தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குபேரா’.
தனுஷின் 51-வது திரைப்படமான இந்தப் படம், ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பான் இந்தியா நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான நாகர்ஜுனா முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூன் – 1) நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழ்ப் படங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை என்பது வருத்தமே. தமிழில் நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நாயாகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடிக்க விருப்பம்.
எனக்குத் தமிழ், தெலுங்கு, இந்தி என மொழி வித்தியாசம் கிடையாது. அதுபோல, பான் இந்தியா, ரீஜினல் என்ற வித்தியாசத்தையும் பார்க்கமாட்டேன். கதை நன்றாக இருந்தால் நடிப்பேன்” என்றார்.