்களுக்கே உரித்தான நிறை, குறைகளுடன் இருக்கும். அதனை மீறித் திரையோடு ரசிகர்களை எந்தளவுக்கு ஒன்ற வைக்கிறது என்பது அதன் வெற்றியைத் தீர்மானிக்கும்.

அனைத்துக்கும் மேலாக, அதன் உள்ளடக்கத்தில் இருக்கிற அரசியல் அணுஅணுவாகச் சிலாகிக்கப்படும், விமர்சிக்கப்படும், எதிர்ப்புகளையும் வெறுப்பையும் சம்பாதிக்கும், இன்னபிறவற்றுக்கு வழியமைத்துத் தரும்.

அவ்வனைத்தும் நேர்த்தியாக வெளிப்படும் அளவுக்குப் படமும் தரமாக இருக்க வேண்டுமே’ என்பதுவே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஜனவரி 10 அன்று ‘பராசக்தி’ அதற்கான பதிலைத் தரட்டும்..!

– சரோ

Comments (0)
Add Comment